PUBLISHED ON : ஜூலை 30, 2018

ஹென்றி ஃபோர்டு
30.7.1863 - 7.4.1947
மிச்சிகன், அமெரிக்கா.
வீட்டின் பின்புறம் இருந்த செங்கல் கூடாரத்தில் உதிரி பாகங்கள், பழைய உலோகங்களைக் கொண்டு ஒரு வாகனத்தை உருவாக்கினார். மணிக்கு 10 மைல், 20 மைல் வேகம் என இரண்டு நிலைகளில் ஓடக்கூடிய வார்ப் பட்டைகளை அதில் பொருத்தினார். முழுவதும் தயாரான அந்த வாகனத்தை ஓட்ட நினைத்தபோது, கூடாரத்தின் வாசல் குறுகலாக இருந்தது. உடனே அதை இடித்துத் தள்ளி, தான் உருவாக்கிய பெட்ரோல் வாகனத்தில் பயணம் போனார் ஹென்றி ஃபோர்டு. பிரேக் இல்லாமலும் பின்னோக்கிச் செலுத்த முடியாமலும் இருந்த அந்த வாகனத்தின் பெயர், 'குவாட்ரிசைக்கிள்' (quadricycle).
பதினைந்து வயதில் அவருடைய தந்தை பரிசளித்த பாக்கெட் கடிகாரத்தை பிரித்துச் சேர்த்ததில் இருந்து அவரது பொறியியல் பயணம் தொடங்கியது. பழகுவதற்காகவே பக்கத்து வீட்டுக் கடிகாரங்களையும் பழுது பார்த்துத் தந்தார். தந்தையுடன் பண்ணை வேலையில் ஈடுபடுவது பிடிக்காமல், டெட்ராய்ட் நகரில் ஒரு தொழிற்சாலையில் பயிற்சிப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களிலேயே அங்கிருந்து வெளியேறினாலும், இயந்திரங்கள் மீதிருந்த ஆர்வத்தை விடவில்லை.
நீராவி இயந்திரங்களை இயக்குவதிலும் கழற்றிப் பழுது பார்ப்பதிலும் நேரத்தைச் செலவிட்டார்.
ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கும் நீராவி பம்பைப் பார்த்து, அதை வாகனங்களில் பொருத்தி வெற்றி பெற்றார். 1903இல் ஃபோர்டு மோட்டார் கம்பெனியை நிறுவி, கார்களை ஒருங்கு சேர்ப்பு (Assembly line) முறையில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை நிரூபித்தார்.
மிகப் பெரிய தொழிலதிபராக உயர்ந்து, 'ஃபோர்டு பெளண்டேஷன்' மூலம் பல உதவிகள் செய்தார்.
இயந்திர உலகில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்து, எல்லா தரப்பு மக்களையும் கார் சென்றடைய வேண்டும் என நினைத்த ஃபோர்டு வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
