மலர்களே மலர்களே... (5) - பூவுக்கு நிறம் அடித்தது யார்?
மலர்களே மலர்களே... (5) - பூவுக்கு நிறம் அடித்தது யார்?
PUBLISHED ON : ஜூலை 10, 2017
சிவப்பு மலரின் நிறத்துக்கும், ஊதா மலரின் நிறத்துக்கும், அதன் பூவிதழ்களில் உள்ள 'பிக்மென்ட்' (Pigment) எனப்படும் நிறமிகளே காரணம். மனதைக் கொள்ளைகொள்ளும் சங்கு புஷ்பத்தை எடுத்துக்கொள்வோம். அதன் வடிவம் மட்டுமல்ல; அதன் ஊதா நிறமும் கொள்ளை அழகு. எல்லா நிறமும் கலந்த சூரிய வெள்ளை ஒளி அந்த பூவில் பட்டுத்தெறிக்கும்போது, ஊதா பூவில் உள்ள நிறமி, ஊதா நிறம் தவிர்த்த எல்லா நிறத்தையும் உறிஞ்சிக் கொண்டுவிடும். ஊதா நிறம் மட்டுமே பூவிலிருந்து வெளிப்பட்டு பிரதிபலிக்கும். அதனால்தான் அந்த சங்கு புஷ்பம், ஊதா நிறத்தில் நமக்கு காட்சி அளிக்கிறது.
மல்லிகை அல்லது நந்தியாவட்டை பூ வெள்ளை நிறத்தில் காட்சி தருவதற்கு நிறமி அல்ல காரணம். அதன் பூவிதழ்களில் சிறுசிறு காற்றுப் பைகள் இருக்கும். இந்தக் காற்றுப் பைகள் அனைத்து நிற ஒளியையும் சற்றேறக்குறைய அதே போலப் பிரதிபலிக்கும். எனவேதான், அந்தப் பூக்கள் வெள்ளை நிறத்தில் காட்சி தருகின்றன. இதே இயற்பியல் பண்பின் தொடர்ச்சியாகவே பனிப் பொழிவு, மேகம் போன்றவை வெண்மை நிறத்தில் காட்சி தருகின்றன.
பல்வேறு வகை வெண்மை நிறப் பூக்களின் பூ இதழ்களில் செல்களின் அமைப்பைப் பொறுத்து, மங்கிய வெண்மை அல்லது வெல்வெட்டு வெண்மை அல்லது பளிச்சிடும் வெண்மைச் சாயல் இருக்கும். பூ இதழை நசுக்கி காற்றுக் குமிழிகளை நீக்கிவிட்டால் வெள்ளை வெளேர் சாயல் போய் சற்றே கறுமையாக நிறம் தரும்.
நீலம், பச்சை, இளஞ்சிவப்பு என, பல வண்ணங்களில் பூக்கள் இருந்தாலும், கருமை நிறப் பூ அரிதிலும் அரிது. மெக்சிகோ பகுதியில் வளரும் 'மரணப்பூ' (Flower of Death - ஃப்ளவர் ஆஃப் டெத்) என அழைக்கப்படும், 'லிசந்திஸ் நிக்ரேஸ்சன்ஸ்' (Lisianthius Nigrescens) எனும் தாவரம், கருப்பு நிறப் பூவை பூக்கிறது. வெல்வெட்டு கருப்பு நிறத்தில், நாதஸ்வரம் போல நீண்டு பூக்கும் இந்த பூ இதழில் ஊதா முதற்கொண்டு சிவப்பு நிறம் வரை, அனைத்து நிறங்களையும் வேகவேகமாக உறிஞ்சிக் கொள்ளும் நிறமிகள் இருக்கின்றன. எல்லா நிறமும் உறிஞ்சிய பின் மிஞ்சுவது ஒன்றுமில்லை அல்லவா? அதனால்தான் கருப்பு நிறத்தில் அந்தப் பூ காட்சி தருகிறது.
'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு' என இந்தப் பூ கன்னங்கரேல் என்று மலர்வது ஏன்? இந்தப் பூவில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சி எவை என்பதெல்லாம் இன்னமும் மர்மமே.