PUBLISHED ON : பிப் 25, 2019

அந்தப் புகைவண்டி திருச்சியிலிருந்து ஈரோட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு தமிழறிஞர் அமர்ந்திருந்தார்.
வண்டி கிளம்பிய சிறிது நேரத்துக்குப்பிறகு, ஓர் இளைஞர் அந்தத் தமிழறிஞரை நெருங்கி வணங்கினார். ''ஐயா, தங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்'' என்றார்.
''கேளுங்கள்'' என்றார் தமிழறிஞர்.
''ஐயா, தாங்கள் ஒரு விருந்துக்குச் செல்கிறீர்கள். அங்கு வடையும் பாயசமும் சோறும் குழம்பும் பரிமாறுகிறார்கள். அப்போது, அந்த விருந்தை வழங்குபவர் தங்களை எப்படி உபசரிப்பார்?''
''வடை சாப்பிடுங்கள், பாயசம் சாப்பிடுங்கள், சோறு சாப்பிடுங்கள்'' என்றுதான் உபசரிப்பார்.''
''சாப்பிட்டு முடித்தபிறகு, அவர் உங்களுக்கு வெற்றிலை, பாக்கைத் தருகிறார். அப்போது அவர் என்ன சொல்வார்?''
''வெற்றிலை, பாக்கு போட்டுக் கொள்ளுங்கள்'' என்று சொல்வார்.
''அது ஏன் ஐயா? மற்ற உணவுப் பொருட்களையெல்லாம் சாப்பிடுங்கள் என்று சொல்கிறோம். ஆனால், வெற்றிலை, பாக்கை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள் என்கிறோம். போட்டுக் கொள்வதற்கு அது என்ன சட்டையா, மாலையா? வெற்றிலை, பாக்கு சாப்பிடுங்கள் என்று ஏன் சொல்வதில்லை?''
இந்தக் கேள்வியைக் கேட்ட மற்றவர்கள், திகைத்தார்கள்; ஆனால், அந்தத் தமிழறிஞர் உடனே அதற்குப் பதிலளிக்கத் தொடங்கினார்.
''போட்டுக் கொள்ளுங்கள் என்ற சொல், நமக்கு அலங்காரமாக அமையும் பொருட்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, சட்டை போட்டுக் கொள்ளுங்கள், மாலை போட்டுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறோம். இல்லையா?''
''ஆமாம் ஐயா!'' என்றார் அந்த இளைஞர்.
''வெற்றிலை, பாக்கு என்பது பசியைத் தீர்க்கிற பொருளில்லை. வயிறு நிறையச் சாப்பிட்ட பிறகுதான் நாம் அதைத் தொடுகிறோம். எனவே, அது உணவில்லை, வாய்க்கு அலங்காரம்'' என்று விளக்கினார் அவர்.
''ஆக, பசியோடிருக்கும்போது, பசியை ஆற்றுகின்ற உணவுப் பொருட்களையெல்லாம் சாப்பிடுகிறோம். பசி தீர்ந்த பின்னர், வாய்க்கு அலங்காரமாக வெற்றிலை, பாக்கைப் போட்டுக் கொள்கிறோம். சரிதானே?''
''அருமை ஐயா''என்று நெகிழ்ந்தார் அந்த இளைஞர்.
தமிழறிஞர் புன்னகை செய்தார். ''நம் பெரியவர்களுடைய பேச்சில் இப்படிப் பல நுட்பங்கள் இருக்கின்றன. நீங்கள் கேட்ட கேள்வியால் அதை ஆராய்வதற்கு ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தது, மகிழ்ச்சி'' என்றார், தமிழறிஞர். தன் பதிலால் எல்லோரையும் வியக்கவைத்த அந்தத் தமிழறிஞர் யார் தெரியுமா? புகழ்பெற்ற சொற்பொழிவாளரும், சிறந்த எழுத்தாளருமான, திருமுருக கிருபானந்த வாரியார்.
- என். சொக்கன்
