PUBLISHED ON : அக் 29, 2018

1. மின்சாரத்துக்கும் நிலை மின்சாரத்துக்கும் வேறுபாடு என்ன?
ஏ.ஆர்.அருணேஸ்வரன், 9ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.வித்யாசாலா மெட்ரிக் பள்ளி, மதுரை.
உலர்ந்த தலைமுடியை சீப்பு வைத்துத் தேய்க்கும்போது முடியில் உள்ள எலெக்ட்ரான்கள் சீப்புக்குச் செல்லும். பிளாஸ்டிக்கினால் ஆன சீப்பு மின்கடத்தியாக இருக்காது. எனவே, அதில் செல்லும் எலெக்ட்ரான்கள் எங்கும் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால், சீப்பு எதிர் மின்னேற்றம் பெற்று இருக்கும். அதே சமயத்தில், எலெக்ட்ரான்களை இழந்த தலைமுடி நேர் மின்னேற்றம் பெற்று இருக்கும். இங்கே மின்னேற்றம் நகராமல் அதே இடத்தில் குவிந்து உள்ளது. பூமியுடன் தொடர்பு (Earth) ஆகும் வரை அவ்வாறே இருக்கும். எனவே, இதை நிலை மின்சாரம் (Static electricity) என்கிறோம்.
மின்கம்பியானது செம்பு, அலுமினியம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டுள்ளது. அதில் மின்னேற்றம் அங்கும் இங்கும் செல்ல முடியும். பொதுவாக உலோகங்கள் என்பவை மின்கடத்தும் பொருட்கள். எனவே, மின்னேற்றம் நிலையாக இல்லாமல் ஓடும். எனவே, இதை மின்னோட்டம் அல்லது மின்சாரம் என்கிறோம். இரண்டிலும் உள்ள மின்னேற்றம் ஒன்றுதான். நிலை மின்சாரம் குவிந்து உள்ள இடத்திலிருந்து வயர் வழியாக ஓடும் மின்னேற்றமானது மின்னோட்டம் பெறும். ஒரு காலத்தில் இவ்வாறுதான் மின்சாதனங்களை இயக்கினர். மின்னேற்றத்தின் இரண்டு நிலைகளே மின்சாரம் மற்றும் நிலை மின்சாரம்.
2. உள்ளங்கையில் டார்ச் விளக்கு அடித்தால் மறுபுறம் சிவப்பாகத் தெரிவது ஏன்?
த.தர்மேஷ், 9ஆம் வகுப்பு, சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, காஞ்சிபுரம்.
வெண்மை ஒளி என்பது பல்வேறு நிறங்களின் கூட்டுக்கலவை. கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் பொருட்கள் எல்லா நிற ஒளிகளையும் சற்றேறக்குறைய ஒரே அளவில் கடத்தும். எனவே, ஒருபுறம் புகும் வெண்மை ஒளி மறுபுறத்தில் வெளிப்படும்போது அதே வெண்மை நிறத்தில் உள்ளது. சில ஊடுருவும் பொருட்களில், அதன் தன்மைக்கு ஏற்ப, குறிப்பிட்ட நிறங்களைத் தவிர வேறு நிறங்களைக் கடத்தாது.
அப்படித்தான் உள்ளங்கையில் டார்ச் விளக்கு அடிக்கும்போது ஒளியானது தோலுக்குள்ளே செல்கிறது. அங்கே உள்ள பொருட்களில் பட்டுச் சிதறுகிறது. அவ்வாறு சிதறும்போது, தோலின் அடியில் உள்ள பொருட்களின் நிறத்தை வெளிப்படுத்துகிறது. சிவப்பு நிறத்தைத்தவிர மற்ற நிறங்களைத் தோலின் அடியில் உள்ள திசுக்கள் உட்கவர்கின்றன. இதனால் வெறும் சிவப்பு நிறம் மட்டுமே வெளிப்படுகிறது.
3. உயிரற்ற பொருட்களை நகர்த்த விசை தேவைப்படுவது போல், உயிருள்ளவற்றை நகர்த்த எது பயன்படுகிறது?
பி.லீலா சாய்ராம், 10ஆம் வகுப்பு, தூய இருதய மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
எல்லாவற்றுக்கும் விசை தேவைப்படுகிறது! நிலத்தை உழும் பணியில் கலப்பையை மாடு இழுத்துச் செல்லும்போது, மாடு தனது ஆற்றலைப் பயன்படுத்தியே விசை கொடுக்கிறது. இதனால் அதன் திசுக்களில் உள்ள ஆற்றல் செலவாகிறது. இழந்த ஆற்றலைத் திரும்பப் பெறவே உழைத்து முடித்த மாடுகள் உணவுக்காக ஏங்குகின்றன.
எடுத்துக்காட்டாக, மூக்கு அரிக்கும்போது சொரிவதற்காக கையை நகர்த்த வேண்டும். இந்தச் செயலுக்காக முதலில் மூளையில் குறிப்பிட்ட பகுதியில் மின்துடிப்பு ஏற்படுகிறது. இந்தத் துடிப்பு, நரம்பு வழியாகச் சரியான தசைப் பகுதிக்கு வந்து சேர்கிறது. மின்னேற்றம் பாய்ந்து தசை சுருங்கி விரிகிறது. அதுவே நமது கையை நகர்த்தச் சொல்கிறது.
உண்ணும் உணவின் ஒரு பகுதிதான் ஆற்றலாக மாறி, மூளையில் மின் துடிப்பாக வெளிப்படுகிறது. மின் விசை, மின்வேதி விசை, போன்ற பல்வேறு விசைகள் காரணமாகவே உயிருள்ள பொருட்கள் இயங்குகின்றன.
4. ஒரு நாளில் மீன்கள் எவ்வளவு தூரம் நீந்தும் என்பதற்கு கணக்கீடு இருக்கிறதா?
வீ.என்.ரஞ்சனி, 11ஆம் வகுப்பு, அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா பள்ளி, சென்னை.
தனக்கு வேண்டிய உணவுக்காகவும் இனப்பெருக்கம் செய்யவும், தன் இருப்பிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு மீன்கள் வலசை (Migration) போகும். அதுபோன்ற சமயங்களில் சால்மன் மீன் (Salmon Fish) ஒவ்வொரு நாளும் சுமார் 30 முதல் 40 கி.மீ. வரை நீந்தும் என்கிறார்கள். பகல், இரவு, எல்லா நேரமும் ஒரே வேகத்தில் மீன்கள் நீந்துவதில்லை. சில சமயம் அவை நீரில் மிதக்கும். எனவே, சராசரி தூரத்தைக் கொண்டுதான் மதிப்பீடு செய்ய முடியும். ஓர் ஆய்வில் நெத்திலி மீன் போன்ற சில்வர்சித்தே (silversides) எனும் மீனின் சராசரி வேகத்தைக் கணக்கீடு செய்தனர். ஒரு நொடியில் சுமார் 7.9 செ.மீ. செல்லும் இந்த வகை மீன், ஒரு நாளில் சுமார் 6.8 கி.மீ. தொலைவு நீந்துகிறது.
தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாகவும், மீன்கள் உயிர் வாழ்வதற்கு வசதியான வாழ்விடத்தைத் தேடி கடலில் வேறு திசை நோக்கி நகர்கின்றன. ஆகவே, அவை நீந்தும் தூரத்தைச் சரியாகக் கணக்கிட முடியாது.
