
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
ஒரு கார்ட்டூன் படத்தில் 'கிளவுட் சீடிங்' (Cloud Seeding) என்று காட்டினார்கள். அந்த முறையில் மழையை வரவழைக்க முடியுமா? அது எப்படி?
R. ஜானேஷ் சரவணன், 5ஆம் வகுப்பு, சின்மயா வித்யாலயா, வடவள்ளி. கோவை.
முடியும்! இதுதான் செயற்கை மழை. சிறுசிறு நீர் நுண் திவலைகள் திரவ நிலையில் அல்லது பனி நிலையில் குவிந்து திரண்டு இருப்பதுதான் மேகம். மேகத்தில் ஏதாவது தூசு புகுந்து, அந்தத் தூசைச் சுற்றி நீர்த்திவலைகள் திரளும்போது அவற்றின் மொத்த நிறை கூடுகிறது. எனவே எடையின் காரணமாக கீழே விழத் தொடங்குகிறது. அவ்வாறு விழுவதுதான் மழை. ஆக, மேகத்தில், குறிப்பிட்ட சில வேதிப் பொருள்களின் தூசு நுழைந்தால் அந்த மேகத்தில் உள்ள நீர் நுண் திவலைகள் திரண்டு செயற்கை மழை பொழியும்.
தண்ணீருக்குள் ஏன் சுவாசிக்க முடியவில்லை?
அழகு மேகலா, மதுரை.
சுவாசம் என்பது என்ன? வளிமண்டலக் காற்றை நமது நுரையீரலுக்கு எடுத்துச் சென்று அதிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து எடுத்து ரத்தத்தில் கலப்பதுதான் சுவாசம். நீருக்குள் இருக்கும்போது நுரையீரலுக்குள் நீர் அல்லவா சென்று விடும்... நீரிலிருந்து ஆக்சிஜனைப் பிரிக்கும் தன்மை, விலங்குகளின் நுரையீரலுக்கு இல்லை. எனவே நுரையீரலில் நீர் தேங்கி சுவாசம் முட்டி விலங்கினத்தைச் சேர்ந்த நாம், இறந்துவிடுவோம்.
தூங்கி எழும்போது வாயில் உமிழ்நீர் சுரக்கிறதே ஏன்? அதை விழுங்கினால் என்னாகும்?
S. பூர்ண ஹரிஷ், 6ஆம் வகுப்பு, சிதம்பரம் விசாலாட்சி மெட்ரிக் பள்ளி, காரைக்குடி.
எப்போதும் சுரக்கும் உமிழ்நீர்தான் அது; விழிப்பு நிலையில் உமிழ்நீரை நாம் விழுங்கி விடுகிறோம். இரவில் உறக்கத்தில் சில சமயம் அது நமது வாயில் தேங்கி துர்நாற்றம் அடைந்துவிடுகிறது. அதை விழுங்குவதில் தீங்கு ஒன்றும் இல்லை என்றாலும் பலருக்கு அருவருப்பு ஊட்டும். பொதுவாக, பக்கவாட்டில் சாய்ந்து படுத்தால் வாயில் எச்சில் தேங்கும். நேராகப் படுக்கும் நிலையில் தேங்கும் வாய்ப்பு குறைவு. சிலருக்கு, தூக்க வியாதி காரணமாக இரவில் அதிக உமிழ்நீர் சுரக்கலாம். அதற்கு மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.
கேமரா லென்ஸ் வட்டமாக இருக்கிறது. ஆனால், அதில் விழும் படம் ஏன் வட்டமாக இருப்பதில்லை?
சிங்கார வேலன், மின்னஞ்சல்.
