
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
ஒரு கிரகத்தின் நிறை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
விக்ரம், 10ஆம் வகுப்பு, சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி, மதுரை.
கொஞ்சம் உத்தி, கொஞ்சம் புத்தி, கொஞ்சம் அறிவியல் இருந்தால், எட்டாத தொலைவில் இருக்கும் விண்மீன்களின் நிறையைக்கூட அளக்கலாம்.
இதற்கெல்லாம் மையமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன
1. நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி F=GMm/r^2
2. ஹென்றி காவன்டிஷ் என்பவரின் ஒரு சோதனை அளவு
நியூட்டனின் பொது ஈர்ப்பு விதியால், பூமியின் நிறையை மதிப்பீடு செய்யலாம். பூமியில் தரை மீது ஈர்ப்பு விசை காரணமாக ஏற்படும் முடுக்க வேகம் 9.8 கி.மீ. / நொடியின் இருமடி. பூமியின் நிறை அதன் மையத்தில் குவிந்துள்ளது எனக் கற்பனை செய்தால் எந்த அளவுக்கு நிறை இருந்தால், பூமியின் தரைப்பரப்பு மீது விசையைச் செலுத்த முடியும் என நியூட்டன் விதி கூறிவிடும்.
F - தரையில் உள்ள ஒரு கிலோ கல் மீது பூமி, நொடிக்கு 9.8 கி.மீ. முடுக்க வேகம் பெருமளவு விசை செலுத்துகிறது.
G - 2 ஒரு கிலோ எடைக் கற்களை ஒரு மீட்டர் தொலைவில் வைத்து இரண்டுக்கும் இடையே எவ்வளவு ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதை அளந்து, பொது ஈர்ப்பு விசையின் மாறிலியைச் சோதனைமூலம் ஹென்றி காவன்டிஷ் கண்டுபிடித்தார்.
r - மையத்துக்கும் கல்லுக்கும் இடையே உள்ள தொலைவு. அதாவது பூமியின் ஆரம்.
m - கல்லின் நிறை ஒரு கிலோ
இதில் இப்போது நமக்குத் தெரியாத தொகை பூமியின் நிறையாகிய M மட்டுமே. மேற்கூறிய சமன்பாட்டில் இந்த விடைகளைப் பொருத்திக் கணக்கிட்டால், பூமியின் நிறை தோராயமாகக் கிடைத்துவிடும்.
இதே சூத்திரத்தைப் பயன்படுத்தி சூரியன், செவ்வாய் போன்ற கோள்களின் நிறையையும் கண்டுபிடிக்கலாம்.
பருவமழை பொய்ப்பதும், அடுத்த ஆண்டுகளில் அபரிமிதமாகப் பெய்வதும் எதனால்? புவி வெப்பமடைவது காரணமா?
எஸ். நஸ்ரின், 11ஆம் வகுப்பு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம், சென்னை.
காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பொழியும் மழையின் மொத்த அளவில் பெருமளவு மாற்றம் இருக்காது. குறிப்பிட்ட அளவுதான் காற்று நீராவியை ஈர்த்துக்கொள்ளும். மேலும் மேலும், கடல் நீராவியைச் செலுத்தும்போது, உலகில் எங்காவது அந்த நீராவி மழையாகப் பொழியும்.
ஓராண்டில் பொழியும் அதே அளவு மழை குறிப்பிட்ட பகுதியில் அடுத்த ஆண்டு பொழிவது இல்லை. இது இயற்கையின் போக்கு. வானிலை என்பது பல்வேறு கூறுகளின் கூட்டு இயக்கம். எனவே, அதில் ஏற்ற இறக்கம் ஏற்படும்.
புவி வெப்பமடைவதால் காலம் மாறி மழை ஏற்படும். குறிப்பிட்ட பகுதியில் பெய்யாமல் அதுவரை மழை பொழியாமல் இருந்த பகுதியில் மழை ஏற்படலாம். ஓராண்டில் மொத்தமாக மழை பொழிந்த நாட்களின் எண்ணிக்கை குறைந்து, ஒரு சில நாட்களிலேயே எல்லா மழையும் கனமழையாகப் பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். சில நாட்கள் மட்டுமே மழை என்றால், தரை மணல் மூலம், பூமிக்கு அடியில் இறங்கும் நீரின் அளவு குறையும்.
தீக்காயங்களால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? தீ விபத்தில் எத்தனை சதவீதம் காயம் அடைந்திருந்தால் காப்பாற்றலாம்?
ம.நாகநந்தினி, 9ஆம் வகுப்பு, சா.இ.நா.எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.
தீக்காயம் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது
1. மேல் தோலில் மட்டும் ஏற்படுவது
மேல் தோல் கருகி சிவப்பு நிறமாகி, எரிச்சல் ஏற்படும். தோல் பெருமளவு சிதைந்திருந்தால் அதன் வழியாக நுண்ணுயிரிகள் புகுந்து விடும் என்பதால், சில சமயம் ஆன்டிபயாடிக் மருந்துகள் வேண்டியிருக்கும்.
2. இரண்டாம் அடுக்கு தோல் வரை ஏற்படுவது
ரத்தத்தில் உள்ள 'பிளாஸ்மா' எனும் திரவம், சேதமடைந்த ரத்தக்குழாய் வழியே கசிந்துவிடும். எனவே, ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரகம், இதயம் போன்றவை பாதிக்கப்படலாம். எனவே, உடனடியாக நோயாளிக்கு குளூக்கோஸ் ஸலைன், ரத்தப் பிளாஸ்மா செலுத்துவது அவசியம்.
3. தோல் பகுதியைப் பாதித்து அதன் கீழுள்ள தசைப்பகுதிக்கும் கீழே ஊடுருவி பாதிப்பது
இது மிகவும் ஆபத்தானது. உள் பகுதியில் தீக்காயத்தில் சிதைந்து அழுகிய தசைப்பகுதிகளில் நுண்ணுயிரிகள் வளர்ந்து உடல் முழுவதும் சீழ்பிடித்து உயிரிழப்பு ஏற்படலாம். இதற்குச் செயற்கை சருமம் அல்லது வேறு ஒருவரின் தோலை வைத்து மருத்துவம் செய்ய வேண்டும்.
தென்னிந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், 30 சதவீதம் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்துக்கொண்டனர். 80 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் பட்டவர்கள் பிழைப்பது கடினம். 30 சதவீதத்திற்கும் மேல் 80 சதவீதத்திற்கும் கீழ் உள்ளவர்களில் சிலர் பிழைத்தனர், சிலர் மடிந்தனர் என அறியமுடிகிறது.
வளர்ந்த நாடுகளில் 60 சதவீதம் அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் பிழைத்துக் கொண்டனர். எந்த வகை தீக்காயம், உடலில் எவ்வளவு அளவு பரவியுள்ளது, பாதிக்கப்பட்டவரது வயது, உடல்நலம் முதலிய தகவல்களைக் கொண்டு, தீ விபத்திலிருந்து பிழைக்கும் வாய்ப்பை அளவிட வழிமுறை உள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 10 லட்சம் பேர் தீவிபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதத்தில் தோல் தானம் செய்யலாம்.

