தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!


PUBLISHED ON : ஆக 19, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

பிரளயம் வந்து உலகம் அழியும் என்கிற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது?

ஆர்.கிருஷ்ணஸ்வாமி, சென்னை.


சூரியனின் நிறையில் பெருமளவு இருக்கும் ஹைட்ரஜன், அணுக்கருப் பிணைவு வினை மூலம் ஹீலிய அணுவாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த வினைமூலம் ஆற்றல் உருவாகி, சூரியன் ஒளியை உமிழ்கிறது.

இன்னும் 500 கோடி ஆண்டுகள் கடந்தபின், சூரியனின் மையத்தில் உள்ள ஹைட்ரஜன் தீர்ந்துவிடும். அப்போது சூரியனின் மையத்தில் அணுக்கருப் பிணைவு ஏற்படாது. மையத்தில் வெப்ப ஆற்றல் இல்லாத காரணத்தால், ஈர்ப்பு விசையில் சூரியனின் மையக்கரு சுருங்கும். இதன் காரணமாகச் சூரியனின் மேல் அடுக்கு விரிவடைந்து, சூரியன் ராட்சச வடிவம் பெறும். இதனைச் சிவப்பு ராட்சச விண்மீன்கள் என்பார்கள். அந்தச் சமயத்தில், நமது பூமி அழியும். இதுதான் அறிவியல் கூறும் பிரளயம். இந்தப் பிரளயம் விரைவில் வந்துவிடப் போவதில்லை.

ஆயினும், புவி வெப்பமடைதல், பருவகால மாற்றம் என, பல சவால்களை பூமி சந்தித்து வருகிறது. காற்று, நீர், வளிமண்டலம் என, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி நாமே பிரளயத்தை செயற்கையாக ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

வெட்டுக் காயத்தில் ஐஸ் வைத்தவுடன் இரத்தம் ஏன் நின்று விடுகிறது?

ச.சந்தியா, 7ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.


காயம்பட்ட இடத்தில் உள்ள, சிறு நுண் இரத்த நாளங்களில் முறிவு ஏற்படுவதே ரத்தக் கசிவுக்குக் காரணம். அந்தப் பகுதியில் ஐஸ் வைக்கும்போது, இரத்த நாளங்கள் சுருங்கிக் கொள்ளும். அவ்வாறு சுருங்கும்போது, எளிதில் இரத்தம் கட்டி கசிவு அடைபடும்.

அதுபோல், போதிய இரத்தம் பாயாமல் தலைவலி ஏற்படும்போது, வெந்நீர் பருகினால் இரத்த நாளங்கள் விரிகிறது. இதன் விளைவாக, நாளங்களில் கூடுதல் இரத்தம் பாய்ந்து தலைவலி குறையும்.

நிலா, நட்சத்திரம் போன்றவற்றை அலைபேசி மூலம் படம் எடுத்தால் வளைந்து தெரிவது ஏன்?

எம்.நிஷாந்தினி, 5ஆம் வகுப்பு, காமராஜர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சிவகாசி.


சாதாரண கேமராவில் ஃபிலிம் உள்ளது போல, அலைபேசியில் உள்ள மின்னணு கேமராவில் ஒளியை உணரும் உணர்விகள் (Sensors) உள்ளன. இந்த மின்னணு உணர்வி, கேமராவை இயக்கும்போது மட்டுமே செயற்படும். அந்தக் கணத்தில் லென்ஸ் வழியே உணர்வியில் படும் ஒளியை வைத்தே படம் பதிவாகிறது.

உணர்வி செயற்படும் கால இடைவெளி, திறப்பி திறந்திருக்கும் (shutter speed) நேரம் 1/30 ஆக இருக்கும். அதாவது ஒரு நொடியின் முப்பது பங்கில் ஒரு பங்கு நேரம். சில சமயம் சுமார் முப்பது நொடிகள் கூடத் திறக்கும். குறைவாகச் சுமார் 1/3200 நொடிகள்கூட இருக்கலாம்.

கேமரா நடுக்கம் இருந்தாலும், பிரகாசமான காட்சியை சட்டென்று உணர்வி பதிவு செய்யும். இரவு நேரத்தில் ஒளி குறைவாக மங்கலாகக் காட்சி இருக்கும்போது, தானாகவே திறப்பி திறக்கும் நேரம் கூடும். எனவே, இந்தக் கால அவகாசம் முழுவதும் ஏற்படும் கைநடுக்கம், உணர்வியில் பதிந்து காட்சியை வளைந்துள்ளதுபோல காட்டும்.

சுற்றுப்புறத்தில் உள்ள வெளிச்சத்தை உணர்ந்து, திறப்பி திறக்கும் காலஅவகாசத்தைத் தானாகவே தீர்மானிக்கும் அமைப்பை மாற்றவேண்டும். பின்னர், திறப்பி குறைவான நேரம் திறக்கும்படி வைத்துப் புகைப்படம் எடுத்தால், நடுக்கப் பதிவு குறையும். நிலா, நட்சத்திரம் போன்றவை பிரகாசமாக இருப்பதில்லை. எனவே, அலைபேசிப் படத்தில் தெளிவாகப் பதியாது.

உயரமான இடத்திற்குச் செல்லும்போது இதயத்துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன?

ச.கண்ணன், வத்தலக்குண்டு
.

கடல் மட்டத்தில் சதுர சென்டிமீட்டருக்கு சுமார் 1.03 கி.கி. காற்றழுத்தம் உள்ளது. இந்த அழுத்தத்தில் நுரையீரல் ஜவ்வு வழியாக எளிதில் ஆக்சிஜன் இரத்தத்தில் கலக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,637 மீட்டர் உயரத்தில் இருக்கும் தொட்டபெட்டா சிகரத்தில், காற்றழுத்தம் கடல் மட்டத்தைவிட சுமார் 26 சதவீதம் குறைவு. இங்கே உள்ள குறைந்த காற்றழுத்தத்தில் எளிதில் அதே விகிதத்தில் நுரையீரலில் ஆக்சிஜன் புகாது. எனவே, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற உடலியல் சிக்கல்கள் ஏற்படும்.

இப்பிரச்னைகளைச் சமாளிக்க உடல், கூடுதல் வேகத்தில் இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. ஆழ்ந்து மூச்சை இழுத்தும், இரத்த அழுத்தத்தை அதிகரித்தும் கூடுதல் ஆக்சிஜனைப்பெற முயற்சிக்கும். கூடுதல் நாட்கள் மலை உச்சியில் வாழ்ந்தால், நமது உடல் கூடுதல் இரத்தச் சிவப்பு அணுக்களை உருவாக்கி அதன் செறிவைக் கூட்டும். அதேபோல, சிறு நுண் இரத்த நாளங்கள் புதிதாக வளரும். இவ்வாறு உடல் தகவமைத்துக் கொண்டதும், மூச்சு இறைத்தல், இதயம் வேகவேகமாகத் துடித்தல் போன்றவை நின்று போகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us