கேமராவில் ஒளியை வளைத்து படச்சுருள் (Film) மீது விழச் செய்து ஒளியைக் குவிப்பது மட்டுமே லென்சின் பணி. ஃபிலிம் எந்த வடிவில் இருக்கிறதோ அந்த வடிவில்தான் படம் வரும். நவீன எலக்ட்ரானிக் கேமராவில் ஒளி உணர்வி (Sensor) மீது ஒளி குவிகிறது. வட்ட வடிவமான லென்ஸ், வட்ட வடிவமான பிம்பத்தைத்தான் கேமரா உள்ளே ஏற்படுத்தும். ஆனால், பிம்பத்தின் விளிம்பு தெளிவாக இருக்காது. மையப் புள்ளியைச் சுற்றிய பகுதிதான் தெளிவான பிம்பமாக இருக்கும். எனவே, விளிம்புப் பகுதியை நீக்குதல் அவசியம். தொடக்க கால கேமராவில் ஃபிலிம் ரோல் செய்து அனுப்ப வேண்டியிருந்ததால் செவ்வக வடிவம் தயார் செய்யப்பட்டது. செவ்வக வடிவம் அல்லாமல், வட்டம், அரை வட்டம் என எப்படி வேண்டுமானாலும் ஃபிலிம் வடிவை வைத்து அந்த வடிவப் புகைப்படத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
உராய்வு மின்சாரம் என்றால் என்ன? அதனால் என்ன ஆகிறது?
K.ராகுல் குமார், 10ஆம் வகுப்பு, கே.வி.எம்.பள்ளி, பழனி.
உராய்வு மின்சாரம் என்பது ஒருவகை நிலை மின்னேற்றம்தான். எடுத்துக்காட்டாக, பிளாஸ்டிக் சீப்பை எடுத்து உங்கள் தலைமுடியில் பரபரவெனத் தேயுங்கள். காகிதத்தைச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். பிளாஸ்டிக் சீப்பு அந்தத் துண்டுகளைக் கவரும். இதுதான் நிலை மின்னேற்றம். இன்று நாம் பயன்படுத்தும் தொடுதிரை (Touch Screen) செல்பேசி முதல் ஜெராக்ஸ் வரை பல கருவிகள் இந்த நிலை மின்னேற்றத்தைப் பயன்படுத்தித்தான் இயங்குகின்றன.
திரவ நிலையில் உள்ள பொருளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அது திட நிலைக்கு மாறுகிறதே எவ்வாறு?
R.P. ஐஸ்வர்யா, 7ஆம் வகுப்பு, பி.எம்.எஸ். பள்ளி, சின்ன காஞ்சிபுரம்.
திரவம், திடம் மற்றும் வாயு என்பது மூன்றும் வெப்பம் சார்ந்து அமையும் பொருள்களின் நிலை. வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவ மாணவியர் அவரவர் பெஞ்சில் உட்காந்து கொண்டு ஆடி அசையலாம். ஆனால் எழுந்து அங்கும் இங்கும் செல்ல முடியாது அல்லவா? அதுபோல வெப்பம் குறைவாக இருந்தால், பொருளில் உள்ள அணுக்கள் அவை இருக்கும் இடத்தில் அங்கும் இங்கும் ஆடி அசையலாம் அவ்வளவே; இது திட நிலை. பள்ளி விட்டதும் வகுப்புக்கு வெளியே கூட்டம் கூட்டமாகச் செல்லும்போது நீர் ஒழுகுவதுபோல இருக்கிறது அல்லவா? சற்றே கூடுதல் வெப்ப நிலை ஏற்பட்டால் அதில் அணுக்கள் மேலும் கூடுதல் இயக்கம் பெற்று நகரும். அதுவே திரவ நிலை. மைதானத்தில் அங்கும் இங்கும் எந்த ஒழுங்கும் இன்றி ஓடியாடும் நிலை போல அணுக்கள் மேலும் கூடுதல் வெப்பத்தால் ஆற்றல் பெற்று அங்கும் இங்கும் கட்டுத்தளை இல்லாமல் அலைவது வாயு நிலை. குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் திரவம் வெப்பம் இழந்து திடநிலை பெறுகிறது, அவ்வளவே.

