PUBLISHED ON : ஜூலை 30, 2018

மாணவர்களின் கற்றல் திறன் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில மாணவர்கள் ஒரே முறையில் படித்துப் புரிந்துகொள்வதை, வேறு சில மாணவர்கள் கடின முயற்சி செய்த பிறகே புரிந்துகொள்கிறார்கள். எளிதில் கற்க இயலாத மாணவர்களை எப்படி ஊக்குவிப்பீர்கள் என்று காஞ்சிபுரம், ஓரிக்கை, பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம். தங்களின் நண்பர்கள், சரியாகப் படிக்க முடியாதபோது, எப்படி உதவுகிறோம் என்ற தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
ஜா.கீர்த்தனா, 7ஆம் வகுப்பு
பெரிய பாடங்களா, இருந்தா ஒண்ணா சேர்ந்து படிப்போம். அதனால எல்லோரும் புரிஞ்சுக்க முடியும். சந்தேகங்கள் இருந்தா, ஒருத்தரை ஒருத்தர் கேட்டுத் தெரிஞ்சுக்குவோம். இதனால எங்களுக்குப் படிக்கிறது எளிதா இருக்கு.
இரா.ஹரிபிரியா, 8ஆம் வகுப்பு
ஒவ்வொருத்தருக்கும் சில பாடம் மட்டும் கடினமாக இருக்கும். எனக்கு அறிவியல் நல்லா வரும். ஆனா கணக்குப் பாடம் சீக்கிரத்துல புரியாது. அறிவியல் பாடத்தைப் படிக்க முடியாதவங்களுக்கு நான் சொல்லித் தருவேன். அதேபோல கணக்கு நல்லா தெரிஞ்சவங்க எனக்குச் சொல்லித் தருவாங்க.
ஹே.கோபிகா, 9ஆம் வகுப்பு
எல்லோருக்கும் எல்லாப் பாடமும் எளிதா இருக்கிறதில்ல. வீட்ல ஒண்ணா சேர்ந்து படிப்போம். அப்போ, ஒருத்தருக்கொருத்தர் புரியாத பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக்குவோம். இப்படி நண்பர்களுக்குச் சொல்லிக் கொடுக்கறதால எங்களுக்கும் இன்னும் நல்லா புரிஞ்சு, மனப்பாடமாக ஆகிடுது.
சா.மனோஜ்குமார், 7ஆம் வகுப்பு
சரியா படிக்க முடியாத மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன். எனக்கு சந்தேகம் இருந்தாலும் நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். பாடங்களில் உள்ள சந்தேகங்களை குறிப்பெடுத்து வெச்சுக்கிட்டு, ஒண்ணா சேர்ந்து படிக்கறப்போ கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். அதேபோல நண்பர்களுக்கு உள்ள சந்தேகங்களையும் கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க.
பா.கமலேஷ், 8ஆம் வகுப்பு
எளிதா படிக்க முடியாத சில மாணவர்களுக்கு பாடத்தைப் புரியறதுபோல சொல்லித் தருவேன். தனியா படிக்கறதைவிட ஒண்ணா சேர்ந்து படிக்கறப்ப சந்தேகங்களைத் தீர்த்துக்க முடியும். இதனால நல்லா மனப்பாடம் ஆகும். எங்களுக்கு கடினமா இருக்கற பாடங்களை டீச்சர் கிட்ட கேட்டு, அதை நண்பர்களுக்கு சொல்லித் தருவேன்.
சின்னி பாலாஜி, 9ஆம் வகுப்பு
நான் கிளாஸ் லீடரா இருக்கறதால, யாரெல்லாம் மெதுவா படிக்கிறவங்கன்னு தெரியும். மாணவர்களை குரூப் பிரிக்கும்போது, நல்லா படிக்கறவங்களோட சேர்ந்து அவங்களை படிக்கச் செய்வேன். பாடம் கடினமா இருக்குன்னு நினைக்கறவங்களுக்கு, திரும்பத்திரும்ப எழுதிப் பார்க்கச் சொல்வேன். இதனால அவங்களுக்குப் பாடம் நல்லா புரியும்.
