தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : அக் 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. மழைநீர் ஒரே கம்பி போல் விழாமல் துளித்துளியாக விழுவது ஏன்?

க.மணிகண்டன், 4ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.


மேகத்தில் நீரானது சிறுசிறு நுண் திவலைகளாவே உள்ளது. எனவே, மேலிருந்து கீழே விழும்போது கொட்டுவது போல அல்லாமல் துளித்துளியாக விழுகிறது. மேகம் என்பது நீராவி நிரம்பிய காற்றுக் குமிழி. நீரில் போட்ட பந்து மேலே வருவது போல, குறைந்த திணிவு கொண்ட அந்தக் குமிழி காற்றில் மேலே எழும்பும். அவ்வாறு மேலே எழும்போது, விரிவடைந்து குளிர்ந்து போகும். அதன் காரணமாக நீராவித் திவலைகள் உறைந்து சிறு சிறு பனித்துகள்களாக இருக்கும். இந்தப் பனித்துகள்கள் மேகத்துக்குள்ளே அங்கும் இங்கும் செல்லும்.

சரியான சூழலில் இந்தப் பனித்துகள்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து, திரட்சி பெற்று எடை கூடிக் கீழே விழும். விழும்போது, அவை பனித்துகள்களாகவே இருக்கும். கீழே வரவர உருகி, நீர்த் திவலைகளாக, துளித்துளியாக மாறுகிறது.

2. வெயில் காலத்தில் பலத்த இடியுடன் பெய்யும் மழை, குளிர்காலத்தில் ஏன் அவ்வாறு பெய்வது இல்லை?

ஜெ.லட்சுமிதேவிப்ரியா, 12ம் வகுப்பு, கே.சி.ஏ.டி.சி.ஜி. பதின்ம மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.


தலைமுடியில் தேய்த்த சீப்பு, சிறு காகிதத் துண்டுகளைக் கவரும். இது உராய்வினால் ஏற்படும் நிலை மின்சாரம். மேகத்தில் எப்போதும் பனித்துகள்கள் இடையே உராய்வு நடந்துகொண்டே இருக்கும். இந்த நிலை மின்சாரம் விரைவில் அழிந்தும் போகும். ஆனால், பெரிய மேகமாக வளர்ந்தால் அதில் மேலும் கீழும் என மின்னேற்றம் பிரிந்து குவியும். அப்போதுதான் இடி, மின்னலுடன் மழை பொழியும்.

இதில் 2 விஷயங்களை நாம் உணரலாம்

1. மேகம் வளர்ந்து பெரிதாகும்

2. பனித்துகள் செறிவு (நீராவி) கூடுதலாக இருந்தால், உராய்வு மிகுந்து நிலை மின்னேற்றம் அதிகமாகும்

இவை இரண்டும் கோடை காலத்தில் கூடுதலாக இருக்கும். கோடை வெப்பத்தில் மேகம் அதிகமாக உயரும்; குளிர் காலக் காற்றைவிட கோடை வெப்பக் காற்று பத்து மடங்கு கூடுதலாக நீராவியைத் தக்கவைக்கும். எனவே, கோடையில் இடி, மின்னல் பலமாக இருக்கிறது.

3. ஒரு பாம்பை இன்னொரு பாம்பு கடித்தால் விஷம் தாக்கி இறக்குமா?

எம்.தணிகா, 4ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.


அதே வகை பாம்பு கடித்தால் ஒன்றும் ஆகாது. அதாவது, தன் விஷத்துக்கு எதிரான ஆன்டிஜென்னை (Antigen) அதே இனத்துப் பாம்பு தன்னிடம் வைத்து இருக்கும். வேறு வகை பாம்பு கடித்தால், அதற்கான எதிர்ப்பு அதனிடம் இருக்காது என்பதால், அந்தப் பாம்பு இறக்கும்.

அதுசரி! தன் விஷத்தைத் தானே தவறுதலாக விழுங்கிவிட்டால்? ஒன்றும் ஆகாது. ஏனைய புரதங்கள் செரிமானம் ஆவது போல பாம்புக்கு விஷம் செரிமானம் ஆகிவிடும். அதாவது, விஷமானது ரத்தத்தின் வழி பரவும்போது மட்டுமே விஷம்.

