PUBLISHED ON : ஆக 15, 2016

வரிக் குதிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 'வரி விலக்கு' குதிரை தெரியுமா?! 'குவாகா' (Guagga) என்ற குதிரை இனம் உண்டு. உடலின் முதல் பாதி வரிக்குதிரை போல இருக்கும். உடலின் பின் பாதிதான் ஆச்சரியம்! இந்தக் குதிரையின் பிற்பாதியில் உடலில் உள்ள கோடுகள் மறைந்துகொண்டே வரும். ஒரு கட்டத்திற்கு மேல் கோடுகளே இருக்காது. பாதி வரிக் குதிரை; பாதி சாதாக் குதிரை! இதுதான் குவாகா குதிரை.
தென் ஆப்பிரிக்காவின் கேப் (Cape) மாகாணத்தில் குவாகா குதிரைகள் பெருமளவில் காணப்பட்டன. இந்தக் கலவைக் குதிரை கத்தும்போது 'குவா... கா… கா…' என்று ஒலியெழுப்புமாம்! அதையே இதற்குப் பெயராக வைத்துவிட்டார்கள்.
இது தனி குதிரை இனமா, வரிக் குதிரையில் ஒரு வகையா என்று ஆராய்ச்சிகள் நடத்தி, வரிக்குதிரை இனத்தின் ஒரு வகைதான் என்று உறுதிப்படுத்தப் பட்டது. ஆனால், இந்தத் தகவல் வெளியாவதற்குள், குவாகா குதிரைகள் அழிந்துவிட்டன என்பது சோகமான விஷயம். ஆம்! இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் மனிதர்களால் வேட்டையாடப்பட்ட குவாகா குதிரை இனம், 1870களில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. ஆம்ஸ்டர்டாம் விலங்கியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்த கடைசி குவாகா குதிரையும் 12.8.1883ல் இறந்துவிட்டது.
இன்னொரு விஷயம், அழிந்துபோன உயிரினங்களில், முதன்முதலில், 'டிஎன்ஏ டெஸ்ட்' (DNA Test) எனப்படும் மரபணுப் பரிசோதனை செய்யப்பட்ட விலங்கு குவாகாதான்!
