PUBLISHED ON : அக் 17, 2016
தமிழகத்தை ஆட்சி செய்த அரசிகளில் மிகவும் முக்கியமானவர் வேலுநாச்சியார். தன் கணவர் இழந்த நாட்டை, தன்னுடைய வீரத்தாலும், விவேகத்தாலும் மீட்டெடுத்தவர்.
வேலுநாச்சியார், கி.பி.1730 ஆம் ஆண்டு, ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே மகளாகப் பிறந்தவர். ஆண் வாரிசு இல்லாத காரணத்தால், ஓர் இளவரசனுக்குரிய தகுதிகளோடு அவர் வளர்க்கப்பட்டார். சிலம்பு, குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை போன்றவை, அவர் கற்ற போர்க்கலைகளில் அடக்கம். வீரம் மட்டும் போதாது, பரந்த அறிவும் வேண்டும் என்று கருதி, தமிழுடன், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளையும் கற்றார்.
பின்னர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை அவர் மணம் முடிக்க நேர்ந்தது. அப்போது நாடு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயர்கள், முத்துவடுகநாதரை கப்பம் கட்டச்சொன்னார்கள். ஆனால் வடுகநாதர் மறுத்தார். விளைவு, அவர் 1772ல் காளையார் கோயிலுக்குச் சென்றபோது, ஆங்கிலேயர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
அரண்மனையில் இருந்த வேலுநாச்சியாருக்கு செய்தி எட்டியது. அவர் படைத்தளபதிகளான மருது சகோதரர்களுடன் தலைமறைவானார். காட்டில் மறைந்து வாழ்ந்த நாச்சியார், நாட்டை மீட்டெடுக்கும் வேலைகளில் இறங்கினார். திண்டுக்கல் மன்னர் ஹைதர் அலியின் உதவியை நாடினார். தனக்கு படைகள் தந்து உதவும்படி உருது மொழியில் கோரிக்கை வைத்தார். அவரின் உருது மொழித் திறமை, ஹைதர் அலியை வியப்பில் ஆழ்த்தியது. அவர் நாச்சியார் கேட்ட, 5,000 காலாட்படை வீரர்கள், 5,000 குதிரைப்படை வீரர்களைக் கொடுத்தார்.
வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்கச் சொல்லி ஆங்கிலேயர்கள் சிலரைப் பிடித்து துன்புறுத்தினர். அவர்களில் உடையாள் என்ற பெண்ணும் அடக்கம். அவர் கடைசி வரை அரசியை காட்டிக்கொடுக்காது உயிர்த்தியாகம் செய்தார். அந்தப் பெண்ணின் நினைவாக, பெண்கள் படையை ஆரம்பித்து, அதற்கு உடையாள் பெயரை வைத்தார் வேலுநாச்சியார்.
நாட்டை மீட்டெடுக்க, படைகளை தானே முன்னின்று நடத்தினார். ஹைதர் அலி கொடுத்த படையோடும் சின்ன மருது, பெரிய மருது இருவரின் துணையோடும் முதலில் காளையார் கோயிலை மீட்டார்.
அடுத்த இலக்கு அரண்மனை. அதற்கு உள்ளேயும், வெளியேயும் ஆங்கிலேயர், அவர்களுக்குத் துணை நின்ற ஆற்காட்டு நவாப் ஆட்கள் இருந்தனர். குயிலி என்ற பெண்ணை அரண்மனைக்குள் தந்திரமாக அனுப்பிய நாச்சியார், ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கிற்கு முதலில் தீ வைத்தார்.
பின்னர் படைகளோடு உள்ளே புகுந்தவர், ஆங்கிலேயரிடம் இருந்த தன்னுடைய நாட்டையும், அரண்மனையையும் 1780-ல் மீட்டெடுத்தார். கணவர் இறந்தபோதும் கலங்காமல், எட்டு ஆண்டுகளாக நாட்டிற்கு வெளியே காத்திருந்து, ஆங்கிலேயரை தந்திரமாக வீழ்த்திய வேலுநாச்சியாரின் வீரமும், விவேகமும் இன்றும் போற்றப்படுகின்றன.
அதற்கு அடையாளமாக, 2008-ல் மத்திய அரசு, தபால் தலையை வெளியிட்டது.
