PUBLISHED ON : டிச 26, 2016

மஞ்சள் மூக்கு ஆட்காட்டி
ஆங்கிலப் பெயர்: 'யெல்லோ வாட்டில்டு லாப்விங்' (Yellow-wattled Lapwing)
உயிரியல் பெயர்: 'வனேல்லஸ் மலாபரிகஸ்'(Vanellus Malabaricus)
'சாரடிரிடே' (Charadridae) குடும்பத்தைச் சேர்ந்த பறவை. நீர்நிலைகள், திறந்தவெளிகள், புல்வெளிகள், முட்காடுகளில் அதிகம் காணப்படும்.
* உடல் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
* தலையின் உச்சிப் பகுதி, கறுப்பு நிறத்தில் காணப்படும்.
* உடலின் பழுப்பு நிறத்திற்கும் தலைப்பகுதிக்கும் இடையில், வெண்மை நிறம் இருக்கும்.
* கறுப்பு நிறத் தலைக்கும் அலகுக்கும் இடையில் உள்ள பகுதி, மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
* கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
தனித்த தோற்றத்தால், இதை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். இரு பாலினமும் ஒரே மாதிரி தோற்றம் உடையது. ஆண் பறவையின் சிறகுகள், பெண் பறவைகளுடைய சிறகுகளை விட நீளமானது. ஊனுண்ணிப் பறவை. வண்டு, கரையான், பூச்சி, புழுக்கள் போன்றவற்றை உண்ணும். வேகமாகப் பறக்கும். இது எழுப்பும் ஒலி, வெகு தொலைவுக்குக் கேட்கும். ஒரே இடத்தில் தங்கி வாழும். மழைக்காலங்களில் மட்டும் இடம் பெயரும். இவற்றை, 'மெகிமலியா டோலிசோஸ்கியா' (Magimelia dolichosikya) என்ற இறகு உண்ணி நோய் தாக்குகிறது.
மார்ச் முதல் மே மாதம் வரை, இதன் இனப்பெருக்க காலம். புதர்களின் மறைவில், சிறு கூழாங்கற்களை சேமித்து, அதன் மீது சருகுகளையும், காய்ந்த புற்களையும் கொண்டு கூடு அமைக்கும். கூட்டில் சருகுகளுக்கு இடையில் நான்கு முட்டைகள் வரை இடும். 30 நாட்கள் வரை அடைகாக்கும். நான்கு முட்டைகளும் ஒரே நேரத்தில் பொரிக்கும். பொரித்த உடன் குஞ்சுகள் ஓடும் திறன் உடையவை.
இவற்றின் முட்டைகள் எளிதில் வேட்டையாடப்படுகின்றன. இந்திய துணைக் கண்டத்தை வாழ்விடமாகக் கொண்டவை. பாகிஸ்தான், நேபாளம், வங்க தேசம், இலங்கை, காட்மாண்டு போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன.
21 செ.மீ. - இறக்கை அகலம்
28 செ.மீ. - நீளம்
3 செ.மீ. - அலகு நீளம்
8 செ.மீ. - கால்கள் உயரம்
- கி.சாந்தா