தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க

வெங்கியைக் கேளுங்க

வெங்கியைக் கேளுங்க


PUBLISHED ON : ஜூலை 30, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி



மூக்குக்கண்ணாடியின் லென்ஸ், வெயிலுக்கு அணியும் சன் க்ளாஸில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

ஆர். அழகு மேகலா, இ.எம்.ஜி. யாதவா மகளிர் கல்லூரி, மதுரை.


பார்வைக் குறைபாடுகள் உடையோருக்கு, ஒளியை விழித்திரையில் சரியாகக் குவிக்கவே மூக்குக் கண்ணாடி லென்ஸ் உதவுகிறது. எனவே தூரப்பார்வை, கிட்டப்பார்வைக் குறைகளை நீக்கும் விதமாக மூக்குக் கண்ணாடியில் குவி, குழி லென்ஸ்கள் உள்ளன.

மாறாக, கறுப்புக் கண்ணாடி (Sunglass) என்பது சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் (UV) கதிர்களால் ரெட்டினா பாதிப்பு அடையாமல் பாதுகாக்கப் பயன்படுகிறது. எனவே, கறுப்புக் கண்ணாடியில் லென்ஸ் இருக்காது; ஒளியின் பிரகாசத்தைக் குறைப்பதற்கான பூச்சு இருக்கும். இவ்வகைக் கண்ணாடிகள் UV கதிர்களை 400 நானோமீட்டர் முன்பாகவே தடுத்து நிறுத்திவிடும். மலிவு விலை கண்ணாடிகளை அணிவதால், கண் வீக்கம், எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, தரமான கண்ணாடிகளை உபயோகிக்க வேண்டும்.

உள்ளங்கையில் தோல் உரிந்தால், கை வளரும் என்பது உண்மையா?

த.ரம்யா, 10ஆம் வகுப்பு, பி.என்.யு.பி. காமராஜர் பதின்ம மேல்நிலைப் பள்ளி, திருவில்லிப்புத்தூர்.


உடல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு தான் இது. முடி உதிர்ந்து வளர்வது போல், இறந்த செல்களைச் சருமம் உதிர்க்கும். ஆனால், தோல் உரிவதால் உடற்பாகங்கள் வளரும் என்பது தவறான புரிதல்.

சிலருக்குச் சருமம் வறண்டு போவதால் இப்படி ஏற்படும். அல்லது சோப்புகளில் உள்ள வேதிப் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். துணி துவைக்கும்போது நீரில் நீண்டநேரம் கை ஊறி இருக்கும். இதனால் சில சமயம் மேல் தோல் உரிந்துபோகலாம். தோல் உரிவது தொடர்ந்து இருந்தால், சொறி, சிரங்கு, சொரியாசிஸ் போன்ற நுண்ணுயிரி தாக்குதல் காரணமாக ஏற்படும் நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆகவே, தோல் மருத்துவரைச் சந்திப்பது நல்லது. எதுவாக இருப்பினும், தோல் உரிவதற்கும் கை வளர்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மூச்சை உள் இழுக்கும்போது வயிற்றுப் பகுதி ஒட்டிக்கொள்வது ஏன்?

வெ.கணேஷ் பாலாஜி, 9ஆம் வகுப்பு, சாந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி, தேனி.


நுரையீரல் (Lung) என்பது மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உறுப்புகளில் ஒன்று. இது உடலியக்கத்துக்கு ஆற்றல் தரும் ஆக்சிஜனை உள் இழுக்கவும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றவும் உதவுகிறது. இந்த நுரையீரல் உள்ள மார்பறைச் சிரைக்கும் வயிற்றுப்பகுதிக்கும் இடையில் மார்பு வயிற்றிடைச் சவ்வு என்ற மென்படலம் உள்ளது. மூச்சை உள்ளே இழுக்கும்போது இந்தச் சவ்வு சுருங்கி, நுரையீரல் விரிவடைகிறது. இதன் காரணமாக வயிறு வீங்கியது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அதேபோல காற்றை வெளியே விடும்போது இந்தச் சவ்வு விரிவடைந்து நுரையீரல் சுருங்குவதால் வயிறு இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. ஒரு பலூனானது காற்றை நிரப்பும்போது பெரிதாகி, வெளியேறும்போது சுருங்கும். இப்படித்தான் வயிறும் செயற்பட வேண்டும்.

