PUBLISHED ON : மே 14, 2018

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. பாலைவனப் பயிர்களான ஈச்சம், பனை போன்ற மரங்கள் எப்படி நீரைப் பெறுகின்றன?
இ.இன்சமாம், 6ஆம் வகுப்பு, திருச்சி.
வறண்ட மணற்பாங்கான இடங்களில் வளரும் பாலைவனத் தாவரங்கள் சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. அவை, தமக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பெறுவதற்கு அதிக வெப்பநிலை, ஒளிச்செறிவு, காற்றுவீச்சு, குறைந்த நீர் போன்ற சிக்கல்களை எதிர்க்கும் நுட்பங்களைக் கையாள்கின்றன. பொதுவாக, பாலைவனத்தில் காற்று உலர்ந்தும் அதிக வெப்பத்துடனும் இருக்கும். சூரிய ஒளியின் அடர்த்தியும் அதிகமாக இருக்கும். ஆகவே, கிடைக்கிற நீரை உறிஞ்சி சேமிப்பதே பாலைவனத் தாவரங்களின் முக்கியப் பணி.
இது போன்ற காரணங்களைச் சமாளிப்பதற்கு உதவியாக, அவற்றின் இலை அமைப்பு அமைந்திருக்கிறது. அதனுடைய நிழல் அந்த மரத்தின் மீதே விழும். மரம் நிழலில் இருப்பதால் மரத்திலிருந்து குறைவான நீர்தான் ஆவியாகும். இவ்வாறு கிடைக்கிற நீரை வைத்து பாலைவனப் பயிர்கள் தங்களது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
2. பிளாஸ்டிக் தயாரிப்பதற்கு என்னென்ன மூலப்பொருட்கள் தேவை?
எம்.தாகிரா நூர், நுண்ணியிரியல் பிரிவு, என்.எஸ். கல்லூரி, தேனி.
C2H4 எனப்படும் எத்திலீன் போன்ற மூலக்கூறுகள் ஒற்றைப்படிகள் (Monomers) எனப்படும். முத்துகளை வரிசையாக மாலையில் கோப்பது போல, பல எத்திலீன் மூலக்கூறுகளைப் பிணைத்தால் வருவது பாலிஎத்திலீன் எனப்படும் பாலித்தீன். இதனை பல்லுறுப்பி (polymers) மூலக்கூறு என்பார்கள். ஆறு அணுக்கள் கொண்ட ஒற்றைப்படிகளின் தொகுப்பே பாலித்தீன். ஆனால், நைலானில் உள்ள ஒற்றைப்படிகள் ஒவ்வொன்றிலும் 38 அணுக்கள் உள்ளன. இதுபோல பற்பல அணு எடை கொண்ட ஒற்றைப்படிகளைப் பயன்படுத்தி பல்லுறுப்பித் தொடரை உருவாக்கலாம்.
PET, HDPE, PVC, LDPE, PP என எந்தவகை பிளாஸ்டிக் தயாரிக்கிறோமோ அதற்கு ஏற்றதுபோல மூலப்பொருள் வேண்டும். பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு கச்சா எண்ணெய் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. நிலக்கரி போன்ற பொருட்களும் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன. ஒற்றைப்படிகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி முப்பரிமாணத்தில் ஒட்டுவேலை செய்தால், வெப்பத்தால் இறுகும் தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக் (thermoset plastic) கிடைக்கும். இயற்கையில் கிடைக்கும் ரப்பர், பிசின் போன்ற பொருட்கள் எல்லாம் பிளாஸ்டிக் போல பல்லுறுப்பி மூலக்கூறுகளே.
3. AMBULANCE வாகனத்தில் எழுத்துகள் இடவலமாக எழுதப்பட்டு இருப்பது ஏன்?
த.அ.அப்துல் கதீர், 8ஆம் வகுப்பு, சி.கே.உயர்நிலைப் பள்ளி, கடலூர்.
வாகனம் ஓட்டும்போது பின்னால் என்ன வாகனம், எவ்வளவு தொலைவில், எவ்வளவு வேகத்தில் வருகிறது என்பதைத் தலையைத் திருப்பிப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது. வாகனத்தில் பின்புல ஆடிகளாக (side mirror) பொருத்தப்பட்டுள்ள குவி ஆடிகளைப் பார்த்தே, பின்னால் வரும் வாகனங்களின் நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவசர ஊர்திகளில் AMBULANCE என்று நேராக எழுதப்பட்டிருந்தால், அது வாகனத்தின் கண்ணாடியில் எதிரொளிக்கப்பட்டு இடவல மாற்றம் கொண்ட எழுத்துகளாகத் தெரியும். இதைத் தவிர்க்க, AMBULANCE போன்ற வாகனங்களில், கண்ணாடியில் தெரிவதுபோல இடவல மாற்றத்துடன் எழுதப்படுகிறது. இதனால், ஓட்டுநர் குழப்பமடையாமல் உடனடியாகப் புரிந்து அவசர ஊர்திக்கு வழிவிடுவார்.
4. செயற்கை வைரம் எவ்வாறு, எதற்காகத் தயாரிக்கப்படுகிறது?
தி.சச்சின்ராஜா, 7ஆம் வகுப்பு, கிட்ஸ் கிளப் பள்ளி, திருப்பூர்.
இயற்கை வைரம் எப்படி உருவாகிறதோ, அதே சூழலை ஆய்வகத்தில் ஏற்படுத்தி, செயற்கை வைரம் தயாரிக்கப்படுகிறது. செயற்கை வைரம் செய்ய, மிகச்சிறிய அளவு இயற்கை வைரம் தேவைப்படும். இயற்கையில் மிகு வெப்பநிலையில் தூய கார்பனை அழுத்தும்போது, அதன் அணுக்கள் இணைந்து துல்லியமாக, குறிப்பிட்ட வகையில் ஒன்றன்மீது ஒன்று படர்ந்து, ஒருவகை கார்பன் படிகம் உருவாகிறது. இதுவே வைரம். அதுபோல தொழிற்சாலையில் சிறு வைர துணுக்கை விதையாக வைத்து, அதன் மீது மிகு வெப்பநிலையில் கார்பன் அணுக்களை பிளாஸ்மா வடிவில் செலுத்துவார்கள். அந்த அணுக்கள் ஒன்றன்மீது ஒன்றாக மெதுவாகப் படிந்து, படிகம் வளரும். ஒரு வைர படிகம் வளர சுமார் பத்து வாரங்கள் கூட ஆகும். 1940களில் இருந்து செயற்கை வைரம் தயாரிக்கப்படுகிறது. ஆடம்பர அணிகலனுக்காக மட்டுமின்றி பல்வேறு நுட்ப கருவிகள் செய்யவும் வைரம் தேவைப்படுகிறது. எனவே, செயற்கை வைரம் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இயற்கை வைரத்தை எடுக்க ஆழமான சுரங்கங்கள் தோண்ட வேண்டும். செயற்கை வைரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவகையில் இயற்கை கனிம வளத்தைப் பாதுகாக்கிறோம் என சிலர் கூறுகின்றனர்.
