PUBLISHED ON : மார் 19, 2018

பரந்த பாலைவனத்தின் தகிக்கும் மணற்பரப்பில் காணப்படும் மிகப் பெரிய பாறை 'உலுரு' (Uluru). பார்ப்பதற்கு பிரம்மாண்டமான சிவப்புக் கூடாரம் போல இருக்கும்.
வடக்கு ஆஸ்திரேலியாவின் பகுதியில் 'ஆலிஸ் ஸ்பிரிங்ஸ்' (Alice Springs) என்ற ஊரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரே பாறையால் ஆன இந்தக் குன்று உலகிலேயே மிகப் பெரியது. சிவப்பு வண்ணத்தில் மட்டுமில்லாமல் அவ்வப்போது நிறம் மாறிக் காட்சி தருவது இதன் வியப்பான அம்சம்.
இந்தப் பாறைக் குன்றின் இயற்கை நிறம் கருங்கல் பாறைகளுக்கே உள்ள நீலம் கலந்த சாம்பல் நிறம்தான். ஆனால், வெயில் படும்போது அது சிவப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. நண்பகலில் பழுப்பு நிறமாகவும், மாலைப் பொழுதில் நீலம் கலந்த சிவப்புப் பாறையாகவும் தோற்றமளிக்கும். பாறையில் உள்ள தனிமங்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கிக்கொள்ளும் போது ஏற்படும் மாற்றத்தாலேயே இப்படி வெவ்வேறு நிறங்களில் தோற்றமளிக்கின்றன.
இந்த அதிசயப் பாறையை நில அளவியலாளர் 'வில்லியம் கோஸ்' (Surveyor William Gosse) என்பவர் முதன்முதலில் 1873இல் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினார். தெற்கு ஆஸ்திரேலியாவின் அப்போதைய தலைமைச் செயலரான 'சர் ஹென்றி ஏயர்ஸ்' (Sir Henry Ayers) என்பவர் பெயரை அந்த கற்பாறைக்குச் சூட்டினார். இதன் காரணமாக 'ஏயர்ஸ் பாறை' (Ayers Rock) என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் இந்தப் பகுதியில் 'உலுரு - கட்டா ஜூட்டா தேசியப் பூங்காவும் (Uluru - Kata Tjuta National Park) அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் அதிசயமாக விளங்கும் இந்தப் பாறை 'யுனெஸ்கோ' (UNESCO) அமைப்பால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ப.கோபாலகிருஷ்ணன்
