PUBLISHED ON : ஏப் 09, 2018

டெய்சி ஆஷ்ஃபோர்டு (Daisy Ashford) - (3 ஏப்ரல் 1881 - 15 ஜனவரி 1972)
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டெய்சி ஆஷ்ஃபோர்டு. இயற்பெயர் மார்க்ரெட் மேரி ஜூலியா டெவ்லின். மிகச்சிறு வயதிலேயே கதை சொல்லும் திறன் பெற்றிருந்தார். முதல் நாவலான 'இளம் பார்வையாளர்கள்' (The Young Visitors) எழுதியபோது, அவரது வயது ஒன்பதுதான்.
அவரே மறந்துவிட்ட இந்தப் படைப்பை, அவருடைய நண்பர்கள் பலரும் வாசித்துள்ளனர். எழுதப்பட்டு 28 ஆண்டுகள் கடந்த பிறகு, 'சாட்டோ & விண்டஸ்' (Chatto & Windus) என்ற பதிப்பகம் இந்நாவலைப் பதிப்பித்து வெளியிட்டது. ஒரு சிறுமி, தனது குழந்தைப் பருவத்தில் எழுதிய படைப்பு என்பதால், அதற்கே உரிய எழுத்துப் பிழைகள், நிறுத்தற்குறிப் பிழைகள் நாவல் முழுக்க நிறைந்து கிடந்தன.
தலைப்பில் இருந்த எழுத்துப்பிழை உட்பட, பெரும்பாலான தவறுகள் திருத்தப்படாமலேயே இந்நாவல் 1919இல் வெளியானது. அப்பிழைகள் படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ததால், வாசகர்கள் நாவலைக் கொண்டாடினார்கள். வெளியான ஆண்டிலேயே
18 பதிப்புகள் கண்டது. பின்னர், அமெரிக்கா உட்படப் பல்வேறு நாடுகளிலும் வெளியானது. வெளியான அடுத்த ஆண்டே நாடகமாகவும் மாற்றப்பட்டு அரங்கேற்றப்பட்டது.
இந்த நாவலில் 'ஆல்ஃப்ரெட் சால்டீனா' (Alfred Salteena) என்ற, நடுத்தர வயது ஆண் ஒருவர், தனது சமூக அந்தஸ்தை நிலைநிறுத்துவதற்காகப் போராடுவது பற்றி டெய்சி எழுதியிருந்தார். 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய நடைமுறைகளை ஒரு சிறுமி எப்படிப் பார்த்தாள் என்பதை இந்நாவல் பேசியது. இந்த நாவலின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் எழுதி வைத்திருந்த படைப்புகள் சில வெளியாகின.
ஆனால், அவர் தனது வாழ்வின் பிற்பகுதியில் வேறு படைப்புகள் எதையும் எழுதவில்லை.
டெய்சி ஆஷ்ஃபோர்டு படைப்புகள்
The Young Visiters, or,
Mr Salteena's Plan London
Daisy Ashford: Her Book
Love and Marriage:
Three Stories
Where Love Lies Deepest
The Hangman's Daughter and Other Stories
- ஜி.சரண்
