
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
எதனால் பெண்களுக்கு வழுக்கை ஏற்படுவதில்லை. ஆண்களின் வழுக்கைத் தலையில் முடி முளைக்க வாய்ப்பு உள்ளதா?
வி.வர்ஷினி, 7ம் வகுப்பு, நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, பட்டணம்காத்தான்.
இது ஹார்மோன்களின் விளையாட்டு. உடலின் குறிப்பிட்ட பகுதி இயங்கவேண்டும், அல்லது இயக்கத்தை நிறுத்தவேண்டும் என்ற சமிக்ஞை பெரும்பாலும் இந்த ஹார்மோன் சுரப்பியினால்தான் நடைபெறுகிறது. முடி வளர்வது, அல்லது கொட்டுவது போன்ற செயல்பாட்டிலும் ஹார்மோன்களின் கைவரிசை இருக்கிறது. டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) எனும் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு முடியின் தன்மையைத் தீர்மானிக்கிறது. இது அளவாகச் சுரக்கும்போது முடி சரியாக வளர்கிறது; அதிகமாக சுரந்தால், மயிர்க்கால்களைச் சுருக்கி மெலிந்த மயிர்கள்தான் வெளியே வரும். வலுக்குறைந்த முடி எளிதில் கொட்டிவிடும் எனவே அந்தப் பகுதியில் வழுக்கை ஏற்படும்.
டெஸ்டோஸ்டீரோனில் இருந்துதான் உடல் ஒருபகுதியை டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோனாக மாற்றம் செய்து கொள்கிறது. ஆண்களில் கூடுதலாகச் சுரக்கும் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பெண்களிடம் அளவாகவே சுரக்கிறது. இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு வழுக்கை விழுவது மிக அரிதாக இருக்கிறது.
இதயத்தை ஸ்கேன் செய்வது போல தற்போது மயிர்க்கால்களை ஸ்கேன் செய்ய முடியும். அவற்றின் நிலையை அறிந்து உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் வழுக்கை விழுவதைத் தடுக்க முடியும். சில சமயம் சில ஹார்மோன் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிவரும். அல்லது 'முடி மாற்று சிகிச்சை'யை (Hair Transplantation) நாடலாம்.
சுகாதாரமான முறையில் செய்யப்படும் துரித உணவுகளைக்கூட உண்ணக்கூடாதா? அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
இரா.தீபக், 10ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.
துரித உணவு என்பது பல்வேறு வேதிப்பொருட்கள், உப்பு போன்றவற்றைக் கூடுதலாகச் சேர்த்து, வெறும் கார்போஹைட்ரேட் - மாவுச்சத்து செறிவாக உள்ள, பதப்படுத்தி வைக்கப்பட்ட உணவை, விரைவாகச் சமைத்து தரும் உணவுகளையே குறிக்கும்.
அதுபோல காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் கூடுதல் சர்க்கரைச் சத்து கொண்டவை. ஒருதடவை இந்த உணவுகளை உண்டால் நோய் வந்துவிடும் என்பதல்ல.
இந்தவகை உணவை அன்றாடம் உண்டு வந்தால் வெறும் மாவுச்சத்து உடலில் கொழுப்பாக மாறி நம்மை ஊளைச்சதையர்களாக மாற்றிவிடும். மேலும் கூடுதல் உப்பு முதலிய பொருட்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். சரிவிகித சத்துகளை தருவதில்லை என்பதால் பல்வேறு சத்துக் குறைபாட்டு நோய்களைத் தோற்றுவிக்கும்.
பீட்சா, நூடுல்ஸ் முதலியவை எல்லாம் துரித உணவு என பலரும் கருதுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் முக்கிய உணவு நூடுல்ஸ்தான். எனவே நூடுல்ஸ் பிரச்னை இல்லை; அந்த நூடுல்ஸ் வெறும் மாவுச்சத்து கொண்டதா இல்லை முழு தானியத்தால் ஆக்கப்பட்டு, போதுமான நார்ச்சத்து இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
வானவில் அரைவட்டமாகத் தெரிவது ஏன்?
பி.எம்.பூரணி, 4ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.
வானவில்லின் முழு வடிவம், வட்டம்தான்! மேற்கே சூரியன் மறைகிறது; நாம் கிழக்கு முகமாக உள்ளோம். கிழக்கில் மழை மேகம் உருவாகி தொலைவில் மழை பொழிகிறது எனக்கொள்வோம். சூரியனது கதிர்களில் சில அந்த மழைத்துளிகளுக்குள் புகுந்து எதிரே உள்ள மழைத்துளியின் சுவரில் மோதி, மறுபடி அந்தத் துளியிலிருந்து வெளிப்படும். மழைத்துளியை அடைந்த அந்தக் கதிரின் கோட்டில் இருந்து சுமார் 40 முதல் 42 டிகிரி கோணத்தில் எல்லாத் திசைகளிலும் பிரதிபலித்த கதிர் வெளிப்படும்.
அவ்வாறு வெளிப்படும் கதிரில் ஒளிப்பிரிகை நடந்து இருக்கும். எனவே வானவில் நிறங்கள் தனித்தனியாகப் பிரிந்து வெளிப்படும்போது வட்டவடிமான வானவில்லை உருவாக்குகிறது. வானவில்லின் ஒருபகுதி அடிவானத்துக்குக் கீழே இருப்பதால், நம்மால் முழுவட்டத்தையும் காண முடிவதில்லை. சில சமயம் விமானத்தில் பயணம் செய்யும்போது, முழு வட்ட வடிவ வானவில்லைக் காண முடியும்.
மேலும் ஒரு வியப்புச் செய்தி. மேலே உள்ள படத்தில் A என்பவருக்கு அவரின் 420 கோணத்திலும், B என்பவருக்கு அவரின் 420 கோணத்தில் உள்ள மழைத்துளிகள் வானவில்லை ஏற்படுத்தும். அதாவது நாம் ஒருவருக்கொருவர் அருகருகே நின்றாலும் நாம் காணும் வானவில் ஒன்றல்ல!

