PUBLISHED ON : ஏப் 09, 2018

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. சூரியன், வானவில் போன்றவை பல்வேறு நிறங்களில் தெரியக் காரணம் என்ன?
பி.அபர்ணா, 12ஆம் வகுப்பு, கே.எம்.சி. பப்ளிக் சீனியர் மேல்நிலைப் பள்ளி, பெருமாநல்லூர், திருப்பூர்.
ரேடியோ அலைகள், கைபேசி செயற்படும் மைக்ரோவேவ் அலைகள், புறஊதாக்கதிர் என, பல்வேறு மின்காந்த அலைகள் இருக்கின்றன. அவற்றைப்போல, ஒளியும் ஒருவகை மின்காந்த அலைகளைக் கொண்டுள்ளது. ஒளி அலைகளின் அலைநீளத்தைப் பொறுத்தே, அதன் நிறம் அமையும்.
700-635 nm : சிவப்பு
635-590 nm : ஆரஞ்சு
590-560 nm : மஞ்சள்
560-520 nm : பச்சை
520-490 nm : நீலம்
490-450 nm : கருநீலம்
450-400 nm : ஊதா
பலப்பல அலைநீள ஒளியின் கலவைதான் சூரிய ஒளி. எனவேதான், சூரிய ஒளி வெண்மை நிறத்தில் உள்ளது. வானவில் ஏற்படும்போது அல்லது ஒளி முப்பட்டகத்தின் உள்ளே செல்லும்போது, நிறப்பிரிகை ஏற்பட்டு பல்வேறு அலைநீளங்கள் கலவையிலிருந்து பிரிகின்றன. எனவே, பல்வேறு நிறங்கள் வானவில்போல காட்சி தருகின்றன.
சூரியனில் இருந்து வரும் கூடுதல் அலைநீளம் உடைய ஒளி அலைகள் பூமியை வந்தடைகின்றன. குறைந்த அலைநீளம் உடைய நீல, ஊதா நிற ஒளிகள் வாயுக்களால் உறிஞ்சப்படுகின்றன. உறிஞ்சப்பட்ட ஒளி அலைகள் தெறிப்பு அடைந்து வானில் நீல நிறமாகத் தோன்றுகின்றன.
2. பாதிப்புகள் இருந்தும், கடைகளில் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்யக் காரணம் என்ன?
து.சபர்மதி, 7ஆம் வகுப்பு, ம.நா.ரா.தே. மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவில்லிபுத்தூர்.
நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இந்தப் பைகளின் தேவை இருக்கிறது. பயன்படுத்த எளிமையாகவும், அடைத்து விற்பனை செய்ய இலகுவாகவும் இருப்பதுதான் இதற்குக் காரணம். உணவுப் பொருட்கள் கெட்டுவிடாமலும், பேக்கேஜிங் எளிதில் கிழியாமலும், புழு, பூச்சிகள் உள்ளே செல்லாமலும் இருக்கும் என்ற கருத்தில்தான், அதிகமாக நெகிழிப் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். முற்காலத்தில் செய்ததுபோல பேப்பர் அல்லது இலைகளில் பொட்டலம் கட்டுவது இப்போதைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு எளிதானது அல்ல. இருந்தாலும், பேக்கேஜிங் செய்யப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்தான் சூழலைப் பெருமளவு பாதிக்கின்றன. நெகிழிக் குப்பையை எரிப்பதால், புற்றுநோயை ஏற்படுத்தும் டையாக்சின் வாயு வெளியேறுகிறது.
இந்தப் பைகள், வேளாண் நிலங்களை நாசமாக்கி அதன் வளத்தைக் குறைக்கின்றன. இதைத் தவிர்க்க மறுசுழற்சி செய்யக்கூடிய துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். நீங்களோ அல்லது வீட்டில் யார் கடைக்குச் சென்றாலும் மறக்காமல் துணிப்பைகளை எடுத்துச் சென்றால், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை ஓரளவு குறைக்கலாம்.
3. LED பல்புகள் பல வண்ணங்களில் எவ்வாறு எரிகின்றன?
கோ.ஆ. கவின், 7ஆம் வகுப்பு, வித்யோதயா பள்ளி, பொள்ளாச்சி.
LED (Light emitting diode) தொழில்நுட்பம் மின் விளக்குகளில் மட்டுமல்ல, அன்றாடம் பயன்படுத்தும் லேப்டாப், செல்போன், குளிர்சாதனப் பெட்டி, தெரு விளக்குகள், டார்ச் லைட்டுகள் என, பல பொருட்களில் பயன்படுகிறது.
எந்தவிதமான குறைமின்கடத்தி வேதிப் பொருட்களைக் கொண்டு LED (Light emitting diode) பல்புகள் தயாரிக்கப்படுகின்றனவோ, அதைப் பொறுத்தே அவை வெளியிடும் நிறங்களும் அமையும். அலுமினியம், காலியம், இண்டியம், பாஸ்பேட் கலந்து தயார் செய்யும் LED பல்புகள் அவற்றின் கலவை விகிதம் சார்ந்து சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஒளியை உமிழ்கின்றன. இண்டியம், காலியம், நைட்ரைடு கலவை கொண்டு பச்சை, நீலம், வெள்ளை நிற ஒளியை உமிழும் LED பல்புகள் தயாரிக்கப்படுகின்றன.
4. விலங்குகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உண்டா?
ஆ.முகமது தௌபிக், 8ஆம் வகுப்பு, குஷால் சந்த் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம்.
உயிரைக் காப்பதில் வியர்வைக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. வெப்பத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், உடலின் உப்பு, தண்ணீரின் அளவைச் சமநிலையில் வைக்கவும் வியர்வை வெளிப்படுகிறது. எல்லா விலங்குகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.
இருவகை வியர்வைச் சுரப்பிகள்
1. உடல்பகுதி வியர்வைச் சுரப்பி (eccrine), 2. முடிப்பகுதி வியர்வைச் சுரப்பி (apocrine)
மனிதனுக்கும், மனிதக் குரங்கு இனத்துக்கும், உதடு போன்ற சில இடங்களைத் தவிர, உடல் முழுவதும் இரண்டு சுரப்பிகளும் உள்ளன. மனிதக் குரங்கு சாராத வேறு விலங்குகளுக்கு, கை, கால், பாதப் பகுதிகளில் மட்டுமே வியர்வைச் சுரப்பிகள் அமைந்துள்ளன.
வியர்வைக்கு வாசனை கிடையாது. எண்ணெய்ச் சுரப்பிகள் சுரக்கும் எண்ணெயுடன் வியர்வையும் கலந்து, பாக்டீரியாவும் சேர்வதால் வியர்வையில் துர்நாற்றம் ஏற்படுகிறது.
