sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியைக் கேளுங்க!

/

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : பிப் 26, 2018

Google News

PUBLISHED ON : பிப் 26, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

ஆராய்ச்சியாளர்கள் எலியை மட்டும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது ஏன்?

கே.வி.மாதேஷ், 3ஆம் வகுப்பு, நகராட்சி நடுநிலைப் பள்ளி, சிதம்பரம்.


ஆய்வாளர்கள் எலியைச் சோதனை விலங்காகப் பயன்படுத்துவதில் பல காரணங்கள் உள்ளன. எலியைப் பராமரிப்பது எளிது. புதிய இடத்திலும் எளிதில் புழங்கி இயல்பாகிவிடும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளே வாழும் என்பதால், பல தலைமுறைகளை உற்றுநோக்கி சோதனை செய்யமுடியும். சோதனைக்கு உட்படும் எலிகளுக்கு இடையே மரபணு பரவல் குறைவாக இருக்கும். எனவே, பல எலிகளில் நடத்தப்படும் சோதனை மேலும் துல்லியமாகும். மரபணு பரவல் அதிகம் கொண்ட எலிகளில் புதிய மருந்தைச் சோதனை செய்யும்போது இருக்கும் உடல்வாகு வியாதியாலா அல்லது மருந்தால் ஏற்பட்டதா என்ற குழப்பம் ஏற்படும். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எல்லா எலிகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியான மரபணு பரவல் கொண்டவை என்றால், உடல்வாகு எல்லாவற்றுக்கும் ஒன்றுபோலவே இருக்கும். எனவே, மருந்தின் விளைவுகளைத் தெளிவாகப் பிரித்து அறியமுடியும்.

உடலின் செயல் அடிப்படையில் மனிதர்களை ஒத்தது எலியின் அமைப்பு. மனிதருக்கு ஏற்படும் நீரிழிவு போன்ற நோய்களை எலிகளுக்கு செயற்கையாக ஏற்படுத்தி, புதிய மருந்துகளின் வீரியம் குறித்து ஆராய்ச்சி செய்யமுடியும் என்பதாலேயே அதிக அளவில் எலியை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துகிறார்கள்.

கடல் நீர் உள்வாங்கக் காரணம் என்ன? அதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?

மு.சபரி, 6ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.


தினமும் ஒருமுறை கடல் உள்வாங்கும். இதனை கடல் இறக்கம் (Low Tide) என்பார்கள். சில மணித்துளிகள் கடந்த பின்னர் கடல் பொங்கும். இதனை கடல் ஓதம் (High Tide) என்பார்கள். தினமும் ஒருமுறை நிலவு நம் தலைக்கு மேலே வரும். அந்தச் சமயத்தில் கடல் நீரை, நிலவின் ஈர்ப்பு விசை கவரும். இதன் காரணமாக கடல்நீர் அந்தப் பகுதியில் பொங்கும். நிலவு பக்கவாட்டில் சரியாக தொண்ணூறு டிகிரி செல்லும்போது, கடலின் வேறு ஒரு பகுதி பொங்கும். அப்போது இந்தப் பகுதியின் நீர், பொங்கும் பகுதியை நோக்கிச் சென்றுவிடும். அதன் தொடர்ச்சியாகவே கடல் நீர் உள்வாங்கி, கடலிறக்கம் ஏற்படுகிறது.

கடல் பொங்கும் இரண்டு நிலைகள்

1. தலைக்கு மேலே நிலவு உள்ளபோது

2. காலுக்குக் கீழே பூமியின் அந்தப் பக்கத்தில் நிலவு இருக்கும்போது

வலக்கையால் எழுதுபவர்களை இடக்கையால் எழுதும் பழக்கத்துக்கு மாற்ற முடியுமா? அப்படி மாற்றினால் என்னவாகும்?

பா.கு.நிஸ்துலா, 10ஆம் வகுப்பு, ராயர் கல்வி நிலையம், அவிநாசி.


மூளையின் வலப்பக்கம் உடலின் இடது பக்கத்துக்கும், மூளையின் இடப்பக்கம் உடலின் வலது பக்கத்துக்கும் சமிக்ஞைகளை அனுப்பிக் கட்டுப்படுத்துகின்றன. மனிதர்களில் பெரும்பாலானவர்கள் வலக்கைப் பழக்கம் உடையவர்கள். நூற்றுக்கு நான்கு பேர் இடது கைப் பழக்கமுள்ளோர்களாக இருக்கிறார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தப் பழக்கம் மூளையைக் கட்டுப்படுத்தும் பகுதியைப் பொறுத்தே அமைகிறது. சிலர் தாமே விரும்பி இரு கைகளாலும் (Ambidextrous) எழுத வேண்டும் என்பதற்காக இடக்கையாலும் எழுதும் திறனை வலிந்து வளர்த்துக் கொள்கிறனர். வலக்கைப் பழக்கம் உடையவர்களைக் கட்டாயப்படுத்தி, இடக்கையால் பணிகளைச் செய்யச் சொல்வது அவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் சுட்டுகின்றன. தானே விரும்பி ஒரு சவாலாக ஏற்று மறுகையால் எழுதப் பழகும்போது சிக்கல் எதுவுமில்லை.

பனி அதிகம் பொழிவதை செயற்கையாகத் தடுக்க முடியாதா?

மாணிக்கம், 8ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.


பனி என நாம் தமிழில் கூறுவதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று பனிமூட்டம், இரண்டாவது பனி மழை (ஆலங்கட்டி) பொழிவது. இரண்டும் ஒன்றல்ல. பனிமழை என்பது மழைதான். மேகத்தின் உயரம் தாழ்வாகவும், சுற்றுப்புறம் குளிர்ச்சியான வானிலையிலும் மழைத்துளி திரவமாக மாறாமல் பனித்துளியாகத் திரண்டுவிடும். மழை மேகத்தை உருவாகவிடாமல் ஆரம்பத்திலேயே கலைத்தால் மழையைத் தடுக்கலாம். அதுபோல செயற்கையாக வேதிப்பொருளை மேகத்தில் செலுத்தி பனிமழையைக் குறிப்பிட்ட பகுதியில் உருவாகாமல் செய்யலாம். காற்றில் நீராவி செறிவாக உள்ள சமயத்தில் காலை அல்லது மாலையில், மலைப்பாங்கான பகுதியில் நிலம் குளிர்ச்சி அடையும்போது, தரைமட்ட நீராவி குளிர்ந்து பனிமூட்டம் ஏற்படும். இதனை செயற்கையாகத் தடுப்பது எளிதல்ல.

மரங்களை வெட்டி நிலத்தைப் பொட்டலாக மாற்றும்போது அந்தப் பகுதியின் வானிலை மாறும். காற்றில் மாசு ஏற்படும்போதும் காலநிலை மாற்றம் ஏற்படலாம். இதன் தொடர்ச்சியாகப் பனிமூட்டம் ஏற்படுவது, மழை பொழிவது, பனிமழை பொழிவது என எல்லாமே காலம், இடம் தவறி நடைபெற வாய்ப்பு உள்ளது.

வட, தென் துருவங்களில் நீர் பனிக்கட்டியாக உறைந்து காணப்படுகிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக, பனி உருகி கடல் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.






      Dinamalar
      Follow us