தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தனித்தன்மைகளுக்கு அங்கீகாரம்!

தனித்தன்மைகளுக்கு அங்கீகாரம்!

தனித்தன்மைகளுக்கு அங்கீகாரம்!


PUBLISHED ON : செப் 24, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“மிஸ், அந்தக் காலத்துல டபுள் புரோமோஷன் கொடுப்பாங்கன்னு எங்கப்பா சொல்லுவாரு. அதுமாதிரி இப்போ ஏன் கொடுக்கறதில்ல, மிஸ்?”

உணவு இடைவேளையின்போது, இந்தப் பேச்சு வந்தது. உமா மிஸ் சிரித்துக்கொண்டார்.

“நானும் கேள்விப்பட்டிருக்கேன். எந்தக் காலத்துல அப்படிக் கொடுத்தாங்க, எந்த ஸ்கூல்ல கொடுத்தாங்கன்னெல்லாம் எனக்குத் தெரியலை. ஆனால், நல்லா படிச்சா, ரெண்டு கிளாஸ் மேலே போயிடலாம், அதுக்கு ஏத்தாபோல படின்னு ஊக்கப்படுத்தறதுக்காக இப்படிச் சொல்லி இருப்பாங்களோன்னு நினைச்சுப்பேன். சரி, எதுக்கு இந்தக் கேள்விய இப்போ கேக்கறே?”

“கிளாஸ் ரொம்ப போர் அடிக்குது மிஸ். நிறைய தெரிஞ்ச விஷயங்களையே திருப்பித் திருப்பி படிக்கறா மாதிரி இருக்கு. அதுவும் நான் இன்டர்நெட்டுல வீடியோஸெல்லாம் பார்த்துடறதால, எங்க மிஸ் என்ன சொல்லப் போறாங்கன்னு எனக்குப் புரிஞ்சுடுது. அதுக்கு மேலே மிஸ் சொல்லித்தர மாட்டேங்கறாங்க. பல கிளாஸ் ரொம்ப 'சப்'ன்னு இருக்கு.”

ஒரு கணம் பல்லைக் கடித்துக்கொண்டேன். என் வார்த்தைகள் ரொம்ப ஆணவமும் கர்வமும் பிடித்தவனுடைய குரலாக ஒலித்திருக்குமோ? தெரியவில்லை. இது என் பிரச்னை. பல சமயங்களில் பாடங்களை முன்கூட்டியே படித்துவிடுவேன். அது தொடர்பாக இருக்கும் கூடுதல் தகவல்களையும் இணையத்தில் தேடிக்கொண்டிருப்பேன்.

ஆச்சரியமான புதிய செய்திகள் கொட்டும். அப்பாவிடம் அதையெல்லாம் காண்பித்து விவரம் கேட்கும்போது, அவருக்குத் தெரிந்த விஷயங்களை உற்சாகமாக விளக்குவார். வகுப்பில் அத்தகைய உற்சாகம் இருக்காது.

“இது உன் பிரச்னை மட்டுமல்ல கதிர். உலகம் முழுக்க இருக்கு. வேகமாக பல செய்திகளை பல மாணவர்கள் படிச்சுடறாங்க, தெரிஞ்சுக்கறாங்க. அதனால், அவர்களுக்கு வகுப்பு ரொம்பவும் போர் அடிக்குது. இதைப் பத்தி ரொம்ப காலமாக பல கல்வியாளர்கள் யோசிச்சுக்கிட்டு வராங்க.

நாம் இப்போ ஒரு முறையைப் பின்பற்றிக்கிட்டு வரோம். வயசுக்கேற்ற கல்வி முறைன்னு இதுக்குப் பேரு. 5 வயசுல முதல் வகுப்பு, 10 வயசுல அஞ்சாம் வகுப்பு, 15 வயசுல பத்தாம் வகுப்பு படிக்கணும்னு திட்டமிட்டு இருக்கோம். அதாவது, அந்தந்த வயசுல மூளை வளர்ச்சியும் புரிஞ்சுகொள்கிற திறனும் எவ்வளவு இருக்குமோ, அந்த அளவுக்கு மட்டுமே படிப்பு சொல்லித் தரப்படணுங்கறதுதான் நோக்கம். ஆனால், இன்னிக்கு நிலைமை அப்படி இல்லை. உன்னைப் போன்ற ஸ்டூடன்டஸ் வேகவேகமாகப் பல விஷயங்களைப் படிச்சுடறீங்க. சீக்கிரமாகவே புரிஞ்சுக்கறீங்க.

அதனால், இனிமே வயசுக்கேற்ற வகுப்புங்கறதை மாத்தி, 'கற்றல் திறனுக்கேற்ப கல்வி' சொல்லித் தரப்படணும்னு பேச ஆரம்பிச்சு இருக்காங்க. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் கோன்ஸ்கிங்கறவர் இது சம்பந்தமான ஆலோசனைகளை அந்த நாட்டு அரசாங்கத்துக்குக் கொடுத்திருக்கிறார்.”

“அப்படின்னா, இனிமே வகுப்புகளே இருக்காதா மிஸ்?”

“அப்படி இல்ல. ஒரே வகுப்புக்குள்ளேயே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு புத்திசாலித்தனத்தோட இருப்பாங்க. அவங்களுக்கு ஏற்ப கல்வியும் சோதனை முறைகளும் மாறணுங்கறதுதான் கோன்ஸ்கியோட கருத்து. இப்பத்தான் இதைப் பத்தி பேச ஆரம்பிச்சு இருக்காங்க.”

