
அருவிகளில் குளித்தால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது ஏன்?
எஸ்.ஏ.லஷ்மி, இளநிலை வேதியியல், அரசு கலைக் கல்லூரி, பரமக்குடி.
திடீரென நம் தலைமீது குளிர்ந்த நீரைக் கொட்டினால் சட்டென்று மூச்சுத் திணறல் ஏற்படும். அதன் தொடர்ச்சியாகவே அருவியில் நுழையும்போது சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
நீருக்குள் மூழ்கும்போது என்னவெல்லாம் ஏற்படும்?
* மூச்சைப் பிடித்துக்கொள்ள உந்தப்படுவோம்.
* ரத்த நாளங்களில் குழாய்ச் சுருக்கம் ஏற்பட்டு ரத்தம் குறைவாக ஓடும்.
* உடல் வெப்ப இழப்பு தடுக்கப்படும்.
* இதயத் துடிப்பு அதிகமாகி கூடுதல் ரத்தம் பாயும்.
* நீருக்கு அடியில் உள்ளபோது ஏற்படும் அதிகப் பளுவைத் தாங்கிக்கொள்ள, அட்ரினல் எனும் வேதிப் பொருள் சுரப்பு கூடுதலாகும்.
இதே நிலைமைதான் தலையில் அருவி நீர் கொட்டும்போது சிலருக்கு ஏற்படும். நாம் நீருக்குள் சென்றுவிட்டோம், தலை நீருக்குள் அமிழ்ந்துள்ளது என நமது ஆழ்மனம் தவறாகக் கருதிக்கொள்ளும். அவர்கள் தலையில் வாளி நீரைக் கொட்டினாலும் இவ்வாறுதான் உணர்வார்கள்.
வெட்டுக்கிளிக்கு மூக்கு இருக்கிறதா? சிறிய உயிரினங்கள் எவ்வாறு சுவாசிக்கின்றன?
சு.தமிழ்மணி, 6ஆம் வகுப்பு, பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.
மூக்கு போன்ற உறுப்பு துருத்திக்கொண்டு இருப்பது போலத் தெரிந்தாலும், வெட்டுக்கிளி, கொசு போன்ற பூச்சி இனங்களுக்கு நுரையீரல், மூக்கு போன்ற உடலுறுப்புகள் கிடையாது. பூச்சிகள் சுவாசிப்பதற்காக உடலில் சுவாசத்துளைகள் இருக்கும். இயல்பாக சுவாசத் துளைகளுக்குள் செல்லும் காற்றை உள்வாங்கி, தனக்கு வேண்டிய ஆக்சிஜனை அவை எடுத்துக் கொள்கின்றன. சுவாசத்துளைகளின் அருகே உள்ள திசுக்கள் விரிந்து சுருங்கும்போது, துளையும் விரிந்து சுருங்கும். கூடுதல் அல்லது குறைவான ஆக்சிஜன் தேவை எனில் துளைகளை விரித்தும் சுருக்கியும் காற்றின் அளவை அவை கட்டுப்படுத்திக் கொள்ளும். சிறு பூச்சிகளில் தோலில் உள்ள நுண்துளை வழியே நேரடியாகக் காற்று புக முடியும். திசுக்கள் நேரடியாக ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும். இது போன்ற பூச்சிகளுக்கு இருப்பது அவற்றின் மூக்கு அல்ல; அது வாய்ப்பகுதியின் உறிஞ்சுகுழல்.
வானத்தில் விமானம், ஹெலிகாப்டர்கள் பறப்பதால் பறவைகளுக்கு ஆபத்து ஏற்படுமா?
சி.அறிவுக்கரசு, 12ஆம் வகுப்பு, அக்னு.எஸ்.சுந்தர் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, மதுரை.
வேகமாகச் செல்லும் விமானத்தின் மீது மோதும் பறவையின் நிலைமை அவ்வளவுதான்! அவற்றால் சில சமயம் விமானத்துக்கும் பாதிப்பு ஏற்படும். டர்பைன் சுழல் சக்கரத்தில் சிக்கி விமான இன்ஜினைச் செயலிழக்கச் செய்த சம்பவங்களும் உண்டு. ஆனால், விமானம் 10,000 அடி உயரத்தில் பறப்பதால், பறவைகள் மீது அதிகமாக மோதுவது இல்லை. ஆயினும் இந்தியாவில் 2014இல் 719 பறவை விமான மோதல் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
06% : மேலே உயரும்போது
15% : பறக்கும்போது
19% : தரையிறங்க வரும்போது
22% : ஓடுதளத்தில் செல்லும்போது
38% : தரையிறங்கும்போது
தரைக்கு அருகே உள்ளபோதுதான் அதிக மோதல்கள் ஏற்படுகின்றன. எனவே, விமானதளம் அருகே அதிக அளவு பறவைகள் வராமல் இருக்க பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அவ்வப்போது வெடி வெடித்தும் பறவைகளை விரட்டுவார்கள்.