PUBLISHED ON : பிப் 25, 2019

மனிதர்களுக்கு உதவுவனற்றில் முதன்மையானவை, மரங்கள். நாம் அதற்கு மரியாதை அளிக்க வேண்டாமா? இன்று நகரங்களில் உள்ள மரங்கள் எல்லாம் விளம்பரம் செய்யும் இடங்களாக மாறிவிட்டன. இந்த நிலையை மாற்ற வேண்டும்” என்று பேசத் தொடங்குகிறார் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே புறநகர்ப் பகுதியான பிம்ப்ரி சின்ச்வாடைச் சேர்ந்த மாதவ். இவர், 6,000 மரங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆணிகளை அகற்றியுள்ளார்.
இதுதொடர்பாக மாதவ் கூறுகையில், “நாங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்று 1 மாதம் தங்கிவிட்டு, வீட்டுக்குத் திரும்பினோம். என் மகள், “நாம் மரத்தைக் கொன்றுவிட்டோம். மரத்தைக் கொன்றுவிட்டோம்.” என்று கத்தினாள். வீட்டில் வளர்த்த செடி, தண்ணீரில்லாமல் கருகிவிட்டிருந்தது. ஆறு வயது மகளுக்கு உள்ள இந்த அக்கறை, நமக்கு ஏன் இல்லை என்று சிந்தித்தேன். என் மகள் ஹிரினாக்காவை போலத்தான், நாம் நம் பகுதியிலுள்ள மரங்களை அக்கறையுடன் பார்க்கிறோமா? என்று கேள்வி கேட்டுக் கொண்டேன்.
மரங்களில் விளம்பரப் பலகைகளைத் தொங்கவிடுவதற்காக அடிக்கப்படும் ஆணிகளை அப்புறப்படுத்த முடிவெடுத்தேன். முதலில் செயலாற்றத் தயக்கமாக இருந்தது. ஆனால், என் முயற்சியைப் பற்றி கேள்விப்பட்டு, என்னுடன் பலரும் இணைந்து கொண்டார்கள். பல வெளிமாநிலத்தவர்கள், தங்கள் பகுதியிலும் இதே போன்ற செயற்பாடுகளில் களமிறங்கினர். அப்படி உருவானதுதான், 'ஆணிகள் இல்லா மரங்கள்' இயக்கம். நாங்கள் அரசின் உதவியை நாடாமல், எங்களால் இயன்ற அளவுக்குத் தன்னார்வத்துடன் இயங்கி வருகிறோம். இப்போது, இராஜஸ்தான், பீகார், தமிழகம் ஆகிய மாநிலங்களில் செயற்படும் 'ஆணிகளில்லா மரங்கள்' குழுமத்தில் 500 தன்னார்வலர்கள் உள்ளனர்' என்றார்.
