PUBLISHED ON : அக் 21, 2019

ஆண்டுதோறும் 'பிங்க் அக்டோபர்' கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதம் இது. மருத்துவமனையில் சிறப்பு முகாம்கள், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி திரட்ட ஓட்டப்பந்தயம், மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடக்கும்.
பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதன்மையானது, மார்பகப் புற்றுநோய். உலகம் முழுவதும் ஒவ்வோராண்டும் 22 லட்சம் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும், 87,090 பெண்கள் பாதிப்படைகின்றனர்.
மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சில காரணங்கள்:
* சிறுவயதிலேயே பருவமடைதல்
* மாதவிடாய் நிற்பதில் ஏற்படும் தாமதம்
* தாமதமாகக் குழந்தை பெற்றுக் கொள்ளுதல்
துரித உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கும் நோய் தாக்குதல் வர வாய்ப்புண்டு என, சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
ஆறுதலான விஷயம் என்னவென்றால், மற்ற வகை புற்றுநோயைப் போலல்லாமல், மார்பகப் புற்றுநோயை பெண்களே சுயபரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதுதான்.
1. மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் நெரிக்கட்டி ஏற்படும்.
2. மார்பக அமைப்பில் மாற்றம் ஏற்படும்.
3. மார்பகக் காம்புகளிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படும்.
4. மார்பகக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல், மார்பகத் தோலில் சுருக்கம் உண்டாதல்.
சுயபரிசோதனைகள் செய்யும்போது, மாற்றங்ளை உணர்ந்தால், உடனடியாக குடும்ப மருத்துவரது ஆலோசனையைப் பெற வேண்டும்.
35 வயதைத் தாண்டிய பெண்கள் அனைவருமே கட்டாயமாக, அரசு மருத்துவமனைகள் அல்லது தனியார் மருத்துவமனைகளில் மேமோகிராம் (Mammography) என்ற மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பது மருத்துவர்கள் ஆலோசனை.
ஒருவேளை மார்பகப் புற்றுநோய் வந்துவிட்டால், எந்தவிதப் பதற்றமும் அடையத் தேவையில்லை.
இன்று, புற்றுநோய் சிகிச்சை வளர்ந்துவிட்டதால், சிறந்த சிகிச்சைகள் மூலமாக, மீண்டு வரமுடியும்.
அப்படி மீண்டு வந்த பல பிரபலங்கள், நம் கண்முன்னே வாழ்கின்றனர்.
சிகிச்சைகளைத் தாங்கும் வலிமை இருந்துவிட்டால், கடினமான நாட்களைக் கடந்து மீண்டும் புதிய வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். நோய் வந்துவிட்டது என்று யாருமே மனம் தளர வேண்டாம்.
தடுக்க இயலுமா?
1. தாய்ப்பால் கொடுத்தல்
2. உடல் பருமனைக் குறைத்தல்
3. ஊட்டச்சத்தான உணவுகள்
ஆகியவை மூலம் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க வாய்ப்புண்டு.
