
கஸ்தூரிபா காந்தி
11.4.1869 - 22.2.1944
போர்பந்தர், குஜராத்
சாதாரணமானவராக இருந்து, ஓர் அசாதாரணமான நபரை உருவாக்கினார். இவர் இல்லையெனில் காந்தி, மகாத்மாவாக மாறியிருக்க முடியாது. காந்தி, 'தேசத் தந்தை' ஆனதன் பின்னணியில், இந்தத் தாயின் பங்களிப்பு மிக அதிகம். மகாத்மாவுக்கு இணையான புகழுக்குரிய அவதார மனுஷி கஸ்தூரிபா காந்தி.
தன்னைவிட வயதில், சில மாதங்கள் இளையவராக இருந்த, காந்தியுடன் 13 வயதில் திருமணம். சிறுவர்களாக ஒன்றாகவே வளர்ந்தனர். ஆரம்பத்தில் அவர்களது இல்லற வாழ்வில் சிற்சில பிரச்னைகள் இருந்தன. கணவர் இவர் மீது நடத்திய தாக்குதல்களுடன், கணவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் தாங்கிக்கொண்டார். நாளடைவில் பிரச்னைகள் சரியாகி, கஸ்தூரிபாவின் அறியாமையைப் போக்க எழுதப் படிக்க சொல்லிக் கொடுத்தார் காந்தி. இவர்களுக்கு நான்கு மகன்கள் பிறந்தனர். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால், குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார்.
1897இல் வழக்கறிஞர் பணிக்காக தென்னாப்பிரிக்கா சென்ற காந்தியுடன் கஸ்தூரிபாவும் சென்று, போராட்ட வாழ்க்கையை எதிர்கொண்டார். அங்கு நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தில், காந்தியுடன் துணைநின்று சிறை சென்றார். காந்தி கைதாகி சிறை சென்ற நேரங்களில் போராட்டங்களுக்குத் தலைமையும் தாங்கினார்.
1915இல் தாய்நாடு திரும்பி, இந்திய விடுதலைப் போரில் காந்தியுடன் களமிறங்கினார். காந்தியின் எளிய வாழ்வைப் பல இன்னல்களுடன் ஏற்று, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கினார். 1942இல் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கைதாகிச் சிறை வைக்கப்பட்டு, உடல் நலப் பிரச்னைகளால் மரணமடைந்தார்.
தன் வாழ்நாள் முழுவதும் காந்திக்குத் துணையாக இருந்தார். தனக்கென தனித்த வாழ்க்கை ஏதுமின்றி, கணவரின் வாழ்க்கையைத் தனதாக்கிக் கொண்டார். கஸ்தூரிபாவின் தியாகமும் போராட்டமும், மிக உயர்வாக மதிக்கப்படுகிற காந்தியின் தியாகத்துக்கு ஒருபோதும் குறைவானதல்ல!