PUBLISHED ON : மார் 19, 2018

'லித்தாப்' (Lithop) எனும் கற்செடிகள் தாவர உலகின் அதிசயங்களில் ஒன்று. கற்களில் பூக்கள் பூத்தால் எப்படியிருக்கும்! அதுபோலவே தோற்றமளிக்கின்றன இந்தச் செடிகள். பனிக்கட்டிக் குடும்பம் (Ice Plant Family) எனப்படும் 'அய்சோயேசியே' (Aizoaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை. சதைப்பற்றுள்ள (Succulents - சக்குலன்ட்ஸ்) இந்தச் செடிகள் சிறிய கற்களைப் போலவே பல வண்ணங்களில் தோற்றமளிக்கும்.
* தாவரவியலாளர் 'வில்லியம் ஜான்' என்பவர் 1811இல் தென்னாப்பிரிக்காவின் பாலைநிலங்களில் இந்தச் செடியை முதன் முதலில் கண்டறிந்தார். அதன் பிறகு லித்தாப் செடியின் பலவகைச் சிற்றினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, நமீபியா ஆகிய இடங்களில் பாறைகள் அதிகம் உள்ள வறண்ட நிலப்பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
* மிக மெதுவாக வளரும் இயல்புடையவை. கருப்பு, வெள்ளை, சாம்பல், மஞ்சள், பழுப்பு நிறங்களில் கற்களைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். செடியில் தண்டுகள் இருக்காது. இரண்டு சிறிய சதைப்பற்றுள்ள இலைகள் காணப்படும். அடிப்பகுதி இணைந்து எதிரெதிராக இலைகள் இருக்கும். காற்றின் ஈரப்பதத்திலிருந்து நீரைச் சேமித்துக்கொள்ளும். ஆண்டுக்கு ஒருமுறை இலைகள் உதிர்ந்து புதிதாக இரண்டு இலைகள் உருவாகும். மெல்லிய நூல்போன்ற வேர்கள் மண்ணுக்கு அடியில் இருக்கும். சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கை செய்யும்.
* இலைகளுக்கு இடையில் உள்ள வளர்நுனியில் (Meristem - மெரிஸ்டெம்) மஞ்சள், வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். ஓரிடத்தில் வளரும் செடிகள் அனைத்தும் ஒரே சமயத்தில் பூக்கும். முளைத்து 4 வருடங்களில் பூக்கத் தொடங்கும். பூக்களை வைத்தே. இவை செடி எனத் தெரிந்துகொள்ளலாம். செடியின் உலர்பழங்கள் ஈரம் பட்டால் வெடித்துச் சிதறும் தன்மை உடையவை. பழம் வெடிப்பதன் மூலம் சிதறும் சிறிய விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும்.
* இரண்டாகப் பிளவுபட்ட கூழாங்கற்கள் போலத் தோற்றமளிப்பதால் 'கூழாங்கல் செடி' (Pebble plants - பெபிள் பிளான்ட்ஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.
* 'டிஷ் கார்டனிங்' (Dish Gardening) முறையில் ஆழம் குறைவான கிண்ணங்களில் கூழாங்கற்களுக்கு இடையில் வைத்து செடியை வளர்க்கலாம். இணையம் வழியாக இந்தச் செடி விற்பனை செய்யப்படுகிறது. அழகுக்காக உலகம் முழுவதும் விரும்பி வளர்க்கப்படுகிறது.
- அ.லோகமாதேவி
