தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க

வெங்கியைக் கேளுங்க

வெங்கியைக் கேளுங்க


PUBLISHED ON : ஜூன் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

தகவல்கள், படங்கள் போன்றவற்றை மூளை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்கிறது?

எஸ். சத்யா, எஸ்.என்.வி. மெட்ரிக் பள்ளி, கோவை.


நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மூளையில் சேமிக்க நமது புலன்கள் உதவுகின்றன. ஒருவரை முதல் முறையாகப் பார்க்கும்போது அவரின் நிறம், உருவம், உயரம் போன்றவற்றை கண் தான் மூளைக்கு அனுப்பும். இந்தத் தகவல்கள் நியூரான்கள் (neurons) எனும் நரம்பு செல்கள் வழியாகக் கடத்தப்படும். ஒவ்வொரு நினைவுக்கும் ஏற்றபடி பல நியூரான் செல்கள் வலைப்பின்னல் போல ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்கும். அப்போது ஒரு வேதியியல் மூலக்கூறு வெளிப்பட்டு, நரம்பு செல்களுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்தும். இந்த இணைப்புக்கு சினப்சே (synapse) என்று பெயர். இந்த இணைப்பு உறுதியாகும்போது, சேமித்த நினைவுகள் மூளையில் பதியும். வலைப்பின்னல் அறுந்துவிடாமல் இருக்கும்வரை மூளையில் அந்த நினைவு இருக்கும். வலைப்பின்னலில் தொய்வு ஏற்பட்டால் மறதி ஏற்படும். மறதியைத் தவிர்க்க மூளையில் சேகரிக்கும் தகவல்களை ஆழமாகப் பதியவைக்க வேண்டும். தகவல்களைத் திரும்பத்திரும்ப நினைவுகூர்வதால், அந்தத் தகவலுக்கான இணைப்பு நரம்பு செல்களில் உறுதியாகி எளிதில் ஞாபகத்தில் இருக்கும்.

மூன்று வகை நினைவுகள்

1. புலன் சார் (Sensory): மிகச் சில நொடி நினைவில் நிற்பவை

2. குறுகிய காலம் (Short-Term): ஒரு நிமிடம் வரை நினைவில் இருக்கும்

3. நீண்ட காலம் (Long-Term): மூளை நன்றாகச் செயற்படும் வரை மறக்காது

H2O என்கிற வேதியியல் வாய்ப்பாட்டை வைத்து நீரை உருவாக்க முடியாதா?

என்.பவித்ரா, 10ஆம் வகுப்பு, மாருதி வித்யா மந்திர், புதுச்சேரி.


முடியுமே! லவாய்சியர் எனும் பிரெஞ்சு வேதியியல் விஞ்ஞானி, இரு குழாய்கள் வழி சூடான வெப்பத்தில் ஆக்சிஜன், ஹைட்ரஜனை ஒரே புள்ளியில் சந்திக்கச் செய்தபோது, ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் வேதி வினைபுரிந்து, புதிதாக நீர் உருவானது. இந்த ஆய்வில் பயன்பட்ட ஆக்சிஜன், ஹைட்ரஜனின் நிறை, அதில் உருவான நீரின் எடைக்குச் சமமாக இருந்தது. இதிலிருந்துதான் நீர் என்பது H2O என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் முதலில் வந்தனர். சோதனைச்சாலையில் இவ்வாறு உருவாக்க முடியும் என்றாலும், நடைமுறையில் உருவாக்க பெருமளவு ஆற்றலைச் செலவழிக்க வேண்டும்.

செயற்கையாக நீரை உருவாக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்ந்து மழைநீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த மழை நீரை அலட்சியமாக வீணாக்காமல் சேமிக்க நாம் ஒவ்வொருவரும் பழக வேண்டும்.

கண்ணீர் எப்படி, எதற்காக வருகிறது?

க.நி. தர்ஷிதா, 11ஆம் வகுப்பு, இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.


கண்கள் உலர்ந்துவிடாமல் ஈரமாக இருப்பதற்காக, நமது கண்களில் எப்போதும் சிறிதளவு கண்ணீர் கசிந்து கொண்டுதான் இருக்கும். துக்கம், வலி, வேதனை, மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிப் பெருக்கில் கண்ணிலிருந்து கண்ணீர் வரும். எல்லாத் தசைகளையும் போலவே கண்ணிலும் நுண்ணிய ரத்த நாளங்கள் உள்ளன. அவை மெலிதாக இருப்பதால், எளிதில் புலப்படாது.

கண்ணீர்ச் சுரப்பி கூடுதலாகக் கண்ணீர் சுரக்க வேண்டும் எனில், கூடுதல் ரத்தம் பாயவேண்டும். இதன் காரணமாக கண்ணீர் சிந்தும் சமயத்தில் ரத்த நாளங்கள் விரிகின்றன. இதன் தொடர்ச்சியாக, கண் சிவப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அதேபோல, கண்ணீர் கூடுதலாகச் சுரக்கும்போது, கண்களின் மேல் தசையில் திசுக்கள் கூடுதல் நீரை உள்வாங்கி பெரிதாகி விடும். எனவேதான், அழுது அழுது கண்ணீர் விடும்போது கண் வீங்கியது போலத் தெரியும்.

விமானப் பயணத்தின்போது, செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது ஏன்? கப்பல் பயணத்திலும் இதுபோல கட்டுப்பாடுகள் உண்டா?

வி. சந்தானகோபாலன், மதுரை.


நவீன விமானங்கள் ஏவியானிக்ஸ் (avionics) எனும் வான் பயண மின்னணுவியல் கொண்டு இயக்கப்படுகின்றன. அதற்கான மின்னணுக் கருவிகள் விமானத்துக்குள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு இருக்கும். அவை, வயர்லெஸ் மூலம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும். பொதுவாக, நாம் பயன்படுத்தும் செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்கள் ரேடியோ கதிர்களை வெளிப்படுத்தும். சில சமயங்களில் நம் சாதனங்களில் இருந்து வெளிவரும் ரேடியோ கதிர்கள் ஏவியானிக்ஸ் மின்னணுக் கருவிகளின் இயக்கத்தைப் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, விமானத்தில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். இவ்வாறு பயன்படுத்தியதால் விபத்து நடந்தது என்று இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. ஆனாலும் பாதுகாப்பு கருதி இவ்வாறு செய்யப்படுகிறது.

அதுபோல, கப்பலை இயக்க ஏவியானிக்ஸ் போன்ற மின்னணு தொழில்நுட்பங்கள் பயன்படாது. ஆகவே, கப்பல் பயணத்தின்போது மின்னணு சாதனங்கள் உபயோகிக்கத் தடைகள் இருப்பதில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us