PUBLISHED ON : மே 21, 2018

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. கேமரா போல நம் கண்களும் எல்லாவற்றையும் பிக்ஸல் (Pixel) முறையில்தான் பார்க்குமா?
எஸ்.சூர்யா, 9ஆம் வகுப்பு, யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.
சுமார் 30 லட்சம் கூம்பு வடிவ ஒளி உணர்வி செல்கள், ஒளியைக் குவித்து நிறங்களை வேறுபடுத்தும். சுமார் 6 கோடி குச்சி வடிவ ஒளி உணர்வி செல்கள் ஒளியைக் குவித்து, நேர்த்தியான காட்சியை ஏற்படுத்தும். இப்படித்தான் விழித்திரையில் பிம்பம் ஏற்படுகிறது. ஒளி உணர்வி செல்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 6.3 கோடி. எனவே, சுமார் 63 மெகா பிக்ஸல் காட்சி நம் விழித்திரையில் உருவாகிறது.
ஒவ்வொரு கணமும் 6.3 கோடி ஒளி உணர்வி செல்களிடம் இருந்தும் மூளைக்குத் தகவல் செல்வதில்லை. 10 முதல் 30 குச்சி வடிவ ஒளி உணர்வி செல்கள் தொகுப்பாக இருக்கும். குச்சி வடிவ ஒளி உணர்வி செல்களின் தொகுப்பு 30 லட்சம் எனலாம். எனவே, சுமார் 6 மெகா பிக்ஸல் தகவல் விழித்திரையில் இருந்து மூளைக்குச் செல்கிறது.
விழித்திரையின் அனைத்துப் பகுதிகளிலும் குவிந்த காட்சி ஏற்படுவதில்லை. நாம் உற்றுநோக்கும் பகுதி குவிந்த காட்சியாகவும், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சற்றே தெளிவற்ற விளம்புக் காட்சியாகவும் உருவாகும். குவிந்த காட்சி உருவாகும் விழிப்புள்ளி அருகே 30 லட்சம் ஒளி உணர்வி செல்கள் உள்ளன. காட்சியில் குவிந்த தெளிவான பிம்பம் இங்கேதான் உருவாகிறது. மேலும், விழித்திரையில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு இணைப்புப் பகுதியான பார்வைத்தட்டு பகுதியில் ஒளி உணர்வி செல்களே இல்லை. எனவே, இங்கே காட்சி பிம்பம் ஏற்படாது.
இறுதியாக, விழி அனுப்பும் பிம்பத்தைச் சரிபார்த்து, பார்வைத்தட்டு பகுதியில் விட்டுப்போகும் காட்சியையும் கூட்டி, இணைந்த பார்வைக் காட்சி என்பதை மூளைதான் உருவாக்குகிறது.
2. தேள், பாம்பு போன்றவை தங்களது உடலுக்குள் விஷத்தை எவ்வாறு உருவாக்குகின்றன?
டி.சிவகிஷன், 7ஆம் வகுப்பு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடப் பள்ளி, மயிலாப்பூர்.
விஷம் என்பதும் ஒருவகையான புரதமே! உணவைச் சுவைத்து உண்பதற்காக நமது வாயில் எச்சில் ஊறும். அதில் சிலவகை நொதிகள் உள்ளன. அவை உணவில் கலந்து, உணவின் மூலக்கூறுகளைச் சிதைத்து, எளிய புரதங்களாக மாற்றுகின்றன. பாம்பு போன்ற உயிரினங்களில், எச்சில் சுரக்கும் உறுப்பு மாறுதல் அடைந்து, நஞ்சுப் பொருட்களை உமிழும். ராஜநாகத்தின் விஷத்தை வேதியியல் ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் சுமார் 50-,000 புரதங்களின் கூட்டுக்கலவை இருப்பது கண்டறியப்பட்டது.
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருந்தாலும், அதைச் சிறந்த வலி நிவாரணியாகப் பயன்படுத்தலாம். தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நரம்பு மண்டலம், சதைப் பகுதிகளில் ஊடுருவி, வலியை முற்றிலுமாக அகற்ற உதவும். எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
3. கடலைப் போல ஏரி குளங்களில் அலை வருவதில்லையே, ஏன்?
டி.மதுமிதா, 8ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, மானாமதுரை.
நிலவின் ஈர்ப்பு விசையால் (Moon's gravitational force) கடலில் அலைகள் தோன்றுகின்றன. ஈர்ப்பு விசையால் நீர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்வதே அலைகள்.
அலையின் உயரத்தைத் தீர்மானிக்கும் காற்றின் காரணங்கள் இவை:
* எவ்வளவு வேகமாக வீசுகிறது?
* எவ்வளவு காலமாக வீசுகிறது?
* நீர் பரப்பின் மீது எவ்வளவு தொலைவு வீசுகிறது?
கடலில் நீண்ட தொலைவு காற்று வீசுவது போல, ஏரி குளங்களில் வீசுவதில்லை. அதுமட்டுமன்றி கடலோடு ஒப்பிடும்போது, ஏரி நீரின் பரப்பும் கனஅளவும் குறைவாக இருப்பதால் அலைகள் ஏற்படுவதில்லை.
4. தண்ணீரில் கற்களைப் போடும்போது குமிழ்கள் தோன்றக் காரணம் என்ன?
எஸ்.சிவகாயத்ரி, 11ஆம் வகுப்பு, ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, போடி.
வளி மண்டலம் என்பது, பூமியின் மேற்பரப்பைச் சுற்றியுள்ள காற்றுப் பகுதி. காற்று நிறைந்திருக்கும் எல்லாப் பரப்புகளிலும் ஓர் அழுத்தம் இருக்கும். அந்த வகையில், நீருக்குள் கற்களைப் போடும்போது, அதனுடன் காற்றும் சேர்ந்தே உள்ளே செல்கிறது. அந்தக் காற்றே நீருக்குள் இருந்து குமிழியாக வெளிவரும்.
சில கற்களில் சிறுசிறு நுண் துளைகள் இருக்கும். நீருக்குள் செல்லுபோது அந்தத் துளைகளில் உள்ள காற்று வெளியேறுவதாலும் குமிழ்கள் தோன்றக்கூடும். குமிழ்கள் உருவாவதுபோல நீரில் கற்களை எறிந்தால் அலைகள் வட்ட வடிவமாக வெளிநோக்கிச் செல்லும். இவை ஈர்ப்பு அலைகள் எனப்படுகின்றன.
