PUBLISHED ON : டிச 11, 2017

நித்திய கல்யாணி
ஆங்கிலப் பெயர்: 'மடகாஸ்கர் பெரிவிங்கிள்' (Madagascar Periwinkle), 'ரோஸ் பெரிவிங்கிள்' (Rose Periwinkle)
அறிவியல் பெயர்: 'கேதராந்தஸ் ரோசியஸ்' (Catharanthus Roseus)
வேறு பெயர்கள்: சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, மதுக்கரை
நித்திய கல்யாணி 'அபோசயனேசியே' (Apocynaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. பூக்கும் தாவரம். பசுமை மாறாச் செடியான இது, களர் மற்றும் சதுப்பில்லாத நிலத்திலும், தரிசு நிலங்களிலும் தானாக வளரும். எல்லாப் பருவங்களிலும் பூக்கும். அழகுத் தாவரமாகவும், மருந்து உற்பத்திக்காக வணிக ரீதியாகத் தோட்டங்களிலும் இது பயிரிடப்படுகிறது. இந்தோனேசியா, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியுள்ள இந்தச் செடியின் பிறப்பிடம் மடகாஸ்கர். இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தரிசு நிலங்களில் இது சாகுபடி செய்யப்படுகிறது.
பச்சைத் தண்டுகளை உடைய இந்தச் செடி, ஓரடி உயரம் வரை வளரும். ஐந்து இதழ்களை கொண்ட வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களை உடையது. இலைகள் எதிரடுக்கில் அமைந்திருக்கும். முட்டை வடிவ பளபளப்பான இதன் இலைகள் நச்சுத்தன்மை கொண்டவை. இலைகள் கசப்பாக இருப்பதால், ஆடு, மாடுகள் இதை உண்பதில்லை.
செடி வளர்ந்து 6, 9 மற்றும் 12வது மாதங்களில் இலைகளும் பின் தரைமட்டத்தில் செடியை அறுத்துவிட்டு வேர்களும் எடுக்கப்பட்டு பதப்படுத்தியபின் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் செயல்திறன்மிக்க ஆல்கலாய்டுகள் எனும் வேதிப்பொருட்கள் உள்ளன. மருத்துவ குணம் நிறைந்த இதன் இலை, பூ, தண்டு, வேர் ஆகியவை, மருந்து தயாரிப்பின் பொருட்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இலைகள் அமெரிக்கா, ஹங்கேரிக்கும், வேர்கள் மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதில் உள்ள 85க்கும் அதிகமான 'வின்கா ஆல்கலாய்டுகள்' என்றழைக்கப்படும் அத்தனை ஆல்கலாய்டுகளும் மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், (Vincristine) வின்ப்ளாஸ்டின் (Vinblastine) ஆகியவை லுக்கேமியா, லிம்போமா போன்ற ரத்தப் புற்றுநோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் பெரிதும் பயன்படுகின்றன. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துகளைத் தரும் இந்தத் தாவரம், மருத்துவத்தில் மிக முக்கியமானதாகும்.
- அ.லோகமாதேவி