பாம்பு கடித்து விஷம் ரத்தத்தில் கலந்து செல்லும்போது, இரண்டு வகையில் வேலை செய்யும். நல்லபாம்பு போன்ற பாம்பின் விஷத்தில் நியூரோடாக்சின் (Neurotoxin) எனும் நரம்பு நச்சுப் பொருள் உள்ளது. இது, மூளை நரம்பு செல்களைக் கோளாறு செய்து, செயலற்றுப் போகச் செய்யும். இதன் காரணமாக எந்தத் திசுவும் இயங்காது. மூச்சு விடமுடியாது; இதயம் சுருங்கி விரியாது என்பதால், மரணம் நிகழும்.

வேறு சில பாம்பு வகை விஷத்தில், சைடோடாக்ஸிக் (Cytotoxic) எனும் நச்சுப் பொருள் உள்ளது. இது ரத்த அணுக்கள் போன்ற உடலின் பல்வேறு திசுக்களை நசித்துவிடும்; உள்ளே ரத்தப் பெருக்கு ஏற்பட்டு மரணம் நேரும்.

4. ஸ்மார்ட்போனின் தொடுதிரைக்கும் விரலுக்கும் என்ன தொடர்பு? விரல் பட்டவுடன் இயங்குகிறதே எப்படி?

ஈ.ஸ்ரீராமகிருஷ்ணன், 4ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்
.

கீ போர்டு, மெளஸ் போல தொடுதிரையும் ஓர் உள்ளீடு கருவியே. கணினி அல்லது செல்பேசிக்கு செலுத்த வேண்டிய ஆணைகளை உள்ளிடும் கருவிதான் தொடுதிரை. தடுப்புவிசை (Resistive), மின்தேக்கி (capacitive) ஆகிய இரண்டு வகை தொடுதிரை தொழில்நுட்பங்கள் புழக்கத்தில் உள்ளன. மெளஸ் இல்லாத கணினி, ஸ்மார்ட்போன் திரை போன்றவற்றை எளிதில் இயக்க, இந்தத் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

இரண்டு மெல்லிய உலோகத் தகடுகள் நுண் இடைவெளியில் அமைக்கப்பட்டு இருக்கும். விரலால் ஒரு பகுதியை அழுத்தும்போது, அந்த இரண்டு தகடுகளும் ஒன்றுடன் ஒன்று தொட்டு, மின் சுற்று ஏற்படும் படியான தொழில்நுட்பமே தடுப்புவிசை நுட்பம். துல்லியமாக எந்தப் புள்ளியில் இரண்டு தகடுகளும் ஒன்றையொன்று தொடுகின்றன என்பதை வைத்து, மைக்ரோபிராசசர் எனும் நுண்செயலி மின்புல மாற்றங்களை உணர்ந்து, மொபைல் அல்லது கணினியை இயக்கும்.

இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் முறை, மின்தேக்கி முறை. தொடுதிரையின் குறிப்பிட்ட அடுக்கில் நிலை மின்சாரம் குவிக்கப்பட்டு இருக்கும். நமது உடல் மின்சாரத்தைக் கடத்தும், எனவே, விரலால் தொடும்போது அந்த மின்சாரம் பாய்ந்து மின்னிழப்பு ஏற்படும். மின்புலத்தில் மாற்றம் நிகழும். துல்லியமாக எந்த இடத்தில் மின்னிழப்பு ஏற்பட்டது என்பதை நுண்செயலி உணர்ந்து அதற்கேற்ப செயற்படும். மின்சாரம் பாயாத பிளாஸ்டிக் கையுறை அல்லது கைக்குட்டையில் விரலைச் சுற்றி வைத்து இயக்கினால், இந்த வகை தொடுதிரைகள் இயங்காது. கைவிரல் மட்டுமல்ல, மூக்கினாலும் தொடுதிரைகளை இயக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us