தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!


PUBLISHED ON : அக் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

நம் நாட்டில் குஜராத் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் சூரியன் ஏன் முன்னதாகவே உதிக்கிறது?

க.உதயசுதர்சனன், 10ஆம் வகுப்பு, தாய் பதின்ம மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.


2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று அலகாபாத் நகரில் சூரிய உதயம் காலை 5:32 மணிக்கு நிகழ்ந்தது. அதே நாள் சென்னையில் 5:55 மணிக்கே சூரிய உதயம் ஏற்பட்டது. இந்தியாவின் கிழக்கு எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள டொங் (Dong) பகுதியில், 4:27 மணிக்கே சூரிய உதயம் நிகழ்ந்தது. அப்போது, மேற்கு எல்லையில் உள்ள குஜராத்தின் குஹர் மொட்டியில் (Guhar Moti) 6:28க்குத்தான் சூரிய உதயம் நடந்தது. அதாவது, இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஏற்படுவது இல்லை.

பூமி தன்னைத் தானே சுற்றுவதால், பகல் இரவு ஏற்படுகிறது என நாம் அறிவோம். பூமி மேற்கில் இருந்து கிழக்காகச் சுற்றுகிறது. எனவே, சூரியனுக்கு நேரே முதலில் கிழக்கில் உள்ள பகுதிகள் வரும்; அதாவது, அங்கே முதலில் பகல் ஏற்படும். அதன் பின்னர்தான் நாம் இருக்கும் இடம், சூரியனை நோக்கிச் சுழலும். அதாவது, நமக்கு பகல் அதன் பின்னேதான் ஏற்படும்.

நமக்கு மேற்குத் திசையில் உள்ளவர்கள் வாழும் பகுதி, நமக்குப் பிறகே சூரியனை நோக்கிச் செல்லும். எனவே, அங்கே நமக்குப் பின்னர் சூரியன் உதிக்கும். 82.5° E தீர்க்கரேகை கோடுதான் இந்தியாவில் பொதுவான இந்தியத் தர நேரம் (IST: India Standard Time) ஏற்படுத்தப் பயன்படுகிறது. அதாவது, இந்தக் கோட்டின் மீது சரியாகச் செங்குத்தாக சூரியன் நிற்கும் நேரமே மதியம் பன்னிரெண்டு மணி என தீர்மானம் செய்கிறோம்.

இந்தியா பெரிய நாடு. இந்தியாவின் கிழக்கில் உள்ள பகுதி, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளது டொங். இதன் தீர்க்கரேகை 97.020 E. அதாவது பொதுநேர தீர்க்க ரேகையைவிட 14:12 டிகிரி வித்தியாசம்! ஒரு டிகிரி வித்தியாசம் என்பது நான்கு நிமிடங்கள். எனவே, சுமார் 56 நிமிடங்களுக்கு முன்னர் அங்கே சூரியன் உதயமாகிவிடும். எனவே, இந்தியாவைப் பொறுத்த வரை, முதலில் சூரியன் உதிக்கும் பகுதி இதுவே! அதேபோல மேற்கு எல்லையில் இருக்கும் குஹர் மொட்டியின் தீர்க்கரேகை 68.30 E. எனவே, இங்கும் சுமார் 56 நிமிடங்கள் வித்தியாசம் அமையும்.

சமையல் எரிவாயுவுக்கு வாசனை எதன் மூலம் கிடைக்கிறது?

ச.சாருதிகா, இந்து ஆரம்பப் பள்ளி, பாப்பையநாயக்கர்பட்டி.


சமையல் எரிவாயு எனப்படும் எல்.பி.ஜி. (Liquefied petroleum gas) வாயு, புரப்பேன் (propane) மற்றும் பியூட்டேன் (butane) எனப்படும் இரண்டு ஹைட்ரோகார்பன் வாயுக்களின் கலவையே.

இந்த இரண்டு வாயுக்களுக்கும் எந்த மணமும் இல்லை. ஆனால், வீடுகளில் சிலிண்டர்களில் வாயு கசிவு ஏற்பட்டால், எளிதில் கண்டுபிடிக்கும் விதமாக எத்தில் மெர்கேப்டன் (Ethyl Mercaptan) என்ற மணம் தரும் ஒரு வேதிப் பொருளை அதனுடன் சேர்க்கிறார்கள்.

மனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா?

அருந்தமிழ் ஆதவன், 10ஆம் வகுப்பு, பிரிம்ரோஸ் பள்ளி, புதுவை.


மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் ஆசிய யானையால் ஓடமுடியும் என, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும், ஆப்பிரிக்க யானை மணிக்கு சுமார் 40 கி.மீ. வரைகூட ஓடும். சாதாரணமாகத் துடிப்போடு இருக்கும் வாலிபனால் மணிக்கு 24 கி.மீ. மட்டுமே ஓட முடியும்.

இயல்பான நடை என்றால், யானையால் ஒரு மணிநேரத்தில் சுமார் 5 கி.மீ. தொலைவு நடந்து செல்ல முடியும். யானைகள் எவ்வளவு வேகமாகச் செல்லக் கூடியதாக இருப்பினும் வழியில் குறுக்கிடும் சிறிய மேடு, பள்ளங்களை அவற்றால் தாவிப் பாய்ந்து செல்ல முடியாது.

கடற்கரை அருகே உள்ள கிணற்று நீர் சுவையாக இருப்பது எப்படி?

ஆர்.வி.சாய் அரவிந்த், 9ஆம் வகுப்பு, செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்
.

நிலத்தடி நீர் என்பது, நிலத்துக்கு அடியில் உள்ள இடுக்குகளில் தேங்கி இருப்பது தான். ஆங்காங்கே கிடங்கு, குழி போல இந்த நீர் இருக்கும். கடற்கரை அருகே இருந்தாலும் கிணறு போன்ற ஊற்று நீர் நிலைகள், நிலத்தடி நீரையே எடுத்துத் தருகின்றன. இன்னும் கீழே உள்ள உப்பு நீரின் மீது, மழை நீர் போன்ற நன்னீர் எண்ணெய்த் துளிபோல மிதக்கும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக நீரை உறிஞ்சி எடுத்தால், உப்பு நீரும் நன்னீரும் கலந்து இரண்டும் கெட்டுவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us