PUBLISHED ON : அக் 16, 2017

சூழல் மண்டலம் (Eco System - ஈகோ சிஸ்டம்) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிரிகள் என, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழ்கிற இடத்தின் சூழலைப்பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. பல வகையான உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது சூழல் மண்டலம். சூழல் மண்டலம் என்ற சொல்லை 1930ம் ஆண்டில் 'ஆர்தர் ரோய் கிளாபாம்' (Arthur Roy Clapham) என்ற பிரிட்டிஷ் தாவரவியலாளர் உருவாக்கினார். சூழலின் இயற்பியல், உயிரியல் கூறுகளையும், அவற்றுக்கு இடையேயான தொடர்புகளையும் சேர்த்துக் குறிப்பிடுகிற சொல்லாக இதைக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு உயிரினமும், தான் வாழும் இடத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களை, தாவரங்களை உணவாக உண்டு வாழ்கின்றன. அவற்றின் உணவுச் சங்கிலி இயற்கையோடு இயைந்த ஒன்று. பறவைகள், பூச்சிகள் போன்றவை தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, இனப்பரவலாக்கம் போன்றவற்றில் உதவுகின்றன. சூரிய மண்டலத்தில் இருக்கும் உயிரற்ற காரணிகள், நேரடியாகவும், மறைமுகமாகவும் உயிர்க்கோளம் (Biosphere - பயோஸ்பையர்) சீராக இயங்க உதவுகின்றது. சூரிய ஆற்றல், வாயுக்கள், நீர், மண், தனிமங்கள் போன்றவை, உணவை உருவாக்கும் மூலப் பொருட்களாக உதவுகின்றன. தாவரங்கள் தங்களுக்கான உணவைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளக்கூடியவை. அதற்கான மூலப்பொருட்களாக உயிரற்ற காரணிகள் அமைகின்றன. விலங்குகள், தாவரங்கள் இறக்கும்போது, அவற்றின் உடல்கள் நுண்ணுயிர்களால் சிதைமாற்றத்திற்கு (Decomposition - டிகம்போசிஷன்) உள்ளாகி மண்ணில் உரமாகின்றன.
மனிதச் செயற்பாடுகளால் இயற்கை அழிக்கப்படும்போது, சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. காடுகளை அழித்தல், நீர் வளங்களைப் பாதுகாக்கத் தவறுதல், நகர மயமாக்குதல் போன்ற பல காரணங்களால் பருவநிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் மாற்றங்கள் விளைதல் போன்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. பூமியைப் பாதுகாக்க சூழல் மண்டலம் மாசடையாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
- ப.கோபாலகிருஷ்ணன்
