PUBLISHED ON : ஆக 08, 2016

தேவையான பொருட்கள்: மாடலிங் பலூன், காற்றடைக்கும் சிறிய பம்ப், ஸ்டிக்கர் பொட்டு, ரிப்பன்
கற்களில் சிற்பங்களும் களிமண்ணில் உருவங்களும் செய்வது சிறந்த கைவினைக் கலை. அதுபோல, பலூன்களை முறுக்கி பொம்மை செய்யும் கலையும் இருக்கிறது. ஆங்கிலத்தில் 'பலூன் மாடலிங்' என்று பெயர். இன்று நாம், நீளமான பலூனில் அழகிய நாய்க்குட்டி செய்யப்போகிறோம்!
பம்ப்பைப் பயன்படுத்தி பலூனில் காற்றடைக்க வேண்டும். முழுவதும் ஊதாமல், மறுமுனையில் 4 செ.மீ. நீளத்தை விட்டுவிட்டு, பலூனை முடிச்சுப்போட வேண்டும். குழாய் மாதிரி இருக்கும் இந்தப் பலூனை எப்படி வேண்டுமானாலும் முறுக்கலாம்.
முடிச்சுப் பகுதியில் இருந்து 6 செ.மீ. இடைவெளியில் பலூனை முறுக்கி ஒரு சிறிய பிரிவை உருவாக்கவும். இந்தப் பகுதி நாய்க்குட்டியின் தலை.
தலைப்பகுதியில் இருந்து 12 செ.மீ. இடைவெளி விட்டு பலூனை முறுக்கி, வளைத்து தலைப்பகுதியுடன் இணைத்து முறுக்கிவிடவும். இதுதான் காது. இதே முறையில் மீண்டும் ஒரு பிரிவை செய்து தலைப்பகுதியுடன் இணைத்துவிடுங்கள். இரண்டு காதுகளுடன் தலைப்பகுதி தயாராகிவிடும்.
அடுத்து 5 செ.மீ., 9 செ.மீ., 9 செ.மீ., இடைவெளிகளில் மூன்று பிரிவுகளை உருவாக்கவும். இதில் மூன்றாவது பிரிவை, 5. செ.மீ. நீள பிரிவுடன் சேர்த்து முறுக்கிவிட்டால் கழுத்து மற்றும் முன்னங்கால்கள் தயார்.
அடுத்து 13 செ.மீ., 9 செ.மீ., 9 செ.மீ. இடைவெளிகளில் மீண்டும் மூன்று பிரிவுகளை உருவாக்கவும். இதில் மூன்றாவது பிரிவை, 13 செ.மீ. நீள பிரிவோடு இணைத்து முறுக்கிவிட்டால் உடற்பகுதி மற்றும் பின்னங்கால்களும் தயாராகிவிடும். பலூனின் எஞ்சிய பகுதிதான் நாய்குட்டியின் வால்.
ஸ்டிக்கர் பொட்டுகளை ஒட்டிவிட்டால் கண்களும் தயார். கழுத்தில் ரிப்பனையும் கட்டிவிடுங்கள்.
நம்மைக் கடிக்காத இந்த நாய்க்குட்டியைக் கூட அழைத்துச் சென்று விளையாட வேண்டியதுதான்!
- ஓவியா டீச்சர்
