
இயற்கையில் கிடைக்கும் தேனைப் பாதுகாக்காமல் இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கிறதே எவ்வாறு?
வி. சாந்தகோபாலன், மதுரை.
ஆசிய நாடான ஜார்ஜியாவில், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், மண் குடுவையில் சேகரித்து வைக்கப்பட்ட தேன், கெடாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மலரிலிருந்து சேகரிக்கப்படும் தேனில் உள்ள நீரை, தமது சிறகை வேக வேகமாக அசைத்து தேனீக்கள் உலரச் செய்கின்றன. எனவே தேனில் ஈரப்பதம் மிகக் குறைவு. அதேசமயம், தேனுக்கு நீரை உறிஞ்சும் தன்மை உண்டு. எனவே, அதில் ஏதாவது நுண்ணுயிரி விழுந்தால், நுண்ணுயிரின் நீரை முழுவதும் தேன் உறிஞ்சி எடுத்து, நுண்ணுயிரியை மடிந்து போகச் செய்துவிடும். தேனின் அமிலத்தன்மை pH 3 முதல் pH 4.5 வரை; எனவே இந்த அளவு உயர் அமிலத்தன்மை கொண்ட பொருளில் நுண்ணுயிரிகள் வளர முடியாது. உணவுப் பொருள் கெடுவது என்பது எதாவது நுண்ணுயிரிகள் அதில் வளர்ந்து, சிதைப்பது தான். அதனால்தான் நுண்ணுயிரி வளர்வதற்கு உகந்த சூழல் இல்லாத தேன் கெடுவதில்லை.
ஒருவர் தனது சுயநினைவை இழக்கும்போது, அவருடைய தாய்மொழி மட்டும் எவ்வாறு ஞாபகத்தில் இருக்கிறது? நினைவு திரும்பியதும் 'எங்கே இருக்கிறேன்' என்பதுதான் முதல் கேள்வியாக இருக்குமா?
ஹரிராம் பாலாஜி, பரமக்குடி.
மூளை குறித்த நமது அறிவு, தற்காலத்தில்தான் நுட்பமாக வளர்ந்து வருகிறது. சுயநினைவை இழப்பது என்பது என்ன? சிலசமயம் எல்லா நினைவுகளும் போகும்; சிலசமயம் தற்கால நினைவுகள் மட்டுமே போகும். சிலசமயம், கோமா நிலைக்கு சென்றுவிடுவோம். ஆயினும் மூளை முழுமையாக செயல்பாட்டை நிறுத்துவது இல்லை. முழுமையாக மூளை செயல்படவில்லை என்றால் அது மரணம்தான்.
தாய்மொழி, சைக்கிள் ஓட்டும் திறன் போன்ற பல திறன்கள் மூளையின் பல்வேறு பகுதியில் பதிந்து இருக்கும். எந்தப் பகுதியில் மூளை பழுது ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றவாறு விளைவும் இருக்கும்.
சில நோயாளிகளுக்கு, முகங்களை நினைவில் கொண்டுவரும் திறனும் பழுதுபடும். அப்போது அவர்களால் தமது தாயைக்கூட இனம்காண முடியாது. ஆனால் அதே தாய், தொலைபேசியில் பேசினால், இது என் தாய் என அவரால் நினைவுபடுத்தி இனம் காண முடியும். இந்த நோயாளிக்கு, முகங்களை நினைவுபடுத்தும் மூளைப் பகுதியில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று கருதலாம். மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து நினைவு பிறழ்ச்சி மாறுபடும்.
பொதுவாக, சிறுசிறு நினைவு தப்பும்படியான மயக்க நிலைக்கு நாம் சென்று மீளும்போது, நம்முடைய மன ஓட்டத்தில், இடைவெளி விழும். அப்போதுதான், நாம் எங்கே இருக்கிறோம்; ஆண்டு எந்த நாள் போன்ற இடம், காலம் சார்ந்த கேள்விகள் எழுகின்றன.
பாதரசம் திரவ நிலையில் இருந்தாலும், ஏன் உலோகம் என்று அழைக்கிறோம்?
சி. தாட்சாயிணி, 7ம் வகுப்பு, எம்.என்.சி. மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.
சூடான இரும்பு, பாகு நிலையில் இருந்தாலும், அது உலோகம்தான். சூரியனில் இரும்பு, தங்கம் போன்றவை வாயுநிலையில் உள்ளன. திரவ, திட, வாயு நிலைக்கு மாறுவதால், உலோகம் அதன் உலோகத்தன்மையை இழப்பது இல்லை.
நவீன வேதியியல் கருத்தில், தனிம அட்டவணையில் போரோன் முதல் புளூட்டோனியம் வரை குறுக்காகப் போடப்படும் கோடு, உலோகம் மற்றும் உலோகமற்ற பொருட்களைப் பிரிக்கும். நவீன வேதியியலில், சுதந்திர எலக்ட்ரான்கள் நடுவே நேர்மின் அயனி அணுக்கள், வலைப்பின்னல் போன்ற வடிவில் உலோகப் பிணைப்பை ஏற்படுத்தும். இந்தப் பொருட்கள்தான் உலோகம் என அழைக்கப்படுகின்றன. பாதரசம் திரவ நிலையில் இருந்தாலும், உலோகப் பண்புகளையே கொண்டுள்ளது.
மழைக்காலங்களில், கதவை மூடும்போதும் திறக்கும்போதும் கடினமாக இருப்பது ஏன்?
கே.வினோதா, 11ம் வகுப்பு, விவேக் வித்யாலயா மெட்ரிக், கிணத்துக்கடவு.
மரத்துக்கு ஈரத்தை உறிஞ்சும் (Hygroscopic) தன்மை உண்டு. காற்றில் ஈரப்பதம் கூடினால், அதன் தொடர்ச்சியாக நீரை உறிஞ்சி மரம் விரிவடையும். வெயில் காலத்தில், காற்றில் ஈரப்பதம் குறைவதால், நீரை வெளியேற்றி மரம் சுருங்கும். ஒவ்வொரு மரத்தின் சுருங்கி விரியும் தன்மை வெவ்வேறு அளவாக இருக்கும். மழைக்காலத்தில் மரக்கதவும், மரத்தில் செய்யப்பட்ட கதவுச் சட்டமும் விரிவடைவதால், கதவை எளிதில் மூட முடிவதில்லை.