PUBLISHED ON : ஆக 15, 2016

சூரியக் குடும்பத்தின் கோள்கள் ஒவ்வொன்றும், குறிப்பிட்ட இடைவெளி தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அந்த தூரத்தில் மாற்றம் வருமா?
மா. மலய குமார் பிஸ்வால், 12ஆம் வகுப்பு, ஹோலி ஃப்ளவர்ஸ் பள்ளி, புதுச்சேரி.
கடந்த காலத்தில் கோள்களின் நிலை மாறியுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். இப்போதும் மாறிக் கொண்டிருக்கிறது. எதிர் காலத்திலும் மாறும்! எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு ஆண்டும் நிலவு பூமியைவிட்டு சுமார் 3 செ.மீ. தொலைவு விலகிச் சென்றுகொண்டிருக்கிறது. இதனால், பூமியின் சுழற்சி வேகமும் குறைந்து வருகிறது. அதாவது, பூமி, 24 மணி நேரத்தில் ஒரு சுழற்சியை முடிப்பதற்குப் பதிலாக, சற்றே கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆண்டுதோறும் சுமார் 17 மில்லி நொடிகள் கூடுதலாகிறது. தற்போது, நிலவு பூமியைச் சுற்றிவர ஒரு மாதம் ஆகிறது. சுமார் 50 பில்லியன் வருடங்களுக்குப் பிறகு பூமி, தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எடுக்கும் நேரமும், நிலவு பூமியை சுற்றிவரும் நேரமும் ஒன்றாக இருக்கும். அதாவது, பூமியில் ஒரு நாள் என்பது, அப்போது ஒரு மாதம் அளவுக்கு நீண்டிருக்கும்! ஆனால் அதற்குள் சூரியன் வெடித்துச் சாம்பலாகிப் போயிருக்கும் என்பது வேறு விஷயம்.
சில பறவைகள் இடைவிடாமல் பறந்து கொண்டே இருக்கின்றனவே? அது எப்படிச் சாத்தியமாகிறது?
பூர்ணிமா புருஷோத்தமன், 5ஆம் வகுப்பு, பி.எஸ்.பி.பி. பள்ளி, கிருகம்பாக்கம்.
முதலில் எல்லாப் பறவைகளும் பறப்பதே இல்லை. எடுத்துக்காட்டாக நெருப்புக் கோழியால் பறக்கவே முடியாது. கோழியால் தத்தித்தத்தியே பறக்க முடியும். அதே சமயத்தில் 'ஆல்பட்ராஸ்' எனும் அண்டரண்டப் பறவை, காற்றின் மேல் நோக்கிய வீச்சைப் பயன்படுத்தி உயரே ஆகாயத்தில் மிதந்தபடி இருக்கும். அப்போடிடே (Apodidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த உழவாரக் குருவி அல்லது உழவாரன் (Swift bird) பறவையானது, பறந்து கொண்டே அதன் உணவைப் பிடிக்கும் பழக்கம் கொண்டது. விமானம்போல கீழ்நோக்கிச் சென்று சிறு பூச்சிகளை லாகவமாகப் பிடித்து உண்ணும் திறமை கொண்டது. இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு மட்டுமே தரையைச் சென்று அடையும். மற்ற நேரங்களில், நீரில் மீன்கள் மூழ்கிவிடாமல் மிதப்பதைப்போல, காற்றில் மிதந்தபடி பல மாதங்கள் வரை பறந்தபடியே இருக்கும்.
மேகக் கூட்டங்கள் கலைந்து இருந்தாலும், மழை ஒரே சீராகப் பொழிகிறதே! அது எப்படி? ஆனால், மின்னல்கள் சீரில்லாமல் இருப்பது ஏன்?
V. சந்தானகோபாலன், மதுரை.
உள்ளபடியே நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால், மழை எல்லா இடத்திலும் ஒரே சீராகப் பெய்யவில்லை என்பது புலப்படும். மிதமான மழை பெய்யும்போது, ஒரு தட்டில் சப்பாத்தி மாவை சீராகக் கொட்டி, அந்தத் தட்டை மழையில் காட்டவும். ஒரு கணம்தான் தட்டை மழையில் காட்டவேண்டும். ஒரு சில மழைத்துளிகள் விழுந்தவுடன் தட்டை நன்றாக மூடிவிடுங்கள். வீட்டுக்குள் எடுத்துவந்து திறந்து பார்த்தால், மழைத்துளிகள், அவற்றின் அளவுக்கு ஏற்ப, மாவில் பள்ளங்களை ஏற்படுத்தி இருக்கும். ஊரின் பிற பகுதியில் உள்ள உங்கள் நண்பர்களையும் இதேபோலச் செய்து பார்க்கச் சொல்லுங்கள். எல்லா மழைத்துளிகளும் ஒரே அளவாக இருக்காது. தொகுப்பாகப் பார்க்கும்போது, மழை சீராகப் பெய்வது போலத் தெரிந்தாலும், மழையிலும் சீரற்ற தன்மையே உள்ளது. அதுபோலத்தான் மின்னலும். இவை எல்லாம் சிக்கல் மிகுந்த கேயாஸ் செயல்கள். இந்த இயற்கை நிகழ்வுகளைக் குறித்து, இப்போதுதான் நாம் மேலும் நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறோம்.
தொலைக்காட்சி, வானொலிக்குக் காற்று வழியாக சிக்னல் எப்படிக் கிடைக்கிறது?
மு. புனிதன்,10ஆம் வகுப்பு, நேருஜி பள்ளி, இடையமேலூர்.
கண்ணாடி வழியாக ஒளி ஊடுருவும்; ஆனால், காற்றால் கண்ணாடி வழியே புகுந்து கடக்க முடியாது. ஒலி பரவ காற்று வேண்டும். காற்றில் மிதந்துதான் ஒலி பரவும். அதாவது காற்றே இல்லாத வெற்றிடத்தில் ஒலி பரவாது. ஆனால் ரேடியோ தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் இயங்கத் தேவையான மின்காந்த அலைகள், வெற்றிடத்தில் கூடப் பரவும். எனவே காற்று இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவற்றால் இயங்க முடியும்.
மருத்துவமனையில் இருக்கும் ஆக்சிஜன் சுவாச உருளைகளில் மட்டும் எப்படி சுத்தமான காற்றை அடைக்கிறார்கள்?
V. தர்ஷணா, 8ஆம் வகுப்பு, ஸ்ரீ பால்தேவதாஸ் வித்யா மந்திர், கோவை.
மருத்துவமனை, விண்வெளிப் பயணம், கடலுக்குள் நீந்தும்போது எனப் பல இடங்களில் ஆக்சிஜன் சுவாச உருளைகளைப் பயன்படுத்துகிறோம். இந்த ஆக்சிஜன் சுவாச உருளைகளில், ஏதாவது ஒரு மந்தவாயுடன் கலந்தே ஆக்சிஜன் நிரப்பப்பட்டு இருக்கும். தூய ஆக்சிஜன் உள்ளபடியே நஞ்சு என்பதால், இப்படி வேறு ஒரு வாயுவுடன் கலந்து ஆக்சிஜனை நிரப்புகிறார்கள். இந்த உருளைகளில் உள்ள ஆக்சிஜன் மற்றும் மந்த வாயுவை வேதியல் முறையில் செயற்கையாகத் தயாரித்து நிரப்புவார்கள்.
