தடை செய் - பப்ஜிக்கு எதிராகப் பதினோரு வயதுச் சிறுவன்!
தடை செய் - பப்ஜிக்கு எதிராகப் பதினோரு வயதுச் சிறுவன்!
PUBLISHED ON : பிப் 25, 2019

இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவி சாதனைபடைத்த முட்டைப் படத்தைவிட, புகழ்பெற்றது எது? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பப்ஜி விளையாட்டுதான். இதுவரை, உலகம் முழுவதும் 200 கோடிப் பேரால் பப்ஜி, டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. அறியப்படாதோரின் போர்க்களம் (Player's Unknown Battle Ground) என்பதன் சுருக்கமே பப்ஜி (PUBG).
அறிமுகமில்லாத பலரும் கூட்டாகச் சேர்ந்து, திட்டம் வகுத்து, எதிர் அணியிருடன் போரிட வேண்டும்; இதுதான், விளையாட்டின் சாராம்சம். அட்டகாசமான கிராஃபிக்ஸ், அழகிய தீவு, அதிநவீன ஆயுதங்கள், உடைகள், உயிர்காக்க உதவும் ஐடியாக்கள் என உருவாக்கப்பட்டு, இளைஞர்களைக் கவர்ந்து வருகிறது பப்ஜி. இவ்வளவு புகழ்பெற்ற பப்ஜி விளையாட்டைத் தடை செய்யக்கோரி போராடி வருகிறான் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அஹத் நிஜாம் என்ற 11 வயதுச் சிறுவன்.
இந்திய ஆன்லைன் விளையாட்டுச் சூழலே பப்ஜிக்கு அடிமையாகிய நிலையில், சிறுவனின் எதிர்ப்புக்குக் காரணம் என்ன? மும்பை உயர் நீதிமன்றத்தில், நிஜாம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “பப்ஜி விளையாட்டை நானும் தொடர்ந்து விளையாடினேன். சில நாட்களில் எனக்குள் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எதிர்மறையான சிந்தனைகளும், இனம்புரியாத கவலையும் மனத்தை ஆட்கொண்டன. இதனால்தான் பப்ஜி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும் என்று அரசைக் கோருகிறேன். பப்ஜி, இளைஞர்களிடையே, மாணவர்களிடையே, வன்முறையையும், கோபத்தையும் விதைக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளான்.
தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் நிஜாம் இதுதொடர்பாக, மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸுக்கும், கல்வி அமைச்சர், உள்துறை அமைச்சர், மாநகர காவல் ஆணையர் என்று பல்வேறு அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளான். அதுமட்டுமல்லாமல், மைக்ரோசாஃப்டுக்கும், இந்திய மருத்துவக் கௌன்சிலுக்கும் பப்ஜியை தடைசெய்யக்கோரி மனு அனுப்பியுள்ளான் நிஜாம். கடந்த டிசம்பர் மாதம், தமிழகத்தின் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, தம் வளாகத்தில் பப்ஜியைத் தடைசெய்தது. அதேபோல், மாணவர்களின் சிந்தனைக்குக் கேடாக இருப்பதாகச் சொல்லி, பப்ஜி விளையாட்டை குஜராத் மாநில அரசும் ஜனவரியில் தடைசெய்தது. தற்போது, மகாராஷ்டிர மாநிலத்திலும் தடைசெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறுவன் நிஜாம் கூறுகையில், “என்னுடைய குடும்ப நிகழ்ச்சி ஒன்றில்தான், பப்ஜியை நண்பர்கள் அறிமுகப்படுத்தினார்கள். விளையாட்டுப் பிடித்துப் போகவே, தொடர்ந்து விளையாடினேன். ஆனால், விளையாட்டின் தாக்கம் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. உடனே அதை நிறுத்திவிட்டேன். பப்ஜி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில், இவ்விளையாட்டால் மனநலப் பிரச்னை ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. மாணவர்களும், இளைஞர்களுமே இதை அதிகமாக விளையாடுகின்றனர். வன்முறை உளவியலை வளர்க்கும் பப்ஜி, இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. மத்திய அரசு, ஆன்லைன் எத்திக்ஸ் கமிட்டி அமைக்க வேண்டும். அதன்மூலம், பப்ஜி மட்டுமல்ல, வன்முறையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகளையும், உள்ளடக்கங்களையும் அவ்வப்போது நீக்க வேண்டும். பப்ஜி மோசமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை ஆழமாக நம்புகிறேன். அதனால்தான், பப்ஜியை உருவாக்கிய நிறுவனத்தின் தலைவர்களான பிரண்டன் கிரீன் மற்றும் ஜாங் ஹான் கிம்முக்கும், அதைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரி கடிதம் எழுதினேன். என் கோரிக்கையை விசாரித்து, தலைமை நீதிபதி என்.எச். பாட்டில், நல்ல தீர்ப்பை வழங்குவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.” என்கிறான் அஹத் நிஜாம்.
