PUBLISHED ON : பிப் 26, 2018

உணவு, உடை, இருப்பிடம் மட்டுமல்லாமல், மருந்துகளுக்காவும் தாவரங்களின் தேவை அதிகமாகிவிட்டது. தற்போதைய சூழலில் 'ஜெரியாட்ரிக்ஸ்' (Geriatrics) எனப்படும் முதியோர் மருத்துவத்தில் மிக அதிகமாகப் பயன்படும் மருந்துகள் 'ஜின்கோ பைலோபா' (Ginkgo Biloba) என்னும் மரத்திலிருந்து பெறப்படுகிறது. இந்த மரம் 'ஜிம்னோஸ்பெர்ம்' (Gymnosperm) எனப்படும் பூக்காத தாவர வகையைச் சேர்ந்தது.
மரம் 40 மீட்டர் உயரம் வரையிலும் வளரும். தடித்த சாம்பல் நிற மரப்பட்டைகளுடன் உள்ள இந்த மரத்தில் அடர்பச்சை நிறத்தில் 12 செ.மீ. குறுக்களவு உள்ள அழகிய விசிறியைப் போன்ற இரண்டு பிரிவுகளாக இருக்கும் இலைகளே 'பைலோபா' எனப்படுகிறது. 'இரண்டாகப் பிளவுபட்ட' என்பதே இந்தச் சிற்றினப் பெயருக்குக் காரணமாகும். ஆண், பெண் மரங்கள் தனித்தனியாக இருக்கும். பழுத்த, சதைப்பற்றுள்ள சூலகம் (Ovary) ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
35 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து எந்த மாற்றமும் இன்றி பூமியில் இருப்பதால் இவற்றிற்கு, 'வாழும் தொல்லுயிர்ப்படிமம்' (Living Fossil) எனப்பெயருண்டு. சீனாவைத் தாயகமாகக் கொண்ட இந்த மரம், கடல் மட்டத்திலிருந்து 1,100 மீட்டருக்கு மேல் வளரக்கூடியது. சீனாவில் இம்மரம் குட்டையாகக் கத்தரிக்கப்பட்டு, அதிகம் வளர்க்கப்பட்டு மருந்துக்கான இடுபொருளாக விற்பனை செய்யப்படுகிறது.
சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 'ஜின்கோ' பல்வேறு நோய்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இலைகளில் இருந்தே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இலைகளில் உள்ள 'ஜின்கோலைடுகள்' (Ginkgolides) ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, மூளையின் செயற்பாடுகளை மேம்படுத்தும். முதியோர்களுக்கு அதிகம் வரும் மறதி மற்றும் நரம்புத்தளர்ச்சியைப் பெருமளவில் குணமாக்கும். நினைவாற்றல் அதிகரிக்கவும், கண், காது, இருதயம், நரம்பு மற்றும் உளவியல் தொடர்பான சிகிச்சைகளூக்கும் ஜின்கோவிலிருந்து மருந்துகள் பெறப்படுகின்றன.
'ஜின்கோயேசியே' தாவரக் குடும்பத்தின் ஒரே ஓர் உயிருள்ள மரமான இதன் இலைகள் பழுத்தபின் அழகிய பொன்மஞ்சள் நிறத்திலிருப்பதால், தற்போது உலகெங்கிலும் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. வறட்சியைத் தாங்கி எல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த ஜின்கோவின் நான்கு மரங்கள் 1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில்கூட சேதமடையாமல் இன்றும் அதே இடத்தில் இருக்கிறது. ஜப்பானியர்கள்இதை 'ஐ சோ' (I-cho)' என்ற பெயரில் குறிப்பிட்டுப் புனித மரமாக வழிபடுகின்றனர். மாசடைந்த சூழலையும்
தாங்கி வளரும் ஜின்கோ, பல நாடுகளில் சாலையோரங்களில் நிழல்தரும்பொருட்டு வளர்க்கப்படுகிறது.
- அ.லோகமாதேவி