PUBLISHED ON : ஜூலை 16, 2018

சூரியகாந்திப் பூ சூரியன் இருக்கும் திசை நோக்கியே திரும்பி இருக்கும். சூரிய உதயத்தின்போது பூக்கள் கிழக்கை நோக்கித் திரும்பும். சூரியன் மேற்கு நோக்கி நகரும்போது, பின்தொடரும். இரவில் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பும்.
சூரியகாந்தி
அறிவியல் பெயர்: 'ஹெலியாந்தஸ் ஆன்னுஸ்' (Helianthus annuus)
சூரியகாந்திப் பூக்களின் இந்தச் செயலுக்கு கதிரொளித் தொடரியல்பே (Heliotropism - ஹீலியோடிராப்பிஸம்) காரணம். சூரியகாந்திப் பூ என்பது பெரும் எண்ணிக்கையிலான சிறு பூக்களின் தொகுப்புதான். சூரியனில் இருந்து வரும் ஒளிக்கதிர்களால் சூரியகாந்திச் செடிகளின் தண்டு 'போட்டோடிராப்பிஸம்' (Phototropism) என்ற வேதி மாற்றத்தை அடைகிறது. தண்டில் உள்ள 'ஆக்சின்' (Auxing) என்னும் ஹார்மோனால் இந்தச் செயல் நடைபெறுகிறது. இந்த ஹார்மோன் செடியின் தண்டை நீளவாக்கில் வளரச் செய்கிறது.
விதையா… பழமா?
சூரியகாந்தித் தாவரத்தின் பழம்தான் விதை எனப்படுகிறது. பழத்தின் வெளிப்பகுதியில் மெல்லிய மேல் ஓடு உள்ளது. உட்பகுதியில் விதை காணப்படும். மேலோடு உமி எனப்படும். தாவரவியல் அடிப்படையில் இது வெடிக்காத உலர்கனி (Achene) என்ற பகுப்பிற்குள் அடங்கும்.
கணிதத்தோடு தொடர்பு
சூரியகாந்தி பூங்கொத்தின் சிறு பூக்களின் வடிவமைப்பை வைத்து 'ஃபிபனோசி' (Fibonocci Numbers) என்ற கணிதச் சமன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
ஹெச்.வோகல் (H.Vogel) என்பவர் 1979இல் இந்த கணிதச் சமன்பாட்டை முன்வைத்தார்.
- கிரிதரன்
