தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : டிச 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

பச்சோந்தி எவ்வாறு நிறத்தை மாற்றுகிறது? எத்தனை நிறங்களில் மாற்றிக்கொள்ளும்?

மோனிஷ் கார்த்திக், 9ஆம் வகுப்பு, கே.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அன்னூர், கோவை.


பச்சோந்தியின் தோல் வெளிப்புறம் கண்ணாடி போல ஒளி ஊடுருவும் தன்மை வாய்ந்தது. எனவே, உட்புறத்தோலின் நிறம் வெளியே தெரியும்.

பச்சோந்தியின் தோலின் உட்பகுதியில், பல்வேறு குரோமட்டோஃபோர் (Chromatophore) எனப்படும் நிறந்தாங்கி செல்கள் கொண்ட அடுக்குகள் உள்ளன. அதன் முதல் அடுக்கில், மஞ்சள் நிறம் தரும் நிறமிகள் செறிந்த குரோமட்டோஃபோர் செல்கள் உள்ளன. இரண்டாவது அடுக்கில் சிவப்பு, மூன்றாவது அடுக்கில் நீலம், அடி அடுக்கில் பழுப்பு நிறம் தரும் நிறமிகள் செறிந்த செல்கள் உள்ளன.

இந்த நிறமிகள் எல்லாம், செல்களின் சிறப்புப் பைகளில் அடங்கி ஒடுங்கி இருக்கும். பச்சோந்தியின் நிலையைப் பொறுத்து, அதன் உணர்வுகள் மாற, அதன் அடிப்படையில் நரம்புகள் தூண்ட, பல்வேறு நிறமிகள் செல் பைகளிலிருந்து வெளியே வந்து செல்களுக்கு நிறம் பூசும். சிவப்பு, மஞ்சள் அடுக்கு தூண்டப்பட்டால், இரண்டும் வெளிவந்து கலந்து காட்சி தரும்போது, பச்சோந்தி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இவ்வாறு பல்வேறு வகையில் நிறக்கூட்டு நடைபெற்று பல நிறங்களில் பச்சோந்தி காட்சி தரும். அமைதியாக உள்ளபோது, வெளிர்பச்சை நிறத்திலும், கோபம் வந்த நிலையில் பிரகாசமான மஞ்சள் நிறத்திலும் ஒளிரும். தன்னை ஒளித்து மறைத்துக் கொள்வதற்கு அல்ல! மாறாக, தனது உணர்வை மற்ற பச்சோந்திகளுக்குத் தெரிவிக்கவே, தனது நிறத்தை மாற்றிக் கொள்கிறது.

மின்சாரத்திற்காக அமைக்கப்படும் காற்றாலைகளால் மழைப்பொழிவு குறையுமா?

ம. மணிகண்டன், 9ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, கொழுமம், திருப்பூர்.


நிச்சயமாகக் குறையாது. மற்ற மனித நடவடிக்கைகள்போல, இதற்கும் சூழல் தாக்கம் இருக்கும் என்ற நோக்கில் காற்றலைகளைச் சுற்றிப் பல ஆய்வுகள் செய்கின்றனர். பறவைகள் பாதிக்கப்படுகின்றன, அருகே உள்ள பகுதிகளில் ஒலி மாசு ஏற்படலாம் என, சில சிக்கல்களை ஆய்வுகள் சுட்டுகின்றன. எனினும், மழைப் பொழிவு போன்றவற்றுக்குப் பாதிப்பு ஏதுமில்லை.

அதிகக் காற்று வீசும் பகுதிகள், மழை மறைவு பிரதேசங்களில் மட்டுமே காற்றாலை அமைக்கப்படுகிறது. மழையைத் தரக்கூடிய மேகம், பூமியில் இருந்து, 5 கி.மீ. முதல் 13 கி.மீ. உயரத்தில் இருக்கிறது. இந்தியாவில் அமையும் காற்றாலைகள், 50 மீட்டர் முதல் 90 மீட்டர் வரையிலான உயரத்தில் மட்டுமே அமைக்கப்படுகின்றன.

