
நம்மைப் போலவே மீன்களுக்கும் உயிர் வாழ ஆக்சிஜன் தேவை. ஆனால், தண்ணீருக்குள் எப்படி மீன்கள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெறுகின்றன? ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளால் நிறைந்தது தண்ணீர். அதைப் பிரித்து ஆக்சிஜனை மட்டும் தனியாக உட்கொள்ள முடியாது. பின் எப்படி நீருக்குள் இருக்கும் மீன்கள் ஆக்சிஜனைப் பெறுகின்றன? தண்ணீர் கலக்கப்படும்போதும், நீர்த் தாவரங்கள் வழியாகவும்
நீரில் நுண்ணிய காற்றுக் குமிழிகள் கரைந்து கலக்கின்றன. அதிலிருந்துதான் மீன்கள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெறுகின்றன. மீன்களின் உடல் அமைப்பில் நீருக்குள் இருக்கும் ஆக்சிஜனைப் பிரித்து எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றும் செவுள்கள் (Gills) என்ற பாகம் உள்ளன. இதன் மூலமாகத்தான் நீருக்குள் மீன்களின் சுவாசம் நடைபெறுகிறது. கடல் மீன்களின் வாய் வழியாக உள்ளே செல்லும் நீர், செவுள்களில் இருக்கும் நுண்ணிய துகள்கள் வழியாக ஆக்சிஜனை உறிஞ்சி, ரத்தத்தில் சேர்க்கிறது. நன்னீர் மீன்கள், செவுள்கள் வழியாகவே நீரை உள்வாங்கிச் சுவாசிக்கின்றன.

