PUBLISHED ON : நவ 20, 2017

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
வெயிலில் நடந்து செல்லும்போது உருவத்தைவிட நம் நிழல் பெரிதாகத் தெரிவது ஏன்?
தி.கிருத்திகா, 8ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.
நமது நிழல், நாள் முழுவதும் ஒரே மாதிரி பெரிதாகத் தெரிகிறதா என்று முறையாக சோதனை செய்து பார்க்கவும். காலையிலும் மாலையிலும் சூரியன் அடிவானுக்கு அருகே உள்ள நிலையில் நமது நிழல் நீண்டு தெரியும். உச்சிப்பொழுதில் நிழலின் அளவு குறைந்து போகும். அதாவது ஒளி எந்தக் கோணத்தில் விழுகிறது என்பதைப் பொறுத்து நிழல் அமையும்.
நிழல் என்பது ஒரு பொருள் அல்ல; ஒளியற்ற இடம்தான் நிழல். எனவே, ஒளியில்லாத இருளில் நிழல் ஏற்படுவதில்லை. இருட்டு அறையில் டார்ச் விளக்கைக் கொண்டு ஒரு பரிசோதனை செய்வோம். டார்ச் விளக்கை இயக்கினால், எதிர் சுவர் முழுவதும் ஒளி படரும். டார்ச் விளக்கின் முன்புறம் கையால் மூடி மறைத்துக்கொண்டால் சுவரில் ஒளி படராது. அதாவது உங்கள் கையின் நிழல், சுவர் முழுவதும் படரும். இப்போது உங்கள் கையை விளக்கிலிருந்து தொலைவாக, சுவருக்கு அருகே வைத்தால், சுவரில் உங்கள் கையளவுதான் நிழல் ஏற்படும். மற்ற பகுதிகளில் ஒளி படரும். நடுவே கையை வைத்தால், நிழலின் அளவு உங்கள் கையைப் போல பல மடங்கு கூடுதலாக இருக்கும். அதாவது, ஒளியின் அருகே மறைக்கும் பொருள் இருக்கும்போது, நிழலின் அளவு கூடும்.
ஒளி நேர்கோட்டில் பாயும் என நீங்கள் அறிவீர்கள். ஒளியின் மூலத்திலிருந்து கையின் பக்கவாட்டு விளிம்பு வழி சுவருக்குச் செல்லும் நேர்கோடுதான் நிழலின் அளவைத் தீர்மானம் செய்யும். சுவரின் அருகே கை இருந்தால் கோணம் குறைவாக அமையும் என்பதால், நிழலின் அளவும் குறைவாக இருக்கும்; சுவரிலிருந்து தொலைவில், விளக்கின் அருகே கை இருந்தால், இந்தக் கோணம் கூடும், எனவே, நிழலின் அளவும் கூடும்.
செயற்கை மழை எவ்வாறு பெய்விக்கப்படுகிறது? இதனால் என்ன பயன்?
ச.மு.ம.சந்தோஷ் சுதன், 4ம் வகுப்பு, நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, உச்சிப்புளி.
நம்மால் செயற்கையாக மேகத்தை உருவாக்க முடியாது. நீராவி செறிவாக உள்ள மேகம் இருந்தால் மட்டுமே, செயற்கையாக மழையைப் பெய்விக்க முடியும். சிறுசிறு நீர்த் துமிகளாக மேகத்தில் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கிடக்கும் நீரைத் திரளச் செய்தால் அதன் கனம் கூடுதலடைந்து மழை பெய்யும்.
இயற்கையில் தூசு, துரும்புகள் மிக்க காற்று வீசும்போது, அந்தத் தூசுகளில் நீர்த் துமிகள் படிந்து, படர்ந்து, திரண்டு திரட்சி பெறும். செயற்கையாக மேகத்தின் மீது சில்வர் அயோடைடு (Silver Iodide) நுண் துகள்களைத் தூவும்போது அதில் நீர்த் துமிகள் படர்ந்து திரட்சி பெறும். இதன் காரணமாக செயற்கை மழை பெய்யும். இவ்வாறு செய்வதால் உலகம் முழுவதும் பெய்யும் மொத்த மழையின் அளவைக் கூட்ட முடியாது; எங்கோ பெய்ய வேண்டிய மழையை, நாம் இங்கு பொழிய வைக்கிறோம் அவ்வளவே.
உடலில் காயமோ, நோயோ ஏற்பட்டால், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வலியும் பாதிப்பும் ஏற்படுவது ஏன்?
எஸ்.அபிராமி, 2ம் ஆண்டு இளநிலை தாவரவியல், அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி.
பல்வேறு விதமான வலிகள் இருக்கின்றன. அவற்றில், காயம்பட்ட இடத்தில் ஏற்படும் வலி குறித்துக் காண்போம்.
வெட்டு ஏற்பட்டு காயமாகும்போது, அந்தப் பிளவின் வழியே நுண்ணுயிரிகள் உடலுக்குள் புகும். அவ்வாறு நுண்ணுயிரிகள் புகுந்தால் தீங்கு ஏற்படும். இதைத் தடுக்க இயற்கை தானாக ஏற்படுத்திக் கொண்ட முறைதான் இது. வெட்டுப்பட்ட இடத்திலுள்ள எல்லா நுண்ணுயிரிகளையும் கொல்ல, நமது நுண்ணுயிரி எதிர்ப்பு அமைப்பு முதலில் இயங்கும்.
இந்தப் பணியில் வேறு நுண்ணுயிரிகளைக் கொல்லும்போது, நமது செல்களும் சிதைபடும். காயம் ஏற்பட்ட பகுதியில் நல்ல திசுக்களும் பாதிப்பு அடையும்போது, உடலில் அழற்சி வீக்க நிலை ஏற்படும். அந்தப் பகுதியில் உள்ள நரம்பு உணர்வு செல்கள் திசு பாதிப்பை உணர்ந்து மூளைக்கு உணர்த்தும். அதைத்தான் 'வலி' என நாம் உணர்கிறோம்.
பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி, பெரிய பாறைகளாக்கி கடல் அரிப்பைத் தடுக்கப் பயன்படுத்த முடியுமா?
வி.சந்தானகோபாலன், மதுரை.
கடல் அரிப்பு என்பது, கடலோர மணல் பகுதிகள் அரிக்கப்பட்டு கடலானது நிலப்பகுதியை நோக்கி விரிவடைவதாகும். இதனால் கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளில், செயற்கை மணற்பரப்பை உருவாக்குவார்கள். அதுபோல பாறாங்கற்கள் கொண்டு தடுப்புச் சுவர் அமைத்தும் அரிப்பைத் தடுக்க முடியும். பெரும் ஆற்றலுடன் வீசும் கடல் அலையின் வீச்சை பாறைகள் தாங்கி, கடற்கரை மணலைப் பாதுகாக்கும்.
அந்த வகையில், பிளாஸ்டிக்கின் திணிவு, நீரை விடக் குறைவு. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் பாறைபோன்ற அமைப்பாக இருந்தாலும், நீரில் மிதக்கவே செய்யும். எனவே, கடல் அரிப்பைத் தடுக்க, இந்த முறை சரியாக இருக்காது.
