sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மகிழ்ச்சி தரும் மணம்

/

மகிழ்ச்சி தரும் மணம்

மகிழ்ச்சி தரும் மணம்

மகிழ்ச்சி தரும் மணம்


PUBLISHED ON : ஜூலை 10, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 10, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகிழ மரம்

ஆங்கிலப் பெயர்: ஸ்பானிஷ் செர்ரி (Spanish Cherry)

தாவரவியல் பெயர்: 'மிமுசோப்ஸ் இலாங்கி' (Mimusops Elengi)

வேறு மொழிப் பெயர்கள்: முல்சாரி (இந்தி), பொகடா (தெலுங்கு), இலஞ்சி (மலையாளம்), ரஞ்சல் (கன்னடம்), பகுனா (சமஸ்கிருதம்)

இளம்பச்சை நிறத்தில் அடர்த்தியான இலைகளையும், மணம் மிக்க சக்கர வடிவிலான மலர்களையும் கொண்டது மகிழ மரம். 'சபோடாசியே' (Sapotaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரம் 16 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் தோல் போன்று கடினமானவை; பளபளப்பாக இருக்கும். தொங்கும் கொத்துகளாக மலர்கள் மலர்கின்றன. மலர்களின் இதழ்கள் மிகச் சிறியவை. இப்பூக்களை நாரில் தொடுக்க முடியாது. ஊசி நூலில் கோத்து மாலையாகச் செய்வார்கள். மகிழம்பூ பதினைந்து, இருபது நாட்கள் வரை உலராமல் இருக்கும். வாடினாலும் வாசனையுடன் இருக்கும்.

ஒரு மரத்தில் ஆயிரக்கணக்கான மலர்கள் மலரும். மலர்ந்த மலர்கள் உதிர்ந்துவிடும். அல்லி வட்டம் இரண்டு அடுக்குகளால் ஆனது. உள் வட்டம்

8 முதல் 10 இதழ்களுடனும், வெளி அடுக்கில் உள்ள இரு மடங்கு எண்ணிக்கையிலான இதழ்களுடனும் காணப்படும். மலர்களின் நுனி, பல் போன்று இருக்கும். இதைச் சக்கர வடிவ அல்லி வட்டம் என்பர். கனிகள் முட்டை வடிவத்தில் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். மலர்கள் மார்ச் முதல் மே மாதம் வரையிலும், கனிகள் மே முதல் ஜூன் மாதம் வரையிலும் தோன்றும்.

வளரும் இடங்கள்

தென்னிந்திய வனப்பகுதிகளில் காணப்படும் இந்த உயரமான மரம், இந்தியாவின் வெப்பமான பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எல்லாவகையான நிலப்பகுதிகளிலும் வளர்கிறது.

மருத்துவப் பயன்கள்

மகிழ மரத்தின் மலர், கனி, விதை, பட்டை போன்றவை, மருத்துவப் பயன் உடையவை. மணமிக்க மலர்களில் இருந்து வாசனைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. உலர்ந்த மலர்களைப் பொடி செய்து, மூக்குப்பொடி போல உள்ளிழுக்கப்பட்டு, தலைவலிக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கனிகள் புண்களைக் குணப்படுத்தும் மருந்தாக உபயோகப்படுகிறது. பட்டை சத்து மருந்தாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும், பல், ஈறு தொடர்பான உபாதைகளுக்கு மருந்தாகவும் உதவுகிறது. மகிழம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து, தலைக்குத் தடவி வந்தால் பொடுகு, பேன் தொல்லை இருக்காது.

இலக்கியத்தில் மகிழம்

மகிழ மரம் 'வகுள மரம்' என்றும் குறிப்பிடப்படுகிறது. இலக்கியத்தில் பல இடங்களில் மகிழ மரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஓடு தேர்க்கான் வகுளம்'

- சீவக சிந்தாமணி

'மடல் பெரிது தாழி மகிழினிது கந்தம்' - 'வாக்குண்டாம்'

- ஔவையார்

'நறுந் தண் தகரம், வகுளம்,

இவற்றை'

- மணிமேகலை

- கி.சாந்தா






      Dinamalar
      Follow us