தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!


PUBLISHED ON : ஆக 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அறிவியல் விஞ்ஞானி

சூரியகாந்திச் செடி ஏன் சூரியன் இருக்கும் திசையை நோக்கியே இருக்கிறது?

M. திவ்யேஷ் மனோலால், 9ஆம் வகுப்பு, நோபல் மெட்ரிக் பள்ளி, விருதுநகர்
.

சூரியகாந்திச் செடி மட்டுமல்ல, பல செடிகள் சூரியன் உள்ள திசையை நோக்கி வளரும். ஒளிச்சேர்க்கை காரணமாகவே, தாவரங்கள் தமது உணவை தயாரித்துக் கொள்கின்றன, என நாம் அறிவோம். ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். எனவே, சூரியன் உள்ள திசை நோக்கி இலைகள் அமையும்போது, கூடுதல் சூரிய ஒளியில் அதிக ஆற்றலை தாவரம் பெறும். ஆயினும், இளம் பருவத்தில் வானில் சூரியன் செல்லும் திசை நோக்கி வளையும் சூரியகாந்திப் பூ, வளர்ந்து முதிர்ந்ததும் கிழக்கு நோக்கி மட்டுமே தலை வைத்து இருக்கும் என்பது வியப்பான செய்தி.

நானோ துகள் என்பது என்ன?

அ. கபிலன், 9ஆம் வகுப்பு, சத்யசாய் பள்ளி, கடலூர்.


'நானோ' என்பது ஓர் அளவை. '0.000000001 மீட்டர்' என்பதுதான் நானோ. அதாவது ஒரு மீட்டரில் 0.000000001 பங்கு. இதை ஒரு நொடியில் நகம் வளரும் அளவு, அல்லது மூன்று தங்க அணுக்களை ஒன்றின் பின் ஒன்றாக வைத்தால் கிடைக்கும் நீளம் என்று விளக்கலாம். இவ்வளவு நுணுக்கமாக அமையும் துகள்களே நானோ துகள்கள். பொதுவாக அறிவியல் அறிஞர்கள், 1 முதல் 100 நானோ மீட்டர் அளவுவரை உள்ள துகள்களை நானோ துகள்கள் என வரையறுக்கிறார்கள்.

வயிற்றுக்குள் செல்லும் மருந்து எவ்வாறு வலி இருக்கும் இடத்திற்குச் சென்று வலியைப் போக்குகிறது?

A. சாருகேஷ், 5ஆம் வகுப்பு, அமிர்த வித்யாலயம் பள்ளி, மதுரை
.

அடிபட்டால் அல்லது சிதைவு ஏற்பட்டால், உடலின் தசை 'பிராஸ்டாகிளாண்டின்' எனும் ஒரு வகை வேதிப் பொருளை உமிழும். இந்த வேதிப் பொருளை, நமது தசைகளில் உள்ள நரம்பு முடிகள் இனம் கண்டு துடிக்கும். இந்தத் துடிப்பு மூளையை எட்டியதும், 'வலி' எனும் உணர்வு ஏற்படுகிறது. வலி நிவாரணிகள் இரண்டு விதமாக செயல்படுகின்றன. ஒரு வகை வலி நிவாரணிகள், காயம் பட்ட தசைகள் பிராஸ்டாகிளாண்டின் வேதிப் பொருளை உமிழ்வதை மட்டுப்படுத்துகின்றன. சில வகை வலி நிவாரணிகள், பிராஸ்டாகிளாண்டின் வேதிப் பொருள் மூளையில் ஏற்படுத்தும் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்றன. இவ்வாறு வலி என்ற உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. வலி நிவாரணிகள் உள்ளபடியே வலி என்ற உணர்வைத்தான் மறைக்கின்றன; வலியை ஏற்படுத்தும் உடல் காரணத்துக்கு நிவாரணம் தருவதில்லை.

வளைகுடா நாடுகளில், பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் நிறையக் கிடைக்கிறதே ஏன்?

R. சஜீவ் கிருஷ்ணா, மகாத்மா சிபிஎஸ்இ பள்ளி, மதுரை.


உலகின் மொத்த பெட்ரோலிய கையிருப்பில் 48 சதவீதமும், இயற்கை வாயு கையிருப்பில் 38 சதவீதமும், வளைகுடா நாடுகளில் புதைந்து உள்ளன, என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. சுமார் 57 கோடி வருடங்கள் முன்பு, இன்று உள்ளது போல பூமியில் கண்டங்கள் இருக்கவில்லை. எல்லா கண்டங்களும் இணைந்த, 'கோண்டுவானா' எனும் ஒரே ஒரு பெருங்கண்டம் இருந்தது. 'கண்டத்தட்டு இயக்கவியல்' (Plate tectonics) என்ற இயக்கம் காரணமாக, இந்தப் பெருங்கண்டம் உடைந்து, பிரிந்து, இன்றைய கண்டங்கள் உருவாயின. இந்த டெக்டானிக் இயக்கமே, பெட்ரோலியம், நிலக்கரி போன்ற புதை படிம எரிபொருட்கள் உருவாகக் காரணமாக இருந்தது.

கோண்டுவானா பெருங்கண்டத்தின் ஒரு கடல் வடிநிலப் பகுதியை ஒட்டி, இன்றைய வளைகுடா நாடுகள் பகுதி இருந்தன. சுமார் 50 கோடி வருடங்களாக, இந்தப் பகுதியில், கடல் மற்றும் நில வாழ் உயிரிகள், கடலின் அடியில் படிந்து படிவமாகி, நில அழுத்தத்தால் பெட்ரோலியமாக மாறின. வளைகுடா நாடுகளில் இருக்கும் 70 சதவீத பெட்ரோலியம், ஜுராசிக் காலத்தில் உருவானது.

பொதுவாக வளைகுடா போன்ற கடல் குழிநிலப் பகுதிகளில், கடல் நீரில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். மடிந்த உயிரிகளின் கரிம பொருட்கள் சிதைவதற்கு, ஆக்சிஜன் தேவை. அதனால், ஆக்சிஜன் குறைவாக இருக்கும் வளைகுடா பகுதியில், கரிம பொருட்கள் சிதைய முடியாமல் போனபோது, அங்கே டெக்டானிக் இயக்கமும் நடந்ததால், நில அழுத்தம் அதிகரித்து பெட்ரோலியம் உருவானது.

வளைகுடா நாடுகளில் மட்டுமல்ல; எங்கெல்லாம் பல கோடி ஆண்டுகளாக உயிரிகள் புதைந்து படிவமாக மாற முடிந்திருக்கிறதோ, அங்கெல்லாம் காலங்காலமாக பெட்ரோலியம் உருவாகிப் புதைந்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us