தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க

வெங்கியைக் கேளுங்க

வெங்கியைக் கேளுங்க


PUBLISHED ON : ஜூலை 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

மின்னல் என்பதும் மின்சாரம்தானே? சமையல் கேஸ் சிலிண்டர்கள் மீது விழுந்தால் தீப்பற்றுமா?

பி.ஜானகி, கோவை.


ஆக்சிஜன் இல்லாத நிலையில், சமையல் வாயு எரியாது. எனவே, கேஸ் சிலிண்டருக்குள் இருக்கும் வரை சமையல் எரிவாயு தீப்பற்ற வாய்ப்பே இல்லை.

கேஸ் சிலிண்டர் மீது மின்னல் விழுந்தால், நிலை மின்சாரம் உலோகத்தாலான சிலிண்டர் முழுவதும் பரவும். சிலிண்டரின் அடிப்பாகம் தரையைத் தொட்டு இருப்பதால் எளிதில் எர்த் (Earth) ஆகிவிடும். தடிமனான உலோகத் தட்டு கொண்டு சிலிண்டர் தயாரிக்கப்படுவதால், அதன்மீது மின்சார ஓட்டம் ஏற்பட்டாலும் கூடுதல் வெப்பம் உருவாகாது. எனவே, எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

ஏதாவது, காரணத்தில் சிலிண்டர் உடைந்து எரிவாயு வெளியேறி, அந்தச் சமயத்தில் மின்னல் தாக்கினால் தீப்பற்றலாம். ஆனால், அதற்கான வாய்ப்பும் குறைவு. உயரமான கம்பம், கட்டடம் போன்றவற்றின் மீதே முதலில் மின்னல் விழும். அதுவும் வீட்டுக்கு உள்ளே இருக்கும் சிலிண்டர் மீது நேரடியாக மின்னல் விழுவது அரிதினும் அரிது.

பூமியில் இருப்பதால் சந்திரனின் ஒரு பகுதி மட்டும்தான் நமக்குத் தெரிகிறது. எப்போது முழுவதையும் காணலாம்?

எஸ். மதுமிதா, 9ஆம் வகுப்பு, அபாகஸ் மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.


ஒரு கட்டடத்தின் முன்னால் நாம் நிற்கும்போது, அதன் முன் பகுதி மட்டுமே நமக்குப் புலப்படும். அதன் பின் பகுதியைக் காண வேண்டும் என்றால் அந்தக் கட்டடத்தைச் சுற்றி பின்னால் சென்று பார்க்க வேண்டும் அல்லது அந்தக் கட்டடம் தன்னைத்தானே சுற்றி பின்பக்கத்தை நமக்குக் காட்டவேண்டும்.

அதுபோல உருண்டை வடிவான நிலாவும் தனது ஒரு முகத்தை பூமி நோக்கி வைத்துள்ளது. ஒரு பகுதி முகத்தைக் காட்டியபடி பூமியை ஒரு மாதத்தில் வலம் வருகிறது. நிலவின் மறுபுறத்தைக் காண வேண்டும் என்றால், விண்கலம் எடுத்து வான்வெளியில் பயணம் செய்து நிலவின் பின்புறமாகச் சென்றுதான் பார்க்க வேண்டும்.

மருந்து கண்டறிய முடியாத நோய்கள் இருக்கின்றனவா?

பா. யாஸ்மின், 10ஆம் வகுப்பு, புனித தெரசாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்.


நோய்களின் பாதிப்புகளைச் சமாளிக்கச் சில மருந்துகள் பயன்படலாம். ஆனால், சில நோய்களை முற்றிலும் குணமாக்க மருந்துகள் ஏதுமில்லை. எடுத்துக்காட்டாக, ஆஸ்துமா (Asthma), அல்சைமர் (Alzheimer) போன்ற பல நோய்களைக் குணப்படுத்த சிகிச்சை இல்லை. ஆஸ்துமா ஏற்பட்டால், அந்தச் சமயத்தில் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க சில மருந்துகள் உதவும். முற்றிலும் ஆஸ்துமா நோயை நீக்கும் மருந்து இல்லை. அதேபோல போலியோ நோயைத் தடுக்கும் தடுப்பூசி இருந்தாலும், அந்த நோய் ஏற்பட்டால் அதற்குச் சிகிச்சை ஏதுமில்லை. பல்வேறு மரபணு நோய்களைக் குணப்படுத்தவும் சிகிச்சை வழிமுறைகள் இல்லை.

மது அருந்தியவர்கள் இரத்த தானம் கொடுக்கக் கூடாது என்று சொல்வது ஏன்?

ஜே.ஜாய் வில்லியம்ஸ், 10ஆம் வகுப்பு, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

இரத்தம் இல்லாமல் எந்த ஓர் உயிரும் இல்லை. மூச்சுவிடத் தேவையான ஆக்சிஜனை உடலுக்குள் சுமந்து செல்வது இரத்தம்தான்! நம் உடலில் சுமார் 5 லிட்டர் இரத்தம் ஓடுகிறது. ஒரு நேரத்தில் 350 மில்லி லிட்டர் (ஒரு யூனிட்) இரத்தத்தைத் தானமாகக் கொடுக்கலாம். 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் ஹீமோகுளோபின் 12.5 கிராம் இருந்தால், மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். எடுக்கப்பட்ட இரத்தம் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் சுரந்துவிடும்.

உடல்நலம் குன்றியவர்கள், மது அருந்தியவர்கள், கருவுற்றிருக்கும் பெண்கள், இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பால்வினை, தொழுநோய் போன்ற பாதிப்புடையவர்கள் இரத்த தானம் கொடுக்கக் கூடாது.

குறிப்பாக, இரத்தத்தில் மது இருக்கும்போது, உடல் இயக்கம் பல்வேறு விதமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும். எடுத்துக்காட்டாக, கட்டளைகளை உள்வாங்கி, எதிர்வினையாற்றும் வேகம் குறையும். மது அருந்திய நிலையில் இரத்த தானம் செய்தால், நோயாளியின் உடலிலும் மது புகுந்து சிக்கலை உருவாக்கும். எனவேதான், மது அருந்தியவர்கள் இரத்தம் தானம் கொடுக்கக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us