தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்கள்!

வெங்கியைக் கேளுங்கள்!

வெங்கியைக் கேளுங்கள்!


PUBLISHED ON : ஆக 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விக்கு பதில் சொல்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி



மழை பெய்யும்போது, எரிகின்ற கொள்ளிக்கட்டையை வானத்தை நோக்கிக் காண்பித்தால், மழை நிற்கும் என்கிறார்களே உண்மையா?

தியா, திருப்பூர்
.

அப்படி எல்லாம் மழை நிற்காது! எவ்வளவு நேரம் மழை பொழியும் என்பது மழை மேகத்தின் அளவைப் பொறுத்தது. குறிப்பிட்ட அளவு மேக மூட்டம் இருக்கும் நேரத்தில், மழை கொட்டோகொட்டு என்று அடித்துப் பெய்துவிட்டால், விரைவாக மழை நின்றுவிடும். அதுவே, லேசான தூறலாக மட்டுமே விழுந்தால், நீண்டநேரம் மழைப்பொழிவு இருக்கும். அதே சமயம், காற்று வீசி மேகத்தைக் கலைத்துவிட்டால், விரைவில் மழை நின்றுவிடும். எரிகின்ற கொள்ளிக்கட்டையைக் காட்டியெல்லாம் மழையை நிற்கச் செய்துவிட முடியாது; கொள்ளிக்கட்டைதான் அணைந்துபோகும்.

நடைப்பயிற்சியின் போது முதுகுப் புறத்தில் அதிகம் வியர்க்கக் காரணம் என்ன?

பா. கிருத்திகா, 5ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி, தேவகோட்டை.


உள்ளபடியே எல்லோருக்கும் இப்படி ஆகிறதா, அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் முதுகில் அதிகம் வியர்க்கிறதா என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு மூக்கின் மேல் முத்துமுத்தாக வியர்வைத் துளிகள் தென்படும்; சிலருக்கு நெற்றியில் கூடுதலாக வியர்வை வரும். இது அவரவர் உடல் தன்மை பொறுத்தது; பொதுமை படுத்த முடியாது.

முடி, நகம் மட்டும் வெட்ட வெட்ட வளர்கிறதே எப்படி?

க.காவ்யா, 12ஆம் வகுப்பு, என்.எஸ்.வி.வி. மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்


பிறப்பதற்கு முன்பு, வயிற்றில் இருக்கும்போதே நகமும் முடியும் வளர்கிறது! உள்ளபடியே, நகமும் முடியும் இறந்த செல்களைக் கொண்டுள்ளன. நகக்கண் பகுதியில், இறந்த செல்கள் தோன்றி செல்களைக் கீழிருந்து மேலே உந்தியபடி இருக்கும். எனவேதான் நகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதைப்போலவே, மயிர்க்காலில் முடி வளர உதவும் இறந்த செல்கள் தோன்றி, முடியை அடியிலிருந்து வெளியே தள்ளுகின்றன. இதனால் முடி தொடர்ச்சியாக வளர்கிறது.



நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன?

கு. தினேஷ், கோவை.


நெருப்புப் புகையின் ஊடே பார்த்தால், எதிர்ப் பக்கத்தில் நடக்கும் காட்சிகள் அசைவது போன்று நமக்குத் தென்படும் அல்லவா? நெருப்புப் புகை உள்ள பகுதியில், காற்று அமளிதுமளியாக இருக்கும். இதனால், ஒளியானது, நெருப்புப் புகையின் ஊடே அமளிதுமளியான காற்றில் கடந்து செல்லும்போது, ஒளியின் பாதை அங்கும் இங்கும் அசையும். அதனால்தான் நெருப்பின் ஊடே காணும் காட்சி அசைந்து ஆடுவதுபோல நமக்குத் தென்படுகிறது.

அதேபோல வானத்தில் காற்று அடுக்குகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருக்கும். காற்று மண்டலதுக்கு அப்பால் இருந்து வரும் விண்மீன் ஒளிக்கதிர்கள், அசையும் காற்று மண்டலத்தில் புகுந்து வரும்போது, சற்றே அசைவதுபோலத் தென்படும். அதுதான் நட்சத்திரங்கள் மின்னுவதுபோல நமக்குக் காட்சி தருகின்றன.

மனிதன் 100% மூளையைப் பயன்படுத்தினால் என்ன ஆகும்? அதை வைத்து நீண்ட நாட்கள் வாழ முடியுமா?

S. பத்ரி நாராயணன், 12ஆம் வகுப்பு, ஸ்ரீ சங்கர வித்யாலயா, புதுச்சேரி.


அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில், விவரத்தை சரி பார்க்காமல், 'நாம் பத்து சதவீத மூளையைத்தான் பயன்படுத்துகிறோம்' எனச் சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான்! அது என்னவோ உண்மைச் செய்தி என்பது போல, உலகெங்கும் பரவிவிட்டது. இது ஒரு வதந்தியே தவிர, அறிவியல் உண்மை அல்ல. உங்கள் மூளையின் கூடுதல் பகுதியைத் தூண்டிவிடுகிறேன் பேர்வழி என்று சிலர், இப்போது வியாபாரம் கூடத் தொடங்கிவிட்டனர். நாமும் வெகுளியாக இதை எல்லாம் நம்பிவிடுகிறோம்.

மூளையின் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட செயலுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக, 'பிரோக்கா' பகுதிதான் (Broca's area) மொழிசார் பணிகளைச் செய்கிறது. அதேபோல, காட்சி, கேள்வி எனப் பல பணிகளுக்கும் பொறுப்பாக, மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதி உள்ளது. எனவே, மரணம் அடைந்தவர் அல்லது மூளை செயல்திறன் குறைபாடு உள்ளவர்களைத் தவிர, அனைவரின் மூளையிலும் எல்லாப் பகுதிகளும் எப்போதும் இயங்கிக் கொண்டேதான் இருக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us