PUBLISHED ON : அக் 15, 2018

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. விண்வெளி வீரர்கள் என்னென்ன காரணங்களால் விண்வெளியில் இறக்க வாய்ப்புண்டு?
ஜே.ஜாய் வில்லியம்ஸ், 10ஆம் வகுப்பு, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.
உண்ண உணவு, மூச்சு விடக் காற்று, தாங்கும் அளவுக்கு வெப்பநிலை முதலியவை மனிதன் உயிரோடு இருக்க அவசியம். இவை கிடைக்கவில்லை என்றால் விண்வெளியில் மட்டுமல்ல, பூமியிலும் மனிதனால் வாழ முடியாது. ஒருவகையில் யோசனை செய்தால் விண்வெளிக்கூடம் என்பது காற்றடைத்த பலூனே! விண்வெளிக்கூடத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான அளவு காற்றழுத்தத்தில் ஆக்சிஜன் உள்ளது.
சிறு ஓட்டை ஏற்பட்டாலும் பலூன் வெடித்து விடுவது போல, விண்கல் மோதி விண்கலம் வெடித்து விடும் வாய்ப்புண்டு. பூமியிலிருந்து கொண்டு செல்லும் உணவு, காற்று முதலியவை தீர்ந்து விடும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்குள் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பி விடுவார்கள். வேறு ஏதாவது நெருக்கடியால் பூமிக்குத் திரும்ப முடியாது போனால் அதுவும் உயிருக்கு ஆபத்துதானே! ராக்கெட் விண்வெளிக்குச் செல்லும்போது அல்லது பூமிக்குத் திரும்பும்போது பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இவ்வளவு சவால்கள் இருந்தும் விண்வெளியில் இருக்கும்போது, வீரர்கள் யாரும் இதுவரை உயிரிழந்ததில்லை.
2. பறவைகள் நாடுவிட்டு நாடு பறப்பதற்குக் காரணம் என்ன?
ச. ஆர்த்தி, 5ஆம் வகுப்பு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, மசக்காளிபாளையம், கோவை.
ஆர்க்டிக் டேர்ன் (Arctic tern) எனும் பறவை, ஆர்க்டிக் பிரதேசமான வடகோளத்தில் கோடைக் காலத்தில் பிறக்கும். வடகோளத்தில் கோடை முடிந்து குளிர் வரும்போது அந்தப் பறவை தென்கோளம் செல்லும். அப்போது அங்கே கோடை காலமாக இருக்கும். அதாவது ஒவ்வோராண்டும் இந்தப் பறவை 40,000 கி.மீ. தொலைவு செல்லும். 25 ஆண்டுகள் உயிர்வாழும் இது, தனது ஆயுட் காலத்தில் பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவுபோல மூன்று மடங்கு தொலைவு பறந்து செல்லும்!
நாடோடி ஆல்பட்ராஸ் (Albatross) பறவை எப்போதும் தென் துருவத்தைச் சுற்றியுள்ள கடலில் பறந்து கொண்டேதான் இருக்கும். இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு மட்டுமே ஆளில்லாத் தீவுகளில் அமரும். மற்ற நேரங்களில் பறந்தபடியே இருக்கும். தரையில் வந்து அமரும் முன் சுமார் 30,000 கி.மீ. தொலைவு பறந்திருக்கும். எல்லா நேரமும் சிறகை அசைத்துப் பறக்காமல் காற்றின் மேல் நோக்கிய வீச்சைப் பயன்படுத்தி ஆகாயத்தில் மிதந்தபடி இருக்கும்.
3. தும்மலின்போது உடலில் நிகழும் செயல்கள் யாவை?
அ.மோகனப்பிரியா, 6ஆம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடி.
காற்று தவிர வேறெந்தப் பொருட்களையும் மூக்கினுள் நுழைய அனுமதிக்காமல், வெளியேற்ற முயற்சிக்கும் உடலின் அனிச்சை நிகழ்வுதான் தும்மல். மூக்கு வழியாக, வேறு பொருட்கள் உடலுக்குள் நுழைந்து தீங்கு விளைவிப்பதைத் தடுக்கும் முயற்சிதான் இது.
உள்ளிழுக்கும் காற்றில் தூசு, துகள் இருந்தால், நமது நாசித் துவாரத்தில் உள்ள சிறிய முடியிழைகள் வடிகட்டி அனுப்பும். இந்த முடிகளின் அடியில் நிறமற்ற திரவத்தைச் சுரக்கும் மிருதுவான சவ்வுப் படலம் உள்ளது.
நுண்முடிகளால் வடிகட்ட முடியாத அளவுக்கு அதிகமான தூசு நுழைந்துவிட்டால் இந்த சவ்வுப் படலம் தூண்டப்பட்டு அதிக அளவில் நீரைச் சுரக்கும்.
அதே சமயம் இந்தத் தூண்டுதலின் விளைவாக, நுரையீரல், தொண்டை, வாய், வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து பெரும் வேகத்துடன் காற்றை மூக்கினுள் செலுத்துகின்றன. ஓட்டைகளில் அடைப்பு ஏற்படும்போது, வாயால் ஊதி வெளியேற்றுவது போலவே இதுவும். தும்மலின்போது, காற்று சுமார் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வெளிப்படும்.
சில சமயம் நெடி ஏற்படுத்தும் பொருட்கள் மூக்கின் சவ்வுப் படலத்தில் அரிப்பை ஏற்படுத்தி, அளவுக்கு அதிகமாக நீரைச் சுரக்கும். இதனை 'ஒவ்வாமை தும்மல்' (Allergic Rhinitis) என்பர்.
4. கப்பலின் எடை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
செ.செல்லா, 6ஆம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடி.
கப்பலைத் தரையில் வைத்தே கட்டுவார்கள். கட்டி முடிந்த பின்னர், அதில் சரக்கு, எரிபொருட்கள் எதுவும் நிரப்பாமல் நீரில் விடுவார்கள். கப்பல் நீரில் மிதக்கும்போது நீரின் அளவு உயரும். ஆர்க்கிமிடிஸ் கோட்பாட்டின்படி உயரும் நீரின் நிறை கப்பலின் நிறைக்குச் சமமாக அமையும். அதன்படி கப்பலின் நிறையைக் கணக்கிடுவார்கள். கப்பலின் பக்கவாட்டில் கிடைநிலையில் சில கோடுகள் இருக்கும். சரக்கு ஏற்றியவுடன் கப்பல் நீரில் அமிழ்ந்ததும், எந்தக் கோடு வரை கப்பல் அமிழ்கிறது என்பதை வைத்து, சரக்கு ஏற்றிய கப்பலின் எடையைக் கணக்கிடுவார்கள். டன் அளவு துல்லியத்தில் கணக்கிடுவதால், கிராம் அளவைக் கணக்கிடுவது இல்லை.
