
காட்டுச் சிலம்பன்
ஆங்கிலப் பெயர் : 'ஜங்கிள் பாப்லெர்' (Jungle Babbler)
உயிரியல் பெயர் : 'டர்டோய்டெஸ் ஸ்ட்ரியாட்டா' (Turdoides Striata)
வேறு பெயர்கள் : காட்டுப் பூணியல், பூணில், வெண்தலைச் சிலம்பன், ஏழு சகோதரிகள்
மைனாவைவிட சற்று சிறியதாக, ஆனால் அதை விடக் குண்டாக, தவிட்டு நிறத்தில், சற்றே நீண்ட வாலுடன் இருக்கும் பறவை காட்டுச் சிலம்பன். எப்போதும் ஏழெட்டுப் பறவைகளாகத் திரியும் என்பதால் ஆங்கிலத்தில் 'செவன் சிஸ்டர்ஸ்' (Seven Sisters) என்ற பெயரும் உண்டு. ஆண், பெண் இரண்டும் பார்க்க கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். தவிட்டுக் குருவியும் இதே தோற்றத்தில் இருப்பதால், பலர் இரண்டையும் ஒன்றாகக் கருதுவதுண்டு. காட்டுச் சிலம்பனுக்கு கழுத்துப் பாகம் சற்று ஆழ்ந்த நிறத்தில் இருக்கும்.
இந்திய துணைக் கண்டத்தில் பரவலாக வாழும் பறவை. பெருநகரங்களின் தோட்டங்களிலும், புதர்ச் செடிகள் நிறைந்த பகுதிகளிலும், வயல்வெளி மற்றும் வனப் பகுதிகளிலும் சர்வசாதாரணமாகத் தென்படுபவை. இவற்றின் இறக்கைகள் குறைந்த நீளத்தில் வளைந்து இருப்பதால் குறிப்பிட்ட உயரத்திற்கு மேலாகவோ, வேகமாகவோ பறக்க முடியாதவை. அதனாலேயே இவை வலசை செல்வதில்லை. தோட்டங்களுக்கு ஏழெட்டாகக் கூட்டமாகவே போகும், வரும்.
சில நேரங்களில் ஜோடிகளாகவும் திரியும். அதிகமாகச் சத்தமிடும் பறவைகள். பொதுவாக அணில்கள் மற்ற பறவைகளைக் கண்டால் ஒதுங்கி ஓடிவிடும். ஆனால், இவற்றோடு சேர்ந்தே புல்வெளியில் ஓடித்திரிந்து பழங்களையும் பூச்சிகளையும் உண்பதைப் பார்க்கலாம்.
ஆண்டு முழுவதுமே இவற்றுக்கு இனப்பெருக்கக் காலம்தான் என்றாலும், மார்ச், ஏப்ரல், ஜூலை,- செப்டம்பர் மாதங்கள் முக்கியமானதாக இருக்கின்றன. சராசரியான ஆயுட்காலம் 16 ஆண்டுகள். குஞ்சுகள் 3 ஆண்டுகளில் இனப்பெருக்கத்துக்குத் தயாராகின்றன. கட்டடச் சுவர்கள், இலை தழைகள் நிறைந்த மரங்களில் கூடு கட்டும். மூன்று முதல் ஏழு முட்டைகள் வரை இடும். முட்டை ஆழ்ந்த பச்சை, நீல வண்ணங்களில் இருக்கும்.
வட இந்தியாவில் ஜூலை,- செப்டம்பர் மாதங்களில் இவற்றின் கூடுகளில் கொண்டைக் குயில்களும் (Pied Crested Cuckoo), அக்கா குயில்களும் (Common Hawk-cuckoo) தங்கள் முட்டைகளை இட்டுச் சென்று விடுவது வழக்கம். சிறகு முளைத்த பறவைகள் தாய்க் கூட்டத்திலிருந்து இரண்டு ஆண்டு காலத்தில் பிரிந்து செல்கின்றன.
பறவைகள் தங்கள் குழுவுக்குள் ஒன்றையொன்று துரத்தியும், பொய்ச் சண்டைகள் இட்டும் விளையாடும். தங்கள் அலகுகளால் சிறகுகளை ஒவ்வொன்றாக நீவிச் சீரமைக்கும். மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல், எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சில நேரங்களில் இவை இறந்து விட்ட மாதிரி நடிக்கவும் செய்யுமாம்.
- ராமலக்ஷ்மி