PUBLISHED ON : அக் 17, 2016
புறமுதுகில்படும் அம்பை அவமானமாகக் கருதினார்கள் பண்டைய தமிழர்கள். மன்னர்கள் மட்டும் அல்ல, மக்களும் அப்படித்தான் கருதினார்கள். மார்பில் அம்பு பட்டு இறப்பது வீர மரணமாக கருதப்பட்டது.
புறநானூற்றில் (287) காக்கைப்பாடினியார் பாடிய, 'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்முலை அறுத்திடுவென் யான்' என்ற பாடலின் வாயிலாக அன்றைய மக்களின் வீர உணர்வை, நாம் அறிய முடிகிறது.
போருக்குச் சென்ற தன் மகன், பகைவர்க்குப் புறமுதுகு காட்டி இறந்தான் என்று சிலர் கூறுவதை கேட்கிறாள் ஒரு வீரத்தாய். 'அப்படி அவன் இறந்திருப்பான் எனில், அவன் பாலுண்ட மார்பையே வெட்டி எறிவேன்' என கோபம் மிகுந்தவளாய் போர்க்களத்திற்குச் செல்கிறாள். அங்கே அவள் மகன், மார்பில் அம்பு பட்டு வீர மரணம் அடைந்திருக்கிறான், கோழையாக இறக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்கிறாள் அந்தத் தாய்.
புறமுதுகில் பட்ட அம்புக்காக, வடக்கிருந்து உயிர்் துறக்கும் பழக்கம் தமிழ் மன்னர்களிடம் இருந்தது. உணவு, நீர் அருந்தாமல், வடக்கு நோக்கி இருந்து உயிர் விடுவது வடக்கிருத்தல்.
சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் வடக்கிருந்து உயிர் துறந்தார். ஆனால் சோழ மக்கள் தங்கள் நாட்டு அரசனின் வெற்றியை விட, சேர மன்னனுக்காக துயர் கொண்டனர். இதை வெண்ணிக்குயத்தியார் என்னும் புலவர்,
'வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப் புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே'
என்ற வரிகளில், உன்னை விட, வடக்கிருந்து உயிர்துறந்த சேர மன்னனே மிக நல்லவன், வீரப்புகழ் வாய்ந்தவன் என்று குறிப்பிடுகிறார்.