நிலத்தின் ஈரப்பதம் குறைந்தாலும், நிலத்தடி நீர் மட்டம் குறையாது. காற்றின் வேகத்துக்கு ஏற்ப காற்றாலைகள் இயங்குவதால், மழை அளவு குறைய வாய்ப்பில்லை. புவியின் வெப்பம் அதிகரிப்பதால், மழை குறைகிறது. காற்றாலைகளால், நிலத்தடி நீரோ, மழைப்பொழிவோ எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டாது. மழைப் பொழிவு குறைய முக்கிய காரணம் புவி வெப்பமயமாதலும், நகரமயமாதலும்தானே தவிர காற்றாலைகள் அல்ல.



சூடான உணவுப் பொருட்களை உண்ணும்போது நம் உடலுக்குள் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

மு.மணிமேகலை, தலைமையாசிரியை, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.


பொதுவாக, எந்த உணவைச் சாப்பிடுவதாக இருந்தாலும், சூடான அல்லது நன்றாக ஆறி இருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்கலாம். இளஞ்சூடாக இருக்கும்போது சாப்பிடுவது நல்லது.

மிகமிகச் சூடான உணவை உட்கொண்டால், நமது வாய் வெந்துபோகும், நாக்கு புண்ணாகும். குடலை அடையும் முன்பு உணவிலிருந்து வெப்பம் அகன்றுவிடும் என்றாலும், சில சமயம் உணவுக்குழாயின் உட்புறம் அமைந்திருக்கும் மியூகோசா என்ற மென் சவ்வுப் படலம் சிதைந்து பாதிப்பு ஏற்படலாம்.

இந்த படலமானது, உணவுக்குழலில் ஆரம்பித்து குடல் வரை பாதுகாப்பு அரணாக இருக்கிறது. எனவே, நாம் தினமும் சூடான உணவையே சாப்பிட்டு வந்தால், மியூகோசா படலம் பாதித்து அல்சர் பிரச்னை ஏற்படும். மேலும், இதைச் சரியாகக் கவனிக்காமல் இருந்தால், செரிமானப் பிரச்னை, வாய்ப்புண் ஏற்படுவதுடன், புற்றுநோயாக மாறுவதற்குக்கூட அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதிக சூடாக உணவுப் பண்டங்களைச் சாப்பிடாமல் இருப்பதே உடல் நலத்துக்கு நல்லது.



அந்தக் காலத்தில் குரங்குகள் மனிதனானது போல் இப்போது இருக்கும் குரங்குகள் எப்போது மனிதனாகும்?

செ.விஜயகுமார், 9ஆம் வகுப்பு, காமராஜர் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.


தெரிந்து கொள்ளுங்கள், அந்தக் கால குரங்குகள் மனிதனாகவில்லை. இந்தக் கருத்தை பலரும் தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில், மனிதனும் அல்லாமல், குரங்கும் அல்லாமல் இரண்டின் சாயல் கொண்ட ஒரு விலங்கின் ஒரு பிரிவு மனிதனாகப் பரிணமித்தது. மற்றொரு பிரிவு இன்றைய குரங்குகளாகப் பரிணமித்தன.

அன்றைய பொதுவான மூதாதையர்கள் இன்று இல்லை. அந்த மூதாதையர்களின் வழித் தோன்றல்களான மனிதன் மற்றும் பல்வேறு குரங்கு வகைகள் மட்டுமே உலகில் நிலைத்து இருக்கின்றன. இன்று இருக்கிற உயிரிகள் அனைத்தும் பரிணமித்த உயிரிகளே! எனவே, மனிதன் மட்டுமல்ல, இப்போது வாழ்கின்ற எல்லா விலங்குகளும், உயிரிகளும் காலப்போக்கில் பரிணாமம் அடையும். எந்தத் திசையில் இந்தப் பரிணாமம் இருக்கும் என முன்கூட்டியே கூற முடியாது. அவ்வப்போது ஏற்படும் திடீர் இயற்கை மாற்றங்கள்தான், இந்தப் பரிணாம திசைப்போக்கைத் தீர்மானிக்கின்றன. பரிணாம மாற்றம் நிகழ லட்சக்கணக்கான ஆண்டுகள் தேவை என்பதால், எளிதில் நம் கண் முன்னே காண முடியாது. நுண்ணுயிரிகளில் ஏற்படும் மருந்து எதிர்ப்புத் தன்மைகூட ஒருவகையில் பரிணாம வளர்ச்சியே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us