“அப்ப எப்படி மிஸ், நான் வேகமா புரிஞ்சுக்கறவன் அல்லது இன்னொருத்தர் என்னைவிட வேகமாக புரிஞ்சுக்கறவர்ங்கறதைக் கண்டுபிடிக்க முடியும்?”

“பிரமாதமா கேள்வி கேக்கற கதிர். நீ கேட்டது தான் இன்னிக்குப் பெரிய சவாலா இருக்கு. இதுக்குத்தான் இன்னொரு அணுகுமுறையை வெளிநாட்டுல பேசிக்கிட்டு இருக்காங்க.”

“அது என்ன மிஸ்?”

“அதைச் சொல்றதுக்கு முன்ன, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு. உனக்கு ஜுரம் வந்தா என்ன பண்ணுவே?”

“டாக்டர்கிட்டே போவேன்.”

“மருந்து எழுதிக் கொடுப்பாரா, இல்லை ஏதாவது டெஸ்ட் எடுக்கச் சொல்வாரா?”

“முதல்ல மருந்து கொடுப்பாரு மிஸ். ஜுரம் குறையலன்னா, மலேரியா அல்லது டைஃபாய்டு இருக்கான்னு பார்க்கறதுக்கு டெஸ்ட் எடுக்கச் சொல்வாரு.”

“கரெக்ட். இன்னிக்கு யாரும் எந்தவிதமான முடிவுகளையும் சொந்தமா எடுக்க மாட்டாங்க. குறிப்பாக, மருத்துவத்துறையில எடுக்கவே மாட்டாங்க. டெஸ்ட் எடுக்கச் சொல்வாங்க. காரணம், ஒருத்தருக்கு ஒரு பிரச்னை இருக்குதுன்னோ அல்லது இல்லைன்னோ ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கணும். அதுக்கு அப்புறம்தான் மருத்து. இதுக்கு 'எவிடன்ஸ் பேஸ்டு ட்ரீட்மென்ட்' முறைன்னே பேரு. உறுதிப்படுத்திக்காமல் எதையும் செய்யக்கூடாது.

இதே மாதிரி எவிடன்ஸ் பேஸ்டு டீச்சிங்கை கொண்டுவரணுங்கற சிந்தனை வந்திருக்கு. அதாவது, ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கறது எவ்வளவு தூரம் மாணவர்கள்கிட்ட போய்ச் சேர்ந்திருக்கு, அதை அவங்க புரிஞ்சுக்கிட்டு இருக்காங்களா, அல்லது அதுல ஏதேனும் குறை இருக்கான்னு கண்டுபிடிக்கணும். அதற்கு ஏத்தாமாதிரி, அடுத்த கட்ட பாடங்களை அவங்களுக்குச் சொல்லித்தரணும்.

எல்லோரும் புரிஞ்சுக்கிட்டு இருப்பாங்க என்ற நம்பிக்கையில, மேலே மேலே சொல்லிக்கொடுத்துக்கிட்டே போகக் கூடாது. அதனால், மாணவனுக்கு எந்தப் பலனும் இல்லைங்கற எண்ணம் வந்துடுச்சு.”

“இதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும், மிஸ்?”

“கஷ்டமான விஷயம்தான். இன்னிக்கு இருக்கிற தேர்வு முறைகள் எல்லாம் பொத்தாம் பொதுவாக இருக்குது. இதை எப்படி மாத்தறதுன்னும் யோசிச்சுக்கிட்டு இருக்காங்க. உன்ன மாதிரி வேகமாகப் படிக்கறவங்களை, சுலபமா புரிஞ்சுக்கறவங்களைக் கண்டுபிடிச்சு, ஊக்கப்படுத்தறது மட்டும் இதனோட நோக்கம் இல்ல. மெல்ல மெல்ல படிக்கறவங்களைக் கண்டுபிடிச்சு, அவங்களோட புரிஞ்சுக்கற சக்திக்கு ஏற்பவும் பாடங்களைத் தர்றதுதான் இன்னொரு பெரிய சவால். ஆனால், எல்லோரும் புரிஞ்சுக்கிட்டு படிக்கணும்றதுதான் அடிப்படை.

இனிமேல் கும்பல்ல கோரஸா கத்த முடியாது. ஒவ்வொருத்தருடைய திறமைகள் முக்கியம், அறிவும் திறனும் முக்கியம். அதற்கு ஏற்ப பாடங்கள் சொல்லித் தரப்படணும். இதைத்தான் தனித்தன்மைன்னு சொல்றோம். அதைப் போற்றி வளர்க்கணும். ஐந்து விரலும் ஒரே மாதிரியாவா இருக்கு. ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு உயரத்துல இருக்குது இல்லையா? இதுதான் இயற்கை. அந்த இயற்கை நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லித்தருது. நாமதான் புரிஞ்சுக்கணும்.”

உமா மிஸ் பேசப்பேச எனக்குள்ளே நம்பிக்கை ஏற்பட்டது. நான் அடையவேண்டிய தூரமும், தொடவேண்டிய உயரமும் அடையமுடியாத விஷயங்கள் இல்லை என்பது புரியத் தொடங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us