PUBLISHED ON : நவ 13, 2017

ஆங்கிலப் பெயர்கள்: 'கோலா பியர்' (Koala Bear), 'நேட்டிவ் பியர்' (Native Bear), 'மங்கி பியர்' (Monkey Bear)
உயிரியல் பெயர்: 'பாஸ்கோலார்க்டஸ் சினிரியூஸ்' (Phascolarctos Cinereus)
குடும்பம்: 'பாஸ்கோலார்க்டிடே' (Phascolarctidae)
வேறு பெயர்கள்: பொம்மைக் கரடி, மரக் கரடி
நீளம்: 3 அடி
எடை: 4 முதல் 15 கிலோ வரை
இனப்பெருக்க காலம்: 36 நாட்கள்
ஆயுட்காலம்: 18 ஆண்டுகள்
பொம்மைக் கரடி போல அழகாகத் தோற்றமளிக்கும் கோலா கரடி, ஒரு பாலூட்டி விலங்கினம். கரடி இனத்தைச் சேர்ந்தது. ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் இவை, அந்த நாட்டின் முக்கிய அடையாளச் சின்னம்.
பெயர்க் காரணம்
ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் சொல் 'கோவாலா'. இதன் பொருள் 'தண்ணீர் தேவையில்லை' என்பதாகும். கோலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. அவை உண்ணும் யூகலிப்டஸ் மரத்தின் இலைகளில் இருந்து உடலுக்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்கின்றன. யூகலிப்டஸ் இலைகளை வேறு எந்த விலங்கும் சாப்பிடுவதில்லை.
உடல் அமைப்பு
பஞ்சு போன்ற அகன்ற காதுகள், கருப்பு நிற மூக்கு, பூனை மாதிரி உடம்பு, எலி போன்ற முக அமைப்பு உடையது. உடல் சாம்பல், கருப்பு கலந்த நிறத்தில் அடர்த்தியான, வழுவழுப்பான ரோமங்களுடன் இருக்கும். வால் கிடையாது. முரடான பாதங்களும், கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏற உதவுகின்றன. பெண் கோலாக்களுக்கு மூக்கு சற்று வளைந்திருக்கும்.
இயல்பு
கோலா மிகவும் சாதுவான பிராணி. ஒரு நாளில் 20 மணிநேரம் வரை உறங்கிக்கொண்டிருக்கும். இதனால் பார்ப்பதற்கு மயங்கிய நிலையில் இருப்பதைப்போலவே தோற்றமளிக்கும். எப்போதாவதுதான் மரத்தைவிட்டு இறங்கும். இரவில் இலையைத் தின்று பகலில் தூங்கும். ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டுமே போடும். குட்டி 'ஜோயி' (Joey) எனக் குறிப்பிடப்படுகிறது. கங்காரு போல கோலாவும் ஆறு மாதத்திற்கு குட்டியைத் தன் வயிற்றுப் பகுதியில் வைத்திருக்கும்.
உணவு
பிரதான உணவு யூகலிப்டஸ் (Eucalyptus) இலைகள். இந்த மரங்களிலேயே இவை வசிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள 600 வகையான யூகலிப்டஸ் மரங்களில் சுமார் 50 வகையான மரங்களின் இலைகளை மட்டுமே இவை தேர்வு செய்து சாப்பிடுகின்றன. இவை 'கம் இலைகள்' (Gum Leaves) எனப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 500 கிராம் அளவு இலைகளைத் தின்னும். இந்த இலைகளில் 50 சதவீத நீரும், 5 சதவீத மாவுச்சத்தும், சர்க்கரைச் சத்தும் உள்ளது. உணவை மென்று சாப்பிடும்போது, வாயில் ஒதுக்கி வைத்துக்கொள்ளும். மிருகக்காட்சி சாலையில் வளர்க்கப்படும் சில கோலாக்கள், பால், ரொட்டி போன்றவற்றை உண்ணப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயங்களில் இவை மரப்பொந்துகளில் உள்ள நீரையும் அருந்துகின்றன.
எதிரிகள்
மலைப்பாம்பு, கழுகு, ஆந்தை ஆகியவற்றால் இவை வேட்டையாடப்படுகின்றன.
அழிந்து வரும் இனம்
உலகில் அழிந்துவரும் இனங்களில் இதுவும் ஒன்று. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature - IUCN) அழியும் தறுவாயில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கோலா இடம் பெற்றுள்ளது.
குடியிருப்புகளுக்காகவும், விவசாயம் போன்றவற்றுக்காகவும், இவற்றின் வாழ்விடம் அழிக்கப்படுவதால், இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கோலா சரணாலயம்
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேனில் உலகிலேயே முதலாவதும், பெரியதுமான கோலா சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. 'லோன் பைன் கோலா சரணாலயம்' (Lone Pine Koala Sanctuary) என்ற பெயருடைய இந்தச் சரணாலயத்தில், 130க்கும் மேற்பட்ட கோலாக்கள் உள்ளன. இங்கு வருகை தரும் பார்வையாளர்கள் இங்குள்ள கோலாக்களுக்கு கையில் தூக்கிக்கொண்டும், இலையை ஊட்டிவிட்டும் மகிழ்கின்றனர்.
- ப.கோபாலகிருஷ்ணன்
