PUBLISHED ON : மார் 19, 2018

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. வாழும் இடத்துக்குத் தகுந்தவாறு நமது உடலமைப்பு மாறுமா?
மா.மாரிமுத்து, 8ஆம் வகுப்பு, ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை.
தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, சூரியனைத் தினமும் பார்த்து, வாழ்ந்து வருகிறோம். துருவப்பகுதி நாடுகளில், சூரிய உதயம் முன்பின்னாக இருக்கும். இதுபோன்ற பகுதிகளுக்குச் செல்லும்போது, சில சிக்கல்களைச் சந்திப்போம். சூரிய ஒளி இல்லாமல் விழிப்பு வராது, திசைகளை எளிதில் அறிய முடியாது, குழப்ப மனநிலை ஏற்படும். ஆனால், சில காலம் அங்கேயே தங்கி வாழ்ந்தால் அந்த சூழலில் வாழும் நிலைக்கு மாறிவிடுவோம். உயிரியலில் இதனை 'உடலமைப்பு மாற்றம்' எனக் கூறுவது இல்லை.
நீர்ப் பசை குறைவாக இருக்கும் இடத்தில் வளரும் கள்ளிச்செடியில் இலைகள் இல்லாமல் முள் போன்ற அமைப்பே இருக்கும். தாவரவியல்படி இந்த முள் போன்ற அமைப்பே இலைகள். மேலும், இவற்றின் மீது மெழுகு போன்ற பூச்சு தூக்கலாக இருக்கும். நீராவி வெளியேற்றத்தால், நீர் வெளியேற்றாமல் இருக்க இந்த அமைப்பு உருவாகியுள்ளது. இதுபோன்ற பரிணாம மாற்றங்களையே உடலமைப்பு மாற்றம் எனக் கூறுவார்கள். இந்தவகை மாற்றங்கள் ஒரே தலைமுறையில் உருவாவதில்லை. பல லட்சம் ஆண்டுகள் பரிணாம படிநிலை வளர்ச்சியின் தொடர்ச்சியாக மெல்லமெல்ல ஏற்படுகிறது.
2. முட்டையில் வெள்ளைக் கருவும், மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை ஏன்?
மு.கவிபுவனா, 10ஆம் வகுப்பு, சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.
வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் சராசரியாக ஒரே அடர்த்தியைக் கொண்டுள்ளன. எனவே, இரண்டும் கலப்பதில்லை. மேலும் மஞ்சள் கருவைச் சுற்றி மென்படல பொதி உள்ளது. கூடுதலாக மஞ்சள் கருவை நகர்ந்துவிடாமல் நிறுத்தும் இழை சூல்வித்தடி (Chalaza) இருபுறமும் உள்ளது. முட்டையை உடைக்கும்போது இந்த இழை முறிந்து, மென்படலம் கிழிகிறது. அதன்பிறகே வெள்ளையையும் மஞ்சளையும் கலக்க முடிகிறது.
3. திடீர் ஞாபக மறதி ஏற்படுவது ஏன்?
உ.ரா.சீதாராணி, 5ஆம் வகுப்பு, சி.வி.சி.டி.வி.பள்ளி, கானாடுகாத்தான்.
சில சமயங்களில் எதைத் தேடுகிறோம் என்பது தெரியாமலே, புத்தகப் பையைத் திறந்து தேடுவோம். ஒரு சிலரின் முகம் நினைவில் இருந்தாலும், அவரது பெயரை மறந்து விடுவோம். இதெல்லாம் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவமே. இதுபோன்ற ஞாபக மறதிகள் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை.
சைக்கிள் சாவியை எங்கே வைத்தோம் என மறப்பது பெரிதல்ல. ஆனால் அந்தச் சாவியை கையில் வைத்துக்கொண்டு, இது எதற்கான சாவி என்பதை மறப்பதுதான் சற்றே கவலைக்குரியது. தீவிர மறதியான 'அல்சைமர்' நோய் ஏற்படும்போது, நம் வீட்டில் நம்முடன் இருப்பவர்களைக் கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும். பல நினைவுகள் அழிந்து இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத நிலை ஏற்படும்.
சமீப காலங்களில் மூளை குறித்தும், மறதி போன்றவை குறித்தும் குறிப்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. மன அழுத்தம், பதைபதைப்பு, தூக்கம் இன்மை போன்ற பல காரணங்களினால் சாதாரண மறதி ஏற்படுகிறது. தோலில் சுருக்கம் ஏற்படுவது போல, வயது கூடக் கூட மூளையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, வயதாகும்போது புதிய விஷயங்களைக் கற்க கூடுதல் காலம் எடுக்கிறது. காலப்போக்கில் நினைவுகள் மங்கி மறைந்து போகின்றன. இது முதுமையின் விளைவு.
4. எத்தனை வகையான சுவைகள் இருக்கின்றன?
தேன்மொழி, 9ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்துறைப்பூண்டி.
நாக்கு உணரும் அடிப்படைச் சுவைகள்
உவர்ப்பு (உப்பு)
இனிப்பு
புளிப்பு
கசப்பு
ஐந்தாவதாக, உமாமி (Umami) எனும் சுவையை 1908இல் கிக்குனே இகேடா (Kikunae Ikeda) என்பவர் கண்டறிந்தார். இந்த ஐந்து சுவைக்குமான உணர்விகளை நமது நாக்கில் இனம் கண்டுள்ளனர்.
இனிப்புச் சுவை தரும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஒரு வேதிப்பொருள் இருக்கும். நாக்கில் உள்ள இனிப்புச் சுவை உணர்வி பூட்டு என்றால், இந்த வேதிப்பொருள் சாவி. இனிப்பு வேதிப்பொருள் அதற்கான உணர்வியில் பொருந்தும். வேறு சுவைகளின் வேதிப்பொருட்கள் அதில் பொருந்தாது. எனவே, இனிப்பு உணர்வி தூண்டப்பட்டு இனிப்புச் சுவை உணர்வு மூளையில் ஏற்படுகிறது.
காரச் சுவை தரும் வேதிப் பொருட்கள், வலியை உணரும் நரம்பு முனைகளைத் தூண்டி வலியை ஏற்படுத்துகின்றன. எனவே, மிளகாய் போன்றவை ஏற்படுத்தும் காரத்தை 'சுவை' எனத் தனியாகப் பிரிப்பதில்லை.