ஆனால், நீங்கள் கேட்பது, மார்பை விரிவடையச் செய்யும்போது வயிறு உள்ளிழுக்கப்படுவதாகக் கருதுகிறோம். ஆனால், இயல்பில் மேற்சொன்னபடிதான் நடக்கும்.

செவ்வாய் கிரகத்தில் எத்தனை நிலவுகள் உள்ளன? அங்கே பௌர்ணமி நாட்கள் எப்படி இருக்கும்?

த. அனுசுயா தேவி, 12ஆம் வகுப்பு, காமராஜர் பதின்ம மேல்நிலைப் பள்ளி, திருவில்லிப்புத்தூர்
.

செவ்வாய் கிரகத்துக்கு போபோஸ் (Phobos), டெய்மோஸ் (Deimos) என்ற இரண்டு நிலவுகள் (துணைக்கோள்கள்) மிக அருகே சுற்றி வருகின்றன. இதனால் 83 டிகிரிக்கு அப்பால் வடக்கு அல்லது தெற்கில் உள்ள செவ்வாய் பகுதியில் இருந்து டெய்மோஸ் தெரியாது; 70 டிகிரிக்கு அப்பால் இருந்து போபோஸ் கண்ணுக்குத் தெரியாது. மேலும் 24 மணி 37 நிமிடத்தில் செவ்வாய் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்.

டெய்மோஸ் 30 மணி 18 நிமிடத்தில் ஒருமுறை செவ்வாயைச் சுற்றி வருவதால், கிழக்கில் உதிப்பது போலவும், வானில் ஊர்ந்து செல்வது போலவும் தோற்றம் அளிக்கும். 33 மணிநேரம் கடந்த பின்னர், தலைக்கு மேல் வரும். அடுத்த 33 மணிநேரத்தில் மேற்கில் மறையும். அடுத்த 66 மணிநேரத்துக்குப் பின்னரே டெய்மோஸ் மறுபடி உதிக்கும். அதாவது சுமார் 132 மணிநேரத்துக்கு ஒரு முறை அமாவாசை, பௌர்ணமி என மாறும்.

போபோஸ் 7 மணி 39 நிமிடத்துக்கு ஒருமுறை செவ்வாயைச் சுற்றி வரும். எனவே கிழக்கே உதித்து, 2 மணி 48 நிமிடத்தில் தலைக்கு மேல் வந்து, அடுத்த 2 மணி 48 நிமிடத்தில் மேற்கே மறையும். மேலும் அடுத்த 5 மணி 36 நிமிடத்தில் மறுபடி உதிக்கும். அதாவது ஒரே நாளில் இரண்டு முறை போபோஸ் உதிப்பதால், இரண்டு முறை அதன் பெளர்ணமி அமையும்! மேலும் செவ்வாயின் சுழல் வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் போபோஸ் செல்வதால், இந்த நிலா மேற்கில் உதித்து கிழக்கே மறைவது போன்ற தோற்றம் ஏற்படும்.

இரண்டு நிலா கொண்ட செவ்வாயே இந்த அளவில் வியக்க வைக்கும்போது,79 நிலாக்கள் கொண்ட வியாழன் (Jupiter) கோளில் கற்பனைக்கு எட்டாத வானக்காட்சி நடைபெறும் (கடந்தவாரம் புதிதாக 12 நிலாக்களை கண்டறிந்தது உங்களுக்குத் தெரியும்தானே!).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us