தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : அக் 23, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 23, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

ஆண்களுக்கு மீசை, தாடி வளர்வதுபோல பெண்களுக்கு ஏன் வளர்வதில்லை?

ச.சக்திவேல், திருப்பூர்.


ஆண்களுக்கும் பெண்களுக்கும் தாடி, மீசை மட்டும் வித்தியாசமல்ல; பற்பல உடற்கூறு வித்தியாசங்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் பெருமளவு காரணம் பெண்மை ஹார்மோன் எனப்படும் ஈஸ்ட்ரோஜனும் (Estrogen), ஆண்மை ஹார்மோன் எனப்படும் ஆண்ட்ரோஜனும் (Androgen) தான். இந்த இரண்டு ஹார்மோன்கள் சுரக்கும் விகிதமும் மாறுபடும்.

எடுத்துக்காட்டாக, டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) எனும் ஆண்ட்ரோஜன் வகை ஹார்மோன் பெண்களுக்குச் சுரப்பதைவிட, ஆண்களுக்குக் குறைவாகவே (10%) சுரக்கும். பெண்களின் திசு வலிமைபெற, எலும்பு உறுதியடைய இந்த ஹார்மோன் தேவை. ஆண்களிலும் இது கூடுதல் பணிகளைச் செய்கிறது.

பெண்களின் ஹார்மோன் எனக் கூறினாலும், ஆண்களின் இதய பாதிப்பைத் தடுப்பதில் ஈஸ்ட்ரோஜன் பங்கும் உள்ளது. டெஸ்டோஸ்டிரோனில் இருந்து உருவாகும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் தூண்டுதலில்தான் ஆண்களுக்கு தாடி, மீசை வளர்கிறது. ஆண்களின் தாடையில்

உள்ள அதே அளவு மயிர்க்கால்கள் பெண்களின் முகத்திலும் உள்ளன. ஆனால் பெண்களின் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவு என்பதால் தாடி, மீசை வளர்வதில்லை.

சிதைந்த தாவரங்கள், விலங்குகளின் படிமங்களில் இருந்துதானே எரிபொருட்கள் பெறப்படுகின்றன. அவை எப்படி வளிமண்டலத்தை மாசுபடுத்தும்?

பி. கௌசிக், 8ம் வகுப்பு, மவுன்ட் லிடெரா சீ பள்ளி, திருப்பூர்.


உயிரி பொருட்கள் எல்லாம், கார்பன் சார்ந்த கரிமப் பொருட்கள். வளிமண்டலத்தில் இருந்து கார்பனைப் பெற்றுக்கொண்டு இவை வளரும். இவை மடிந்து சிதையும்போது, அந்தக் கார்பன் மறுபடி வளிமண்டலத்துக்குச் செல்லும். இவ்வாறு கார்பன் சுழற்சி இயற்கையாகவே நடைபெறுகிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடிந்து, புதைந்து மண்ணுக்கடியில் இருப்பவைதான், கார்பன் செறிவான பெட்ரோலியம் போன்ற படிம எரிபொருட்கள். பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும்வரை அவை கார்பன் சுழற்சியில் பங்கு பெறுவதில்லை. அவற்றை வெளியே எடுத்துப் பயன்படுத்தும்போது, அந்தக் கார்பன் வளிமண்டலத்துக்குச் சென்று, வளிமண்டல கார்பன் அளவை வெகுவாக உயர்த்திவிடுகிறது. வளிமண்டலத்தில் கார்பன் அளவு கூடினால் புவி வெப்பமடையும். காலநிலை மாற்றம் ஏற்படும். எனவே, கூடுதல் கார்பன் வளிமண்டலத்தில் சேருவதை 'மாசு' என்கிறோம். ஆனால், குறிப்பிட்ட அளவு

கார்பன் இல்லை என்றால், புவி குளிர்ந்துவிடும். உயிர்கள் நிலைக்க முடியாது. எனவே, கார்பன் என்ற பொருள் மாசு அல்ல; வளிமண்டலத்தில் கூடுதலாக சேருவதே மாசு.

மரங்கள் அசைவதால் காற்று வீசுகிறதா அல்லது காற்று வீசுவதால் மரங்கள் அசைகின்றனவா?

கோ.ஜீவன்பாபு, 11ம் வகுப்பு, சக்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேலூர், மதுரை.


காற்று வீசுவதால்தான் மரங்கள் ஆடுகின்றன. அடிப்படையில் காற்று வீசுவது மரங்கள் ஆடுவதால் அல்ல. சூரிய வெப்பம் நிலத்தையும் கடல் நீரையும் சூடுபடுத்தும். ஆனால், எல்லா இடங்களிலும் ஒரே அளவு சூடு இருக்காது. எனவே, ஒப்பீட்டளவில் கூடுதல் சூடு அடைந்த பகுதியிலிருந்து வெப்பமுறும் காற்று, திணிவு குறைந்து மேலே எழும்பும்.

இந்த குறை காற்றழுத்தப் பகுதியை நோக்கி, உலகின் பிற பகுதியிலிருந்து காற்று செல்லும்; இதுவே காற்று வீசுவது என நாம் கூறுகிறோம். எனவே, அடிப்படையில் காற்று வீசுவது சூரிய ஒளியின் வினையால்தான். காற்று வீசும்போது, அதன் ஆற்றலில் தாக்கமுற்று மரங்கள் அசைகின்றன.

விதை இல்லாத அன்னாசி பழத்தை மறுபடி முளைக்க வைக்க என்ன செய்வார்கள்?

எஸ்.அரவிந்த், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.


விதையில்லை என்று யார் சொன்னது!? பழத்தின் நடுவேதான் நாம் விதையைத் தேடுகிறோம். ஆனால், அன்னாசிப் பழத்தின் விதை, தோலுக்கு அடியில் உள்ளது. இந்த விதைகள் மலட்டுத் தன்மை வாய்ந்தவை என்பதால், கணுக்களை (Nodes) வைத்தே பயிர் செய்யப்படுகிறது. சுமார் 200 பூக்களைக் கொண்ட பூங்கொத்து கருவுற்றதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து, ஒரே பழமாக மாறும்.

ஹம்மிங் பறவையால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் காட்டுவகை அன்னாசி, இன்னமும் தென் அமெரிக்காவில் காணக் கிடைக்கிறது. தென் அமெரிக்க தூப்பி பழங்குடி மக்கள், காட்டுவகை அன்னாசியிலிருந்து ஒட்டுச் சேர்க்கை மூலமாக விதைகள் சிறுத்த, மலடான வகை ஒன்றை உருவாக்கினர். இதன் தாவரவியல் பெயர் அனானஸ் கோமொசுஸ் (Ananas comosus). இதன் விதைகள் மலட்டுத் தன்மை கொண்டவை என்பதால், விதையில்லாப் பெருக்கம் வழி கணுப்பகுதியை வெட்டி வைத்துப் பயிரிடப்படுகிறது.

அன்னாசி மட்டுமல்ல; எந்த வகை வாழைப்பழமாக இருந்தாலும், அதில் கடுகளவே விதை உள்ளது. இவையெல்லாம் கடந்த 2000 ஆண்டுகளில், மனிதனால் தெரிவுசெய்யப்பட்டு, வளர்த்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பழங்கள்தாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us