PUBLISHED ON : ஏப் 11, 2016

நம்மை யாராவது தாக்க வந்தால் அல்லது ஏதேனும் மிருகம் துரத்தி வந்தால் நாம் தப்பிக்க முயற்சி செய்வோம் அல்லவா? நம்மைப் போலவே விலங்குகளும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள சில உத்திகளைப் பயன்படுத்துகின்றன. இந்த உத்திகள் ஆச்சரியமாகவும், சுவாரசியமாகவும் உள்ளன.
கரையான்: கரையான்கள் உருவாக்கும் புற்றின் சுவர்கள் கடப்பாரையைக் கொண்டு தகர்க்க முடியாத அளவு பருமனும் வலிமையும் உடையது.
சிலந்தி: சிலந்திகள் தங்கள் வலைகளில் அறியாமல் நுழைந்துவிடும் பிற பூச்சி இனங்களுக்கு என்று தனியாக ஒரு பகுதி அமைத்து, அவற்றை அதில் சிறைப்படுத்தி விடுகின்றன.
குளவி: குளவி (வாஸ்ப் - Wasp) தன் கொடுக்குகளால் கொட்டித் தம்மைத் தாக்க வருவோர் மீது நச்சுத் திரவத்தைத் தெளித்துத் தன்னைக் காத்துக் கொள்கிறது.
தூக்கணாங்குருவிகள்: தூக்கணாங்குருவிகளின் முக்கிய எதிரி பாம்பு. இவற்றின் முட்டைகளைப் பாம்பு தின்றுவிடும். இதற்காக இவை பாம்பு நுழைய முடியாத அளவுக்கு நெருக்கமான இழைகளால் தங்கள் கூடுகளின் வாசலை அமைத்துக் கொள்கின்றன.
தேனீ: தேனீக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பிரத்யேக பாதுகாப்பு முறையைக் கையாளுகின்றன. தேன்கூட்டைப் பாதுகாப்பதற்கு என இருக்கும் தேனீக்கள், தேன்கூட்டின் மேல் பகுதியில் இருந்துகொண்டு, தங்களது கூட்டில் உள்ள தேனீக்களைத் தவிர பிற பூச்சியினங்கள் எவற்றையும் உள்ளே அனுமதிப்பதில்லை.
நீர் எலி (பீவர் - Beaver): இது தனது வசிப்பிடத்தைத் தண்ணீருக்கு அடியில் அமைத்துக்கொள்கிறது. அந்த இடத்தை அடைய வேண்டுமெனில், 'பீவர்'களுக்கு மட்டும் தெரிந்த ரகசியமான சுரங்கம் வழியாக மாத்திரமே போக வேண்டும். சுரங்கத்தின் கடைசிப் பகுதியில் அவை குடியிருக்கும்.
முள்ளம்பன்றி: முள்ளம்பன்றி உடலில் நீண்ட முட்கள் காணப்படும். இவை உடலை அசைத்தால் முட்களில் இருந்து ஒலி ஏற்படும். இந்த ஒலி எதிரிகளை எச்சரிக்க உதவுகிறது. முள்ளம்பன்றிகள் பின்னோக்கிச் சென்று எதிரியைத் தன் முட்களால் தாக்கும்.
மான்கள்: மான்கள் நின்று கொண்டும், படுத்த நிலையிலும் உறங்கும். சில வகை மான்கள், தூங்கும்போது சுவாசத்தின் மூலமே எதிரிகள் நெருங்குவதை அறிந்துகொள்ளும்